இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி: கைது செய்யப்பட்டவர்கள் பகீர் வாக்குமூலம்| Terrorists plan to kill Hindu leaders | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி: கைது செய்யப்பட்டவர்கள் 'பகீர்' வாக்குமூலம்

Updated : ஆக 15, 2014 | Added : ஆக 14, 2014 | கருத்துகள் (139)
Share
இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி: கைது செய்யப்பட்டவர்கள் 'பகீர்' வாக்குமூலம்

சென்னை:இந்து முன்னணி மாவட்ட தலைவர், சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்போர், இந்து தலைவர்களின் உயிருக்கு குறிவைத்து, தமிழகத்தில் பலர் பதுங்கி இருப்பதாக, வாக்குமூலம் அளித்து இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


கொடூரமாக...:

கடந்த ஆண்டு, பா.ஜ., மாநில நிர்வாகிகள் அரவிந்த ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ் உள்ளிட்ட பலர், அடுத்தடுத்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.இந்த கொலை வழக்குகளில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின், இனி, இதுபோன்ற கொலைகள் நடக்க வாய்ப்பு இல்லை என, போலீசார் கருதினர்.ஆனால், ஜூன் 18ம் தேதி, சென்னை, அம்பத்தூர் மண்ணுார்பேட்டையில், இந்து முன்னணி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், ஏற்கனவே நடந்த கொலைகள் போலவே, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம், போலீசாரை அதிர்ச்சியடைச் செய்தது.இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, சென்னை பாடியைச் சேர்ந்த நசீர், கடலூர் காஜா மொய்தீன் மற்றும் பெங்களூரில் பதுங்கி இருந்த, நவாஸ், சாகுல் அமீது உள்ளிட்ட, 13 பேர் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.


கூட்டாளிகள்:

அதில், 'இந்து பிரமுகர்களின் உயிருக்கு குறிவைத்து, புதிய அமைப்பு துவங்கி உள்ளோம். தமிழகம் முழுவதும், எங்களது கூட்டாளிகள், இந்து தலைவர்களின் உயிருக்கு, குறி வைத்து உள்ளனர்' என, தெரிவித்து உள்ளனர்.அதன் அடிப்படையில், கோவையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உயிருக்கு குறி வைத்த, சதாம் உசேன், நவுசத் உள்ளிட்ட நான்கு பேர், நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்திலும், இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைத்து, பயங்கர சதிவேலை நடப்பதாக தெரிவித்து உள்ளனர்.


தகவல் பரிமாற்றம்:

இந்த சதி திட்டத்திற்கான ஆணி வேரை கண்டுபிடித்தால் மட்டுமே, கொடூர கொலைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற முடிவுக்கு, போலீசார் வந்துள்ளனர். அதற்கான பணிகளிலும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.போலீசாருக்கு இடையே, போதிய தகவல் பரிமாற்றம் இல்லாததால், இந்த பணியில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைக்கப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாறுவேடத்திலும், அவர்களை பாதுகாத்து வருகிறோம்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X