மானாவாரியா விக்குது பான் மசாலா... மாமூல் போகுது ஸ்பெஷலா!| Dinamalar

மானாவாரியா விக்குது பான் மசாலா... மாமூல் போகுது ஸ்பெஷலா!

Added : ஆக 02, 2014
Share
அவிநாசி சாலையில், மித்ராவின் வண்டி மெதுவாகச் சென்று கொண்டிருக்க, பின்னால் உட்கார்ந்தபடி, கோவையின் ரம்மியமான காலநிலையை மெச்சிக் கொண்டிருந்தாள் சித்ரா. லட்சுமி மில் சிக்னலில் காத்திருக்கும்போது, அருகில் வந்து நின்ற ஒரு டூவீலர்க்காரர், ரோட்டிலே 'புளிச்' என்று பான் மசால் எச்சிலைத் துப்பி விட்டு, நிற்காமல் சந்து பொந்துக்குள் புகுந்து முன்னால் போய் நின்றார்.''அறிவு
மானாவாரியா விக்குது பான் மசாலா... மாமூல் போகுது ஸ்பெஷலா!

அவிநாசி சாலையில், மித்ராவின் வண்டி மெதுவாகச் சென்று கொண்டிருக்க, பின்னால் உட்கார்ந்தபடி, கோவையின் ரம்மியமான காலநிலையை மெச்சிக் கொண்டிருந்தாள் சித்ரா. லட்சுமி மில் சிக்னலில் காத்திருக்கும்போது, அருகில் வந்து நின்ற ஒரு டூவீலர்க்காரர், ரோட்டிலே 'புளிச்' என்று பான் மசால் எச்சிலைத் துப்பி விட்டு, நிற்காமல் சந்து பொந்துக்குள் புகுந்து முன்னால் போய் நின்றார்.
''அறிவு கெட்ட...அவனை...!'' என்று வண்டியை மித்ரா முறுக்க, ''ஏய் விடுடி! ஒருத்தன்கூட, சண்டை போட்டா சரியாயிடுமா? பாக்கைப்போட்டு, ரோட்டுல துப்புறவங்களைக் கண்டாலே, அலர்ஜியா இருக்கு. இவனுக...எப்பத்தான் திருந்துவானுகளோ?,'' என்று அமைதிப்படுத்தினாள் சித்ரா.
அதற்குள் 'சிக்னல்' விழ, அந்த வண்டிக்காரர் பறந்து விட்டார். பிடிக்க முடியாத கோபத்தில், வண்டியை வேகமாக முறுக்கியபடி, ஆத்திரத்தோடு பேசினாள் மித்ரா.
''கவர்மென்ட் ஆஅN பண்ண பிறகும், இவனுகளுக்கு மட்டும், எப்படித்தான் இந்த 'பான்' அயிட்டங்கள் கிடைக்குதுன்னு தெரியலை,''
''அதை ஏன் கேக்குற? அதுலதான், போலீசு, ஃபுட் கன்ட்ரோல் டிபார்ட்மென்ட் எல்லாத்துக்கும், 'மாமூல்' கொட்டுதுங்கிறாங்க. அதனாலதான், மூணு ரூபாய்க்கு விக்கிற பாக்கெட்டை 30 ரூபாய்க்கு விக்கிறாங்க. அதுலயும், ஒரு குறிப்பிட்ட ஸ்டேட்காரங்கதான், இந்த பிஸினஸ்சை தைரியமா பண்றாங்க. அவுங்க ஆளுங்களே இதுக்கு அடிமையாத்தான் இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''நீ சொல்றது கரெக்ட்தான்க்கா! நாடு முழுக்க இருக்கிற ஒரு நார்த் இண்டியாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடைக்காரங்க குடும்பத்துல பல பேரு, இதுக்கு அடிமையா இருக்காங்க. கோயம்புத்தூர்ல இருக்கிற அந்த குடும்பத்துக்காரங்கள்ல மட்டும், 7 பேரு இதுவரைக்கும் 'கேன்சர்'ல செத்திருக்காங்களாம். பல பேரு, ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்காங்களாம். ஆனாலும், யாரும் திருந்துற மாதிரி தெரியலை,''
''தப்பை தைரியமா செய்யுறதாலதான், 'தடை செய்யப்பட்ட பான் மசால் பாக்கெட்களை என்னோட குடோன்ல இருந்து கடத்திட்டாங்க'ன்னு, அவுங்களால போலீஸ்ட்ட கம்பிளைன்ட் பண்ண முடியுது!. இந்த விஷயத்துல, இவுங்களுக்கு நார்த் இண்டியன் ஆபீசர்ஸ் 'சப்போர்ட்' பண்றதா, ஒரு பேச்சு இருக்கு. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியலை!,''
'போலீஸ் சப்போர்ட் இல்லாம, எந்தத் தப்பையும் தொடர்ச்சியா பண்ண முடியாது; சிட்டிக்குள்ள டூவீலர்ஸ் திருடுறகும்பலோட ஒரு போலீஸ்காரர், திருட்டு வச்சிருக்கிறதா சொன்னனே...அவரைப் பத்தி, இன்னும் ஏகப்பட்ட கதை சொல்றாங்க மத்த போலீஸ்காரங்க. இந்த மாதிரி 'இல்லீகல்' பார்ட்டிக தொடர்புலயே, அவரு எக்கச்சக்கமா சம்பாதிச்சிருக்காராம்,'' என்றாள் மித்ரா.
''இப்பேர்ப்பட்ட ஆளுங்களை வச்சிருக்கிறதுக்கு, இந்த டிபார்ட்மென்ட் 'மாதவம்' பண்ணிருக்கணும்னு சொல்லு. ஏன் இவுங்க மேல எல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறாங்க?,'' சீறினாள் சித்ரா.
''எல்லா இடத்துலயும்தான், ஒண்ணு ரெண்டு பேரு, தப்பான ஆளுங்க இருக்காங்க...அதைப் பத்தியே ஏன் பேசுற...இதே கோயம்புத்தூர் போலீஸ்தான், நகைகளை 'அபேஸ்' பண்ற போலி டாக்டரை, எவ்ளோ 'இன்டலிஜென்டா' ஒர்க் பண்ணி, நாசிக்ல போய் பிடிச்சிருக்காங்க பார்த்தியா..?,''
''ஆமாடி! நிஜமாவே 'கிரேட்'தான்...மொபைல் போன் கூட வச்சிக்காம, பொய்யான பேருகள்ல 'ஃபிளைட்'லயே பறந்து பறந்து கொள்ளையடிச்சவனை என்ன அழகா தூக்கிருக்காங்க? அந்த 'டீம்'க்கு, ஒரு 'ரியல் சல்யூட்' அடிக்கணும் மித்து!,''
''கரெக்ட்தான்க்கா! அந்த ஆளைஎப்பிடி துல்லியமா கண்டு பிடிச்சு,தூக்குனாங்கன்னு கேட்டு, கர்நாடகா, மகாராஷ்டிரா போலீஸ் எல்லாம் மெரண்டுட்டாங்களாம்!,''
''போலீஸ் புராணத்தை விடு...கார்ப்பரேஷன்ல இருந்த ஒரு நல்ல ஆபீசரை மாத்திட்டாங்க...கேள்விப்பட்டியா?,''
''டெபுடி கமிஷனர் சிவராசுவைச் சொல்றியா? எனக்குத் தெரிய, கார்ப்பரேஷன்ல 'ஒர்க்' பண்ண ஈஇக்கள்ல, உண்மையிலேயே அவரு நல்ல ஆபீசர்தான். கை சுத்தம்னு பேரு வாங்குனதோட, கார்ப்பரேஷன் ரெவின்யூவைக் கூட்டுனதுல, அவரோட பங்கு ரொம்பப்பெருசு. நம்ம கமிஷனர் மேடமும், அவரைப் பத்தி தெரிஞ்சுட்டு, நல்லாவே சுதந்திரம் கொடுத்திருந்தாங்க. இனிமே, அவுங்க வேலை கொஞ்சம் அதிகமாகும்னு நினைக்கிறேன்,'' என்றாள் சித்ரா.
''அக்கா! டிஎம்கே கவர்மென்ட் இருந்தப்போ, இங்க 'பவர்ஃபுல்'லா இருந்த அமைச்சரோட பி.ஏ.,வா இருந்த ஒருத்தர்தான், நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற பெரும்பாலான டவுன் பஞ்சாயத்துகள்ல, 'கான்ட்ராக்ட் லேபர்'களை நியமிக்கிறதுக்கு, எட்டு வருஷத்துக்கு முன்னாடி, 'கான்ட்ராக்ட்' எடுத்திருக்காரு. இன்னைக்கு வரைக்கும், அவர்ட்டதான் அந்த கான்ட்ராக்ட் இருக்கு. இதுல விசேஷம் என்னன்னா, ஆட்களை நியமிக்காமலே, 'பில்' மட்டும் போட்டுக்கிறாங்களாம்,'' என்று மேட்டரை மாற்றினாள் மித்ரா.
''அடேங்கப்பா! எல்லா டவுன்பஞ்சாயத்துலயும் சேர்த்து எவ்ளோஅடிச்சிருப்பாங்க?,''
''இ.ஓ.,க்களும், இவரும் சேர்ந்து, 8 வருஷத்துல, 40 கோடி ரூபா அடிச்சிருப்பாங்கன்னு, குத்து மதிப்பா ஒரு கணக்கு சொல்றாங்க. நியாயமா விசாரிச்சா, கரெக்டா கண்டு பிடிச்சிடலாம். ஆனா, அது நடக்கணுமே!,''
''டவுன் பஞ்சாயத்து இ.ஓ.,க்கள்தான், வானளாவிய அதிகாரம் படைச்சவங்களாச்சே...இப்போ நம்ம கார்ப்பரேஷன்ல இருக்கிற டவுன் பஞ்சாயத்துகள்ல, இதுக்கு முன்னாடி நடந்த அக்கிரமமெல்லாம் இப்பதான் தெரியவருது!,'' என்றாள் சித்ரா.
''அப்பிடி என்னக்கா கண்டு பிடிச்சாங்க?,'' ஆர்வமாய்க் கேட்டாள் மித்து.
''வடவள்ளியில, பல கோடி ரூபா மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்'களை வித்திருக்காங்க. காளப்பட்டியில, இஷ்டத்துக்கு குடிநீர் கனெக்ஷன் திருட்டுத்தனமா கொடுத்திருக்காங்க. இப்ப வரைக்கும் ஆய்வு பண்ணதுல, 5,480 கனெக்ஷன், கணக்குல வராம இருக்காம்,''
''நீ கனெக்ஷன்னு சொன்னதும், 'பட்'ன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு... ஒண்டிப்புதூர்ல, ஒரு புரமோட்டர் சார்புல 400 வீடுகள் கொண்ட 'குரூப் ஹவுஸ்' கட்றாங்களாம். அங்க புதுசா டிரான்ஸ்பார்மர் போட்டு, இ.பி.,கனெக்ஷன் கொடுக்கிறதுக்கு, வீட்டுக்கு 20 ஆயிரம் ரூபா கணக்குப் போட்டு, லஞ்சம் கேட்டாங்களாம். ஏதோ 'கம்பிளைன்ட்' போயி, பேரம் இப்போதைக்கு நிக்குதாம்,'' என்றாள் மித்ரா.
''நாலஞ்சு வருஷத்துல, கோயம்புத்தூர் சிட்டிக்குள்ள 'கமர்ஷியல் பில்டிங்'குகளுக்கு, இ.பி., கனெக்ஷன் கொடுத்ததுல, கை மாறுன பணம் எவ்வளவுன்னு ஒரு 'ஸ்பெஷல் என்கொயரி' போட்டாங்கன்னா, அரசியல் ஊழலெல்லாம் அப்பால போயிரும்,'' என்றாள் சித்ரா.
''ஹவுசிங் போர்டுலயும், வாடகை வீடுகள்ல யார் யாரு இருக்கான்னு ஒரு 'சர்வே' பண்ணிட்டு இருக்காங்க. சமூக சேவகர்ங்கிற பேர்ல, அரசியல்வாதிங்க ஒதுக்கீடு வாங்குன பல வீடுகள்ல, அவுங்க யாருமே இல்லை. பல வீடுகளுக்கு வருஷக்கணக்கா வாடகை கட்டலையாம். சில வீடுகளை உள் வாடகைக்கு விட்ருக்காங்க. அவுங்களை எல்லாம் காலி பண்ணுனா, பல பேருக்கு வீடு தரலாம்னு நோட்டீஸ் கொடுத்தா, 'மினிஸ்டர்ட்ட இருந்து உங்களுக்கு போன் வரலியா'ன்னு அவுங்க மெரட்டுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''ரமணா மாதிரி 10 படம் எடுத்தாலும், பொணத்துக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து, பணம் பறிக்கிறதை நம்ம ஊரு ஆஸ்பிடல்கள்ல நிறுத்த மாட்டாங்களோ?,'' என்று, 'டிராக்' மாறினாள் சித்ரா.
''இப்போ எந்த ஆஸ்பிடல்ல அப்பிடி நடந்துச்சு?,'' என்றாள் மித்ரா.
''சிங்காநல்லூர்ல இருக்கிற ஒரு ஆஸ்பிடல்லதான். அங்கதான், ஆக்சிடென்ட் ஆகி, ட்ரீட்மென்ட்ல இருந்த ஒரு பேஷன்டை இறந்துட்டார்னு சொல்லி, ரெண்டே முக்கால் லட்ச ரூபா கட்டிட்டு, BODY எடுத்துட்டுப்போங்கன்னு சொல்லிருக்காங்க. சரி, எடுக்கலாம்னு போனா, BODY பக்கத்துலயே நிக்க முடியாத அளவுக்கு நாத்தமாம். இப்போதான் இறந்தார்ன்னா, ஏன் இப்பிடி நாறுதுன்னு கேக்கவும், 'பணம் கட்ட வேணாம்; பொணத்தை எடுத்துட்டுப் போங்க'ன்னு சொல்லிட்டாங்களாம். அவுங்க BODYய எடுத்துட்டுப்போயி, ஜி.எச்., பக்கத்துல மறியலுக்கு உக்காந்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''இது பரவாயில்ல...ரயில்வே ஸ்டேஷன்ல, பிளாட்பார்ம்ல படுத்துக் கிடக்கிறவுங்ககிட்டயிருந்து, ரத்தம் எடுக்கிற வியாபாரம், நம்ம ஊர்ல நடக்குது தெரியுமா?,'' என்றாள் சித்ரா.
''என்னக்கா சொல்ற...?'' என்று அதிர்ந்த மித்ராவை, 'கொஞ்சம் வண்டியை நிறுத்து. பணம் எடுத்துட்டு வர்றேன்' என்று, வண்டியை நிறுத்த வைத்து, கீழிறங்கி, ஸ்டேட் பாங்க்பிரதான கிளை வளாகத்திலுள்ள 'ஏடிஎம்' முன்பாக, வரிசையில் நின்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X