காசா : பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது, 28 நாட்களாக நடத்தப்பட்ட இஸ்ரேல் தாக்குதல் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 'ஹமாஸ்' பயங்கரவாதி களுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள, 72 மணி நேர சண்டை நிறுத்தம் நேற்று காலை முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, சண்டை ஓய்ந்தது. அண்டை நாடுகளான இஸ்ரேலும், பாலஸ்தீனமும், நூற்றாண்டு காலமாக மோதி வருகின்றன. கடந்த மாத துவக்கத்தில், மூன்று யூதச் சிறுவர்களை, ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றதை அடுத்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தத் துவங்கியது.காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் பல கி.மீ.,க்கு தோண்டப்பட்டிருந்த சுரங்கப் பாதைகளை அழிப்பதற்காக, கடும் ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டது. 32 சுரங்கங்கள் தகர்க்கப்பட்டதை அடுத்து, தரை வழி தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியதுடன், தன் படைகளையும் வெளியேற்றியது.
எகிப்து நாட்டின் முயற்சியால், சமரச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, 72 மணி நேர சண்டை நிறுத்தத்திற்கு, இருதரப்பினரும் முன்வந்தனர். அதையடுத்து, 28 நாட்களாக நடைபெற்ற சண்டை, நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இந்த சண்டையில், 1,900 பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். 2 லட்சம் பாலஸ்தீனியர், ஐ.நா., முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எகிப்தில் சமரச பேச்சு நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை கீழே போட வேண்டும் என இஸ்ரேலும், ஏழு ஆண்டு கால காசா தடையை, எகிப்து மற்றும் இஸ்ரேல் விலக்கிக் கொள்ள வேண்டும் என, ஹமாஸ் பயங்கரவாதிகளும் கோரி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE