குடலுக்குள்ளே நடந்த பிழை...| Dinamalar

குடலுக்குள்ளே நடந்த பிழை...

Added : ஆக 19, 2014
Share
''மித்து! என்னடி தனியா உட்கார்ந்து, ரசிச்சு ரசிச்சுப் படம் பாத்துட்டு இருக்க...வீட்ல யாரையும் காணோம்!,'' என்று கேட்டபடியே மித்ராவின் வீட்டிற்குள் நுழைந்தாள் சித்ரா.''எல்லாரும் ஏதோ பங்ஷனுக்குப் போயிருக்காங்க. நான் வரலேன்னு, 'பம்மல் கே.சம்மந்தம்' பாத்துட்டு, சிரிச்சிட்டு இருக்கேன்; நீ எங்க...இந்தப் பக்கம்?,'' என்றாள் மித்ரா.''நானும் ஒரு பங்ஷன் போயிட்டு,
குடலுக்குள்ளே நடந்த பிழை...

''மித்து! என்னடி தனியா உட்கார்ந்து, ரசிச்சு ரசிச்சுப் படம் பாத்துட்டு இருக்க...வீட்ல யாரையும் காணோம்!,'' என்று கேட்டபடியே மித்ராவின் வீட்டிற்குள் நுழைந்தாள் சித்ரா.
''எல்லாரும் ஏதோ பங்ஷனுக்குப் போயிருக்காங்க. நான் வரலேன்னு, 'பம்மல் கே.சம்மந்தம்' பாத்துட்டு, சிரிச்சிட்டு இருக்கேன்; நீ எங்க...இந்தப் பக்கம்?,'' என்றாள் மித்ரா.
''நானும் ஒரு பங்ஷன் போயிட்டு, உன்னையையும் ஒரு எட்டு பாத்துரலாம்னு வந்தேன். நீ என்னடான்னா, தனியா சிரிச்சு, பயமுறுத்திட்டு இருக்க....!'' என்று வாரினாள் சித்ரா.
''கமல் வயித்துக்குள்ள வாட்ச்சை வச்சுத் தச்சிட்டு, சிம்ரன் படுற பாட்டை ரசிச்சிட்டு இருக்கேன்...எவர் க்ரீன் காமெடி!'' என்றாள் மித்ரா.
''சினிமாவுல பார்த்தா காமெடிதான்; நிஜத்துல அப்படி நடந்தா?,'' என்று நிறுத்தினாள் சித்ரா.
''என்னக்கா சொல்ற...நிஜமாவே தச்சுட்டாங்களா? எந்த பிரைவேட் ஹாஸ்பிடல்ல?,'' என்றாள் மித்ரா.
''ஏண்டி! ஜி.எச்.,ல தப்பே நடக்காதா? நம்ம ஜி.எச்.,லதான் இது நடந்திருக்கு; 2011ல மலக்குடல் புத்துநோய்க்கு ஆபரேஷன் பண்ண வந்த 60 வயசு 'லேடி'க்கு, ஆபரேஷன் பண்ணுன டாக்டர் ஒருத்தரு, 'அலிஸ் ஃபோர்செப்ஸ்'ஐ...அதான்டி சின்ன கத்தரிக்கோல்...உள்ளே வச்சு தச்சுட்டாங்க,''
''அய்யய்யோ! அப்புறம்என்ன ஆச்சு?,''
''என்ன ஆகும்? அந்தம்மாவுக்கு பயங்கரமான வயித்து வலி. எங்கெங்கேயோ போய்ப் பாத்தும் ஒண்ணும் ஆகலை. மறுபடியும் இங்க வந்து இகூ ஸ்கேன் எடுத்துப் பாத்தா, உள்ளுக்குள்ள கத்தரி தெரிஞ்சிருக்கு. பதறிப் போன அந்த டாக்டர், ரேடியாலஜி டிபார்ட்மென்ட்ல இருக்கிற டாக்டரை கரெக்ட் பண்ணி, அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை அழிச்சிட்டாராம். அப்புறமா, போன ஜனவரியில அந்தம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணி, கத்தரிக்கோலை எடுத்துட்டு, அவசர அவசரமா துரத்தி விட்ருக்காங்க,''
''அடக்கொடுமையே! தப்புபண்ணுனவுங்க தப்பிச்சிட்டாங்களா?,'' என்றாள் மித்ரா.
''அப்பிடித்தான் நினைக்கிறேன்...ஏதோ ஒரு 'கம்பிளைன்ட்' போயி, ஒரு டாக்டர் தலைமையில, போன 12ம் தேதி 'என்கொயரி' நடந்திருக்கு; ஆனா, மொத்த விவகாரத்தையும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மூடி மறைச்சிட்டதா பேசிக்கிறாங்க,'' என்ற சித்ரா, 'டிவி'யை 'ஆப்' பண்ணி விட்டு, ஃஎப்.எம்., போடச் சொன்னாள்.
''ஃஎப்.எம்.னு சொன்னதும், ஞாபகத்துக்கு வருது; நம்ம ஊரு ரேடியோ ஜாக்கிகளுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு,'' என்று புதிர் போட்டாள் மித்ரா.
''ஊருக்கே பாட்டுப் போடுற அவுங்க பாட்டையும் சொல்லு,'' என்றாள் சித்ரா.
''கவர்மென்ட் நடத்துற எப்.எம்.,ரேடியோவுல வேலை பாக்கிற 'ஜாக்கி'களுக்கு, சம்பளம் கொடுக்கலைன்னு சில நாளுக்கு முன்னால, ஒரு பிரச்னை நடந்துச்சே, ஞாபகமிருக்கா? ஒரு வழியா போராட்டம் நடத்துன பிறகு, சம்பளம் கொடுத்தாங்க. இப்போ, திடீர்னு 35 வயசுக்கு மேல இருக்கிற 'ரேடியோ ஜாக்கி'களுக்கு வேலை இல்லைன்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்,''
''என்னடி அநியாயமா இருக்கு? 35 வயசுக்கு மேல இருக்கிறவுங்க, எந்த வேலையும் பாக்க முடியாதா? இல்லேன்னா, அந்த வயசுல குரல் போயிருமா? 70 வயசுல ஈஸ்வரியம்மா கம்பீரமா பாடலையா?,''
''முழுசாக் கேளு...இதே கவர்மென்ட் ரேடியோவுலதான், 60 வயசு வரைக்கும் அறிவிப்பாளரா பல பேரு வேலை பாக்கிறாங்க. எப்.எம்.ல மட்டும், நல்ல குரல், எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறவுங்களைத் துரத்தி விட்டுட்டு, 25 வயசுக்குள்ள இருக்கிற பல பேரை எடுத்திருக்காங்க. அவுங்க குரலையும், உளறலையும்கேக்குறப்ப, 'டென்ஷன்' ஆகுது,'' என்றாள் மித்ரா.
''வேற எந்த ரேடியோ ஜாக்கிக்கு என்ன பிரச்னை?,'' என்றாள் சித்ரா.
''கிறுகிறுக்க வைக்கிற ரேடியோ ஜாக்கியோட அப்பா, கோடி ரூபா கொண்டு போறப்ப போலீஸ் பிடிச்சதே...தெரியுமா? அவரும் ஸ்டேஷன்ல மாட்டிட்டு, தவிச்சாரே?,''
''ஆனா, நான் கேள்விப்பட்ட வரைக்கும், அவுங்க அப்பாவை அவரோட பழைய பார்ட்னரே அநியாயமா மாட்டி விட்டதாத்தான் சொல்றாங்க. பாக்கிப் பணத்தைக்கொடுக்கிறது மாதிரி கொடுத்து, போலீசுக்கும் போட்டுக் கொடுத்திருக்காரு. இந்த விவகாரத்துக்கும், யூனியன் மேட்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்கிறாங்க,''
''ஆமாக்கா! அந்த யூனியன் பெரியவருக்கு 92 வயசு; கல்யாணமே பண்ணிக்காம, தொழிற்சங்கத்துக்கு உழைச்சவரு; இப்போ 500 கோடி ரூபா மதிப்புக்கு உயர்ந்திருக்கிற அத்தனை சொத்தையும், இத்தனை வருஷமா பாதுகாத்தவரே அவர்தான...இனிமே எதுக்கு அதை அழிக்கப் போறார்ன்னு அவரோட ஆளுங்க கேக்குறாங்க. எனக்கென்னவோ, அதுல நியாயம் இருக்குன்னு தோணுது,'' என்றாள் மித்ரா.
''அது சரி! ஆனா, பிசினஸ்ல வந்த பணம்னா கணக்கைக் காமிக்கிறதுக்கு ஏன் இவ்ளோ 'லேட்' பண்ணனும்? முடியலைன்னா, டாக்சைக் கட்டிட்டுப் போக வேண்டியதுதான?,'' என்றாள் சித்ரா.
''நீ சொல்றதும் சரிதான். யூனியன் மேட்டரைப் பொறுத்தவரைக்கும், அசையா சொத்து அத்தனையையும் அரசுடமையாக்கிட்டாக் கூட நல்லதுன்னு சில பேரு சொல்றாங்க; என்ன நடக்குமோ தெரியலை'' என்றாள் மித்ரா.
''சொத்துன்னு சொன்னதும் ஞாபகம் வருது; செட்டிபாளையம் பெரியகுயிலி ஏரியாவுல, பல நூறு ஏக்கர்ல அப்ரூவலே இல்லாம ஒரு லே-அவுட் போடுறாங்களாம்; ஒரு சென்ட் 65 ஆயிரம்னு பணம் வாங்கிட்டு, சொத்து மதிப்பை 29 ஆயிரத்து 500 ரூபாய்ன்னு போட்டு ரிஜிஸ்ட்ரு பண்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''இதுலயே நிறைய்ய ஆபீசர்ங்க, ஏகமா சொத்து சேத்திருப்பாங்கன்னு சொல்லு,'' என்றாள் மித்ரா.
''அதுல என்ன சந்தேகம்? எல்.பி.ஏ., ஆபீசர்களுக்கு பெரிய 'அமவுன்ட்' கைமாறிருக்கிறதாலதான், இதை கண்டுக்கலைங்கிறாங்க. அவுங்களை விட, எல்.பி.ஏ.,வை கட்டுப்படுத்துற பெரிய மேடத்துக்கும் பங்கு போகுதுன்னு சொல்றதுதான் பெரிய அதிர்ச்சித் தகவலா இருக்கு,'' என்றாள் சித்ரா.
''எனக்கொண்ணும் அதிர்ச்சியாத் தெரியலை; மலை மேல ரிசார்ட்ஸ்காரங்களோட சேந்து அறுவடை பண்ணுன மாதிரி, இங்க வந்ததுமே புரமோட்டர்கள், ரியல் எஸ்டேட் காரங்ககிட்ட கூட்டணி வச்சுட்டாங்கன்னு, நாம முன்னாடியே பேசிருக்கோமே. அந்த கூட்டணி இப்போ பலமாயிருச்சாம்,'' என்றாள் மித்ரா.
''சிட்டிக்குள்ள எங்கெங்க 'ரிசர்வ் சைட்' இருக்கோ, அங்கெல்லாம் திடீர் திடீர்னு கோவிலைக் கட்டுறதுக்குன்னே சில பேரு கெளம்பிருக்காங்க. பாலம் கட்டுறதுக்கு கோவிலை இடிக்கக்கூடாதுன்னு கொடி தூக்குறாங்க. கோவிலை எங்க வேணும்னாலும் கட்டலாம்; பாலத்தை அங்கதான கட்டியாகணும்?,'' என்றாள் சித்ரா.
''உண்மைதான்க்கா! ஊரெல்லாம் கோவிலாத்தான் இருக்கு; மக்களுக்கு காத்து வாங்கவும், காலார நடக்கவும்தான் ஒரு 'பார்க்' இல்ல. இவுங்களை கோவிலை எடுக்கச் சொன்னா, 'முதல்ல ஸ்டேஷன் பக்கத்தால இருக்கிற மயானத்தை எடுங்க'ன்னு சொல்றாங்க. என்னையக் கேட்டா, ஊரு முன்னேறணும்னா ரெண்டையுமே எடுக்கணும்; அதுக்கு, ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு, ஆபீசருங்க, வி.ஐ.பி.,ங்க உக்காந்து பேசணும்,'' என்றாள் மித்ரா.
''பேசணும்னு சொன்னியே...பேசிப்பேசியே ஆட்சிக்கு வந்த கட்சியில, கோயம்புத்தூர் சிட்டியில இருக்கிற முக்கியமான நிர்வாகி, ஆளுங்கட்சிய எதிர்த்துப் பேசுறது இல்லை; ஒரு அறிக்கையும் விடுறது இல்லை; போராட்டம் நடத்துறதுமில்லை; இவரு பொறுப்புல வச்சிருந்தா, கட்சி காலின்னு 11 பாயின்ட்களை அடுக்கி, தலைவருக்கே ஒரு கடிதம் எழுதிருக்காரு, கோயம்புத்தூர்ல இருக்கிற ஒரு முக்கியமான உடன் பிறப்பு,'' என்றாள் சித்ரா.
''அக்கா! நம்ம ஊரு பிரச்னையப் பேச ஒரு நாள் போதாது; நீ வந்ததுல இருந்து நான் பேசிட்டே இருந்துட்டேன்; இரு...ரெண்டு பேருக்கும், சூப்பரா ஃபில்டர் காஃபி போட்டுட்டு வர்றேன்; அது வரைக்கும் இதைப் படிச்சிட்டு இரு,'' என்று அவள் எடுத்துக் கொடுத்த புத்தகம், நட்வர் சிங் எழுதிய One Life Is Not Enough.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X