கொண்டு வாங்க ஒரு லென்சு... கோவையில இருக்கா விஜிலென்சு?| Dinamalar

கொண்டு வாங்க ஒரு லென்சு... கோவையில இருக்கா விஜிலென்சு?

Added : ஆக 13, 2014
Share
''அக்கா! பொள்ளாச்சி வரைக்கும்பஸ்சுல போயிக்கிட்டு இருக்கேன்; இன்னிக்கு உன்னைப் பாக்க வர முடியாது...!,'' என்று அலைபேசியில் அலறினாள் மித்ரா.''அதுக்கு ஏன்டி 'இவ்ளோ' கத்துற....?'' என்றாள் சித்ரா.''நான் கத்தலை...இங்க பஸ்சுல பாட்டை அலற விட்ருக்காங்க. அதனால, நான் கத்த வேண்டியதா இருக்கு,'' என்றாள் மித்ரா. டிவிடியில், 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று ஜேசுதாஸ்
கொண்டு வாங்க ஒரு லென்சு... கோவையில இருக்கா விஜிலென்சு?

''அக்கா! பொள்ளாச்சி வரைக்கும்பஸ்சுல போயிக்கிட்டு இருக்கேன்; இன்னிக்கு உன்னைப் பாக்க வர முடியாது...!,'' என்று அலைபேசியில் அலறினாள் மித்ரா.
''அதுக்கு ஏன்டி 'இவ்ளோ' கத்துற....?'' என்றாள் சித்ரா.
''நான் கத்தலை...இங்க பஸ்சுல பாட்டை அலற விட்ருக்காங்க. அதனால, நான் கத்த வேண்டியதா இருக்கு,'' என்றாள் மித்ரா. டிவிடியில், 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று ஜேசுதாஸ் உருகிக் கொண்டிருந்தார்.
''இப்போ டில்லி வரைக்கும் இந்த பாட்டுதான்க்கா! நம்ம எம்.பி.,யும் தெற்கு திசை நோக்கி, குனிஞ்சு வளைஞ்சு கும்பிடு போட்டு, இந்தப் பாட்டையும், 'தாயில்லாமல் நானில்லை' பாட்டையும் பாடிட்டுதான் பேசவே ஆரம்பிச்சிருக்காரு...sorry... வாசிக்க ஆரம்பிச்சிருக்காரு,'' என்றாள் மித்ரா.
''டில்லியிலயும் நம்ம ஊரு மானம் கப்பலேறுதுன்னு சொல்லு. நம்ம ஊருக்கு இதெல்லாம் சாபக்கேடா மித்து?,'' என்று குமுறினாள் சித்ரா.
''அப்பிடியும் சொல்ல முடியாது; நம்ம ஊருக்குத் தேவையான சில விஷயங்களையும் அவர் வாசிச்சிருக்காரு; என்.எச்.67 பை-பாஸ், என்.எச்.209 விரிவாக்கம் பத்தியெல்லாம் கோரிக்கை வச்சிருக்காரு,''
''பரவாயில்லையே! அவரு, என்ன பாட்டு வேணும்னாலும் பாடிக்கட்டும்; நம்ம படுற பாட்டையும், அங்க பேசி, ஏதாவது வேலை நடக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சா சரி!''
பஸ்சில், 'அம்மா அம்மா...எந்தன் ஆருயிரே!' என்று அடுத்த பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.
''அக்கா! பாட்டைக்கேட்டதும், மறுபடியும் 'அம்மா' மேட்டர் ஞாபகத்துக்கு வந்துருச்சு; ஜி.எச்.ல 'அம்மா' உணவகம் கட்டுறதுல, ஏகப்பட்ட பஞ்சாயத்து நடக்குது தெரியுமா? அளந்து கொடுத்த இடத்தை விட, அதிகமான இடத்துல கட்டுனதால, கான்ட்ராக்டர்ட்ட வேலைய நிறுத்தச்சொல்லி, பி.டபிள்யு.டி.,காரங்க சொல்லிருக்காங்க; பேப்பர்ல நியூஸ் வந்ததும், கார்ப்பரேஷன் இஉ வந்து, 'காச் மூச்'ன்னு காய்ச்சி எடுத்திருக்காரு. பி.டபிள்யு.டி.,காரங்க ஆடிப்போயிட்டாங்க!,'' என்றாள் மித்ரா.
''அட! நம்ம கார்ப்பரேஷனுக்கு CE போட்டாச்சா?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
''இன்னும் SEயே போடலை. நம்ம கார்ப்பரேஷன்ல எல்லாமே பொறுப்புலதான் ஓடுதே; உசரமான EE ஒருத்தர்தான் இப்போ CE பொறுப்பா இருக்காரு; அவருதான், பி.டபிள்யு.டி., இன்ஜினியர்களை தாறுமாறா பேசிருக்காரு; 'என்ன, பேப்பர்காரனுக்கெல்லாம் நியூஸ் கொடுக்குறீங்களா'ன்னு கத்திருக்காரு; கார்ப்பரேஷன்ல அவர்தான் இப்போ 'ஆல் இன் ஆல்' ஆளாயிட்டதால, பேச்சு, தோரணையெல்லாமே மாறிடுச்சாம்!,'' என்றாள் மித்ரா.
''இந்த விஷயம் நீ கேள்விப்படலையா? CE கத்துனது மாதிரியே, 'எங்க 'அம்மா' உணவகத்துக்கு அடிக்கல் நாட்டுனதுக்கு ஏன் என்னையக் கூப்பிடலை'ன்னு, ஜி.எச்.,மேடத்தை 'பொறுப்பான' சிட்டி சேச்சி, தன்னோட பங்குக்கு காச்சிருக்காங்க; அதுக்கு அவுங்க, 'மேடம்! அதைக் கட்டுறதே கார்ப்பரேஷன்தான்; நியாயப்படி நீங்கதான் எங்களைக் கூப்பிட்டுருக்கணும்னு சொல்லிருக்காங்க,''
வாய் விட்டுச் சிரித்த மித்ரா, ''நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்; ஜி.எச்.ல 50 கோடியில, பெருசா கட்டடம் கட்டுறதைப் பார்த்த நம்ம சிட்டி சேச்சி, 'எந்த கான்ட்ராக்டர், இவ்ளோ பெரிய கட்டடம் கட்டுறான்? ஏன் இதுவரைக்கும் என்னிய வந்து பார்க்கலை'ன்னு கேட்டாங்களாம்; பக்கத்துல இருக்கிறவுங்க, 'இது கவருமென்ட்டு கட்டுறது'ன்னு சொல்லிருக்காங்க,'' என்றாள்.
''கார்ப்பரேஷனுக்கு புதுசா வந்திருக்கிற டெபுடி கமிஷனர் காந்திமதி மேடம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டப் பத்தி எல்லா டீட்டெயிலையும் கொண்டு வரச்சொல்லி, 'நோட்ஸ்' எடுத்துட்டு இருக்காங்களாம்; நல்ல 'ஸ்டார்ட்டிங்'காதான் தெரியுது!,''
''முன்னாடி இருந்த DCயும் நல்ல 'பினிஷிங்'தான் கொடுத்துட்டுப் போயிருக்காரு. அவருக்கு, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் 'ஃபேர்வல்' கொடுத்தப்ப, ஒரு 'கிஃப்ட்' கொடுத்திருக்காங்க. அதுக்கு அவரு, 'நான் இதெல்லாம் வாங்க மாட்டேன்னு தெரியாதா'ன்னு கேக்க, 'அது தெரிஞ்சுதான், வெறும் புத்தகம்தான் கொடுக்குறோம்'னு ஆபீசர்ஸ் சொல்லிருக்காங்க. எதுவாயிருந்தாலும், இங்கேயே பிரிச்சிருங்கன்னு, பிரிச்சுப் பாத்து, புத்தகம்னு தெரியவும்தான் வாங்கிக்கிட்டாராம்,''
''இப்பிடியும் ஆபீசர்ஸ் இருக்காங்க; கலெக்ட்ரேட்ல என்னன்னா, கவர்மென்ட் காசுல, 'ஃபேமிலி'க்கே வண்டி ஓட்றாங்களாம்,'' என்று பீடிகை போட்டாள் சித்ரா.
''என்னது...வண்டி ஓட்றாங்களா? கலெக்டர் ஆபீசுக்குள்ளயா?,'' என்றாள் மித்ரா.
''லேடீஸ்க்கு திட்டம் போடுற ஆபீஸ்லதான்; அங்க இருக்கிற ஆபீசருங்களுக்கு, 3 வண்டி வாடகைக்கு ஓடுது; மூணுமே 'ஓன் போர்டு' வண்டிங்களை ஓட்டிட்டு, 'டி போர்டு' வண்டிங்க நம்பர்ல பில்லு போட்டுக்கிறாங்க. அந்த 'ஓன் போர்டு' வண்டிங்கதான், வீடு, ஸ்கூல், ஷாப்பிங், டூர்ன்னு எல்லாத்துக்கும் போகுதாம்; மாசம் ஒரு லட்ச ரூபா கவர்மென்ட் காசு, இப்பிடிக்கரையுது,''
''கலெக்டர் ஆபீஸ்ல இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டேன்; சாயங்காலத்துல, கலெக்டராபீஸ் காம்பவுண்ட்ல வண்டிய நிறுத்திட்டு, தண்ணியடிக்கிறாங்களாமே? அந்த வண்டிங்கள்ல 'பிரஸ்', 'மீடியா'ன்னு ஸ்டிக்கர் ஒட்டிருக்காம்; போலீஸ்காரங்க 'லாஸ்ட் வார்ன்' கொடுத்திருக்காங்களாம்,''
''இதுக்காகவா, வேறெதுக்காகவான்னு தெரியலை; அங்க இருக்கிற பெரிய மேடம், 'மீடியாக்காரங்க யாரையும் என் ரூம்க்குள்ளேயே விடாதீங்க; என்ன வேணும்னாலும் அவுங்க எழுதிக்கட்டும்'னு பி.ஆர்.ஓ.,க்கு உத்தரவு போட்ருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்'' என்றாள் சித்ரா.
''அது சரி! இப்பல்லாம், யார் யாரோ 'பிரஸ்' ஸ்டிக்கரு ஒட்டிக்கிறாங்க; அக்ரி டிபார்ட்மென்ட்ல வேலை பாக்கிற சாதாரண ஜூனியர் அசிஸ்டென்ட் ஒருத்தரு, 'பிரஸ்'ன்னு ஸ்டிக்கர் ஒட்டிட்டு, ஆபீசுக்கே ஹோன்டா சிட்டியில வர்றாராம்! அவரைப் பத்தி, விஜிலென்ஸ்க்கு ஏற்கனவே ஏகப்பட்ட கம்பிளைன்ட் போயிருக்காம். என்கொயரி எதுவும் நடக்கலையாம்!,'' என்றாள் மித்ரா.
''விஜிலென்ஸ்ங்கவும்தான் ஞாபகத்துக்கு வருது; இ.பி.,யில கோடிக்கணக்கா சம்பாதிச்ச, சில இன்ஜினியர்களைப் பத்தி ஆதாரத்தோட விஜிலென்ஸ்க்கு சிலர் புகார் அனுப்பிருக்காங்க. ஆனா, ஒண்ணுமே நடக்கலையாம்; சம்மந்தப்பட்டவுங்ககிட்டயே 'டீல்' முடிச்சிட்டாங்களா என்னன்னு தெரியலை,'' என்றாள் சித்ரா.
''இருக்கலாம்; கோயம்புத்தூர்ல விஜிலென்சை லென்ஸ் வச்சுத்தான் தேடணும் போலிருக்கு; எல்லா ஊர்லயும்தான், ஆபீசர்கள் லஞ்சம் வாங்குறாங்க; கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க; வேற எங்கயோ சொத்து வாங்குறாங்க; ஆனா, கோயம்புத்தூர்ல மட்டும்தான், இங்கயே சம்பாதிச்சு, இங்கயே சொத்தும் வாங்கிப் போடுறாங்க,'' என்று கொதித்தாள் மித்ரா.
''மேல இருந்து கீழ வரைக்கும் 'சிஸ்டம்' அப்பிடியாயிருச்சு; இவுங்க பாவம் என்ன பண்ணுவாங்க? ஆனா, நம்ம ஊருலஞ்ச ஒழிப்புப் போலீசு, கொஞ்சம்கூட அசையுறதில்லைன்னுதான் தோணுது!,'' என்றாள் சித்ரா.
''இல்லேன்னா, ஆபீசரா இருந்துட்டு, அஞ்சு கோடி ரூபாய்க்கு அஞ்சாம வீடு கட்டுவாங்களா?'
''அது யாருடி அஞ்சா நெஞ்சன் ஆபீசர்?,''
''பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கொண்ட கேரளா சாமியோட பேரைக் கொண்டவரு; காசு கொட்டுற டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்ல இருக்கிறாரு; அவர்தான், வேடபட்டியில, பல கோடி ரூபாய்க்கு, பிரமாண்டமா வீடு கட்றாராம். கோயம்புத்தூர்ல இருக்கிற பெரிய ஆபீசர்களுக்கு பல வருஷங்களா பி.ஏ.,வா இருந்த அவரு, இப்போ வடக்க இருக்கிற ஆபீசுல இருக்காரு; நாலஞ்சு மாவட்டத்துக்குள்ள டிரான்ஸ்பர்ன்னா அவராலதான் காரியம் நடக்குமாம்'' என்றாள் மித்ரா.
''அதை விடுடி! சேலம் ரயில்வே டி.ஆர்.எம்., சுப்ரான்சு, 'பேஸ்புக்'ல கோயம்புத்தூரைப் பத்தி, ஆஹா ஓஹோன்னு புகழ்ந்திருக்காரு; ஊரு ரொம்பப் பிடிச்சிருக்காம்; செம்ம 'நீட்'டா இருக்காம்; நார்த் இண்டியாவை ஒப்பிட்டு, எழுதிருக்காரு,''என்றாள் சித்ரா.
''ரேஸ்கோர்ஸ்ல 'வாக்கிங்' வந்துட்டு, அதைப் பாத்துட்டு எழுதிருப்பாரோ?,''என்றாள் மித்ரா.
''நல்லவேளை, ஞாபகப்படுத்துன மித்து! ரேஸ்கோர்ஸ்ல 1000 கோடி ரூபாய்க்கு ஒரு 'பிராஜக்ட்'டை, ஹவுசிங் போர்டு ரெடி பண்ணுதாம்; அதுல எப்படியும் 100 கோடி ரூபா அடிக்கணும்னு ஒரு குரூப் 'பிளான்' பண்ணிருக்காம்,'' என்று சித்ரா சொல்லிக்கொண்டிருந்தபோதே, 'அக்கா! நான் இறங்கப்போறேன்; அப்புறமா கூப்பிடுறேன்' என்று அலைபேசியைத் துண்டித்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X