ஈரோடு: பாரம்பரிய நெல் விதைகளை, விற்பனைக்கு கொண்டு வர வேண்டும், என்று விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 71.78 அடியாக உள்ளது. அணைக்கு, 6,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதோடு, நீர் இருப்பும் திருப்திகரமாக உள்ளது. வரும், 15ம் தேதி முதல் எல்.பி.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறையினரும், நீர் திறக்கலாம் என்று, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளனர். ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்துகள், மிக குறைந்த அளவில் பயன்படுத்தும், பாரம்பரிய நெல் விதைகளை, வேளாண் மையங்களில் வைக்க வேண்டும், என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.பா.ஜ., விவசாய அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது:ஐ.ஆர்.20, பவானி, பொன்னி, கோ 43, ஆடுதுறை 38 போன்ற பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் மையங்களில் விற்பனைக்கு வைக்க வேண்டும். சாணி, குப்பையை இதில் உரமாக பயன்படுத்தலாம். நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும். மருந்தை குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும். 140 நாட்கள், நீர் வினியோகிக்க வேண்டும்.ஆனால், ஏ.டி.டி., 36, ஏ.எஸ்.டி.,16, ஜெ.,13 ரக விதை நெல்லையே, அரசு சிபாரிசு செய்கிறது. இதில் நோய், பூச்சி தாக்குதல் அதிகமிருக்கும்.அதிக மருந்தால், பயிரில் உப்பு தன்மை அதிகரிக்கும். குறைவான நாட்கள் நீர் வினியோகித்தால் போதும். இவற்றில் இருந்து கிடைக்கும் வைக்கோலில், சத்து இருக்காது. இவற்றை உட்கொள்ளும் மாட்டுக்கு, சினை நிற்காது. பால் அதிகம் சுரக்காது. எனவே பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் மையங்களில் விற்க வேண்டும். விதை நெல் தரத்தின் அடிப்படையில் ஒன்று, இரண்டு என்று பிரித்து விற்கப்படுகிறது. முதல் தரம் கிலோ, 40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 30 ரூபாய்க்கும் விற்கிறது. சான்றளிக்கப்பட்ட விதை, தனியார் விற்பதை தடை செய்ய வேண்டும். இது நம்பதன்மை இல்லாதது. வெளிநாட்டில் இருந்து வருகிறது. முளைப்பு திறன் குறைந்தவை.ஒரு ஏக்கருக்கு, 40 கிலோ விதை நெல் தேவைப்படும். 20 சதவீதம் வீணாக செலவிட வேண்டி இருக்கும். விதை நெல், பூச்சி, பூஞ்சான நோய் தாக்குதல், கலப்படம், மகசூல் குறைவு போன்றவற்றால், விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படும். அரசிடம் மாதிரிகளை காட்டி, சான்று வாங்கி, அதிக விலைக்கு தனியார் வியாபாரிகள் விற்கின்றனர். அரசு விதை பண்ணையில் உருவாகும் விதை நெல், ஏக்கருக்கு, 15 முதல், 20 கிலோ வரை மட்டுமே தேவைப்படும். முளைப்பு திறனுக்கு உத்தரவாதம் உண்டு . மகசூல் அதிகம் கிடைக்கும். ஆனால், இவை இருப்பில் இல்லை என்றும், விதை நெல்லை மீண்டும் அரசுக்கே கொடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எனவே, எல்.பி.பி.,யில் நீர் திறக்க உள்ள நிலையில், தரமான விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.விதை நெல்லை விவசாயிகளிடம் இருந்து, கிலோ, 14.20 ரூபாய்க்கு வாங்கி, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விதை நெல் விற்பனையில், லாபம் பார்க்க கூடாது, என, கேட்டு கொண்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE