தஞ்சாவூர் :நர்ஸிங் கல்லூரி விடுதியில், மாணவியர் குளிப்பதை, மறைந்திருந்து பார்த்த, கல்லூரி தாளாளரை, போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையில், "ராயல் பாராமெடிக்கல்' கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், முதலாம் ஆண்டு நர்ஸிங் படித்து வரும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த, 17, வயது மாணவி, கல்லூரி தாளாளர் ராவணன், 47, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தஞ்சை தமிழ்ப்பல்கலை போலீஸில் புகார் அளித்தார்.
புகாரில் கூறியதாவது:தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும், மாணவியருக்கு பாதுகாப்பான தங்கும் விடுதி வசதி உள்ளது என்று தெரிவித்ததால், என் பெற்றோர், நாஞ்சிக்கோட்டை ராயல் பாராமெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வைத்தனர். கல்லூரி தாளாளர் வீட்டின் பின்புறம், ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட, ஒரு சிறிய அறையில், மாணவியரை தங்க வைத்தனர்.என்னுடன், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியர் பலர் தங்கியிருந்தனர். ஒரு நாள், மாணவியர் குளிக்கும் அறை அருகே வந்த கல்லூரி தாளாளர் ராவணன், மாணவியர் குளிக்கும்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த நான், அதிர்ச்சி அடைந்தேன்.தொடர்ந்து, அதேபோல், மாணவியர் குளிக்கும்போது, அவர் மறைந்திருந்து பார்ப்பதை, மற்ற மாணவியரும் பார்த்துள்ளனர். இதை வெளியில் சொன்னால், படிப்பு சான்றிதழ்களை ஏதாவது செய்து விடுவார்களோ, என்ற பயத்தில் இருந்தோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவி கொடுத்த புகார்படி, தஞ்சை தமிழ்ப்பல்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ரத்தினாம்பாள் தலைமையிலான போலீஸார், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், நேற்று முன்தினம், நர்ஸிங் கல்லூரி தாளாளர் ராவணனை, போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட் டார்.