ஒரு பத்திரிகையாளரின் காஷ்மீர் பயணம்| Dinamalar

ஒரு பத்திரிகையாளரின் காஷ்மீர் பயணம்

Updated : செப் 12, 2014 | Added : ஆக 15, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஒரு பத்திரிகையாளரின் காஷ்மீர் பயணம்

காஷ்மீரில் இருக்கும் பல மடாலயங்கள் இந்த நூலில் தங்கள் தடத்தைப் பதிய வைத்திருக்கின்றன. அவற்றில் பாரமுல்லாவில் இருக்கும் செயிண்ட் ஜோசஃப் மடாலயத்தினருக்குத்தான் அதிக அளவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அங்கிருக்கும் கான்வெண்டும் மருத்துவமனையும்தான் 1947ல் ஆரம்பித்த காஷ்மீர் பிரச்னையின் ஆரம்ப கட்டத் தாக்குதல்களில் மிக மோசமான வன்முறை அரங்கேறிய பகுதிகளில் ஒன்றாக இருந்தன. அங்கிருந்துதான் காஷ்மீர் பிரச்னை தொடர்பான என் சொந்த ஆராய்ச்சிகளும் ஆரம்பமாகின. எனக்கு ஓரளவு திறமையுள்ள பத்திரிகையியல், வரலாறு ஆகிய இரண்டு துறைகளையும் இந்த நூலில் ஒருங்கிணைத்திருக்கிறேன். ஆனால், இது செய்திப் பதிவு என்பதைவிட பெருமளவு ஒரு வரலாறுதான். காஷ்மீர் தொடர்பாக முதன்முதலில் நடந்த தாக்குதல்களில் சிக்கிக் கொண்டவர்களின் கதை இந்த நூலின் மையமாக இருக்கிறது. இவற்றில் சில, ஐம்பது வருடங்கள் கழித்து ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அல்லது அன்றைய காலகட்டத்தில், ஆசிரியர் பெயருடன் எழுதப்பட்ட செய்திக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியவை ஆவணக் காப்பகங்களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவங்களை நினைவுக்குறிப்புகளிலிருந்து தொகுத்து எழுதுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தொடர்ந்துவரும் காஷ்மீர் பிரச்னை அந்தச் சிக்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரம், வெளியான படைப்புகள், அதிகாரபூர்வ ஆவணங்கள், வரலாற்றாளர்களுக்குத் தேவையான பிற தகவல் மூலங்கள் ஆகியவற்றுக்கும் இதேபோல நம்பகத்தன்மை, துல்லியம், பாரபட்சம் ஆகிய அதே சிக்கல்கள் இருக்கின்றன.


மனிதாபிமானப் பரிமாணம்:

1947 காலகட்டத்து காஷ்மீர் பற்றிய அனைத்துத் தரப்பு சொந்த அனுபவங்களைச் சேகரித்துப் பயன்படுத்தியதன்மூலம் காஷ்மீர் பிரச்னையின் சிக்கலை விளக்க முயன்றிருக்கிறேன். தனிப்பட்ட குழுவினர் தங்களுக்குச் சாதகமாக முன்வைக்கும் வாதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சித்திரத்தை இவை வழங்குகின்றன. புவி அரசியல் சார்ந்த மிக முக்கியமான எல்லைக்கோட்டுக்கு மனிதாபிமானப் பரிமாணம் ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். சொந்த அனுபவங்களிலிருந்து சேகரித்த தகவல்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
காஷ்மீருக்கும் அதன் கலாசாரத்துக்கும் இதயமாகவும், இந்தப் பிரச்னையின் பிரதான களமாகவும் இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்குபற்றியே கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். முந்தைய சமஸ்தானத்தின் பிற இரண்டு பகுதிகளைப்பற்றி அதிகம் பேசவில்லை.
2003ல் பிபிசியின் ஸ்பான்சர்ஷிப்பில் இதழியல் ஆராய்ச்சியாளராக மிச்சிகனில் ஒரு செமஸ்டர் இருந்தேன். அதன் பெரும்பாலான நேரத்தை 1947ல் காஷ்மீர் எப்படி இருந்தது என்பது பற்றிய ஆராய்ச்சியில் செலவிட்டேன்.
என் ஒட்டுமொத்தத் தேடலில் ஒரே ஒரு கதவு மட்டுமே திறக்காமல் மூடிக்கொண்டது. இந்தியாவுடன் சேர்ந்தது தொடர்பாக மகாராஜா எழுதிய கடிதத்தின் மூல ஆவணத்தைப் பார்க்க வேண்டும் என்று தில்லியில் ஆவணக் காப்பகத்தின் டைரக்டர் ஜெனரலிடம் அனுமதி கேட்டேன். அவர் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதத்தை அனுப்பினார். அவர்கள் என் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாகப் பின்னர் பதில் அனுப்பினார்.


முதல் பயணம்:

1993ல் முதன்முறையாக காஷ்மீருக்கு நான் போனதே பி.பி.சியின் செய்தியாளராகத்தான். மேலும் பி.பி.சிக்கான செய்தியாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி வழங்குபவராக நான் மேற்கொண்ட பணிகள்தான் என்னை அடிக்கடி காஷ்மீருக்குப் போய்வர வைத்திருக்கின்றன. எனது இரண்டாம் சொந்த நகரான தில்லிக்கு அப்பால் தெற்கு ஆசியாவில் நான் அதிகமும் போய்வந்ததும் நேரம் செலவிட்டதும் காஷ்மீரில்தான். கட்டுப்பாட்டுக் கோட்டை இரு பக்கங்களிலிருந்தும் பார்த்திருக்கிறேன். பாகிஸ்தானில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஸ்ரீநகரில் பதாமி பாக்கில் இருக்கும் இந்திய ஜெனரல்களைப் பேட்டி எடுத்திருக்கிறேன். காஷ்மீர் தொடர்பான என் செய்தித் தொகுப்பில் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலையாக விஷயத்தை அணுகி வந்திருக்கிறேன். இந்தப் புத்தகத்திலும் அந்த அணுகுமுறையையே பின்பற்றியிருக்கிறேன்.
கீழே வருவது நான் சந்தித்த எமிலியா என்ற இத்தாலிய கன்யாஸ்திரீ யின் விவரணை.
அந்த மருத்துவமனைப் புல்வெளியில் எங்களை வரிசையாக நிற்கவைத்து, துப்பாக்கியால் குறி வைத்தார்கள். அவர்கள் ஏற்கெனவே நாலைந்து பேரைக் கொன்றிருந்தனர். மருத்துவமனையில் அப்போது நாங்கள் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்துக்கொண்டிருந்தோம். கலவரக்காரர்கள் கையில் ஆயுதங்களுடன் பனி படர்ந்த மலைச் சரிவு வழியாக நகரை வலம் வர ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், அழகான தோட்டமும் அதன் நடுவில் கன்னி மேரியின் அற்புதமான சிறிய சிலையும் கொண்ட எங்கள் மருத்துவமனையை அவர்கள் தாக்கமாட்டார்கள் என்றுதான் நம்பினோம். அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.


மருத்துவமனையில் முரட்டுப் பாதங்கள்:

கூக்குரலிட்டபடியே அவர்கள் மருத்துவமனையைச் சுற்றி வளைத்தார்கள். அப்போது மருந்தகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நோயாளிகள் இருந்தனர். புல்வெளியில் தங்கள் முரட்டுப் பாதங்களைப் பதித்தபடி அவர்கள் உள்ளே நுழைந்தனர். வெட்டு,கொல்லு, சுட்டுத்தள்ளு என்று கத்தியபடியே, ஒவ்வொரு வார்டாகத் துவம்சம் செய்தார்கள். கண்ணில் தென்பட்ட முதல் நோயாளியையும் நர்ஸையும் கொன்றனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கன்யாஸ்திரீ ஒருவரையும் கொன்றனர். தலைமை மருத்துவரின் கணவரை அவர் கண் முன்னாலேயே கொன்றனர். மதர் சுப்பீரியரையும் கொன்றுவிட்டிருந்தனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவரும் பிரசவத்துக்காக வந்திருந்த அவருடைய மனைவியும் கொல்லப்பட்டனர். கண் மூடிக் கண் திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. கண்ணில் பட்டவர்களைக் கொன்று, கையில் கிடைத்தவற்றை அள்ளிக்கொண்டு அந்தக் கும்பல் ஒரு புயலைப் போல் புறப்பட்டுச் சென்றது.


தப்பிப் பிழைத்தோம்:

என்னையும் பிற கன்யாஸ்திரீகளையும் புல்வெளியில் வரிசையாக நிற்கவைத்து, ஒவ்வொருவராகக் கொல்லப்போவதாகச் சொன்னார்கள். நல்ல வேளையாக அந்த நேரம் பார்த்து வாசலில் ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் இறங்கி வந்தார். கலவரக்காரர்களிடம், அவர்களுக்குப் புரியும் மொழியில், ஏதோ சொன்னார். அவர்கள் துப்பாக்கிகளைக் கீழே இறக்கினர். எதுவும் பேசாமல் போய்-விட்டனர். அந்த ரட்சகர் வேறு யாருமல்ல, தன் சிறு வயதில் எங்கள் கான்வென்டில் படித்து வளர்ந்தவர்தான் என்பது பின்னரே தெரியவந்தது!
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதன் சுடர் போலவே நடுங்கும் குரலில், இத்தாலியரான எமிலியா என்ற கன்யாஸ்திரீ சொன்னதைக் கேட்டபோது என் முதுகுத்தண்டு சில்லிட்டது. 1947-ல் பாரமுல்லாவில் செயிண்ட் ஜோசப் மருத்துவமனையில் நடந்த சம்பவங்களின் நேரடிச் சாட்சி அவர்.


முதல் தீப்பொறி:

நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தபோது அவருக்கு 91 வயது ஆகியிருந்தது. அறுபது வருடங்களுக்குமுன் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தபோது சோகம் கலந்த புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது. பாரமுல்லாவில் கிறிஸ்தவ மடாலயத்தின்மீது நடைபெற்ற தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் எமிலியா மோண்ட்வானியும் ஒருவர். இன்றுவரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்னையின் முதல் தீப்பொறி அவர் கண்முன்னால்தான் பற்றவைக்கப்பட்டது. அரை நூற்றாண்டு ஆனபிறகும் அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டுக்கு அருகில் இருக்கும் அந்த மடாலயத்திலேயே வசித்து வந்தார்.
இமயமலைச் சரிவில் வசித்த அவருடைய சோகக் கதை, உலகின் புவி அரசியல் யுத்தங்களில் மிக மோசமான ஒன்றின் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
========================
காஷ்மீர் : முதல் யுத்தம்
ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் : B.R.. மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்இணையத்தில் புத்தகத்தை வாங்க : டttணீண்: https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 094459 01234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X