மாற்றுத்திறனாளிகளைப்பற்றி அதுவும் சாதனை படைத்துவரும் மாற்றுத் திறனாளிகளைப் பற்றி எழுதுவது என்பது எப்போதுமே பிடித்துப்போன ஒரு விஷயம்.
அந்த வழியில் ஈரோடு இசைப்பள்ளி ஆசிரியர் ஆர்.ஞானப்பிரகாசம் பற்றி ஒரு பதிவு.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிறந்தவர்,பிறந்த போதே இரு கண்பார்வையும் இல்லாமல் போனது, அடுத்த சோதனையாக ஐந்து வயதில் இளம்பிள்ளைவாதம் காரணமாக கால்களும் நடக்கமுடியாமல் போய்விட்டது.
இவர் வீட்டிற்கும்,நாட்டிற்கும் பாரமாக இருப்பார் என்று எண்ணியதை மாற்றிகாட்டி இன்றைக்கு ஈரோடு இசைப்பள்ளியின் ஆசிரியராக இருக்கிறார்.
ஆனால் இந்த இடத்தை அவர் எளிதாக அடைந்துவிடவில்லை இவரது பாதை மலர்கள் நிரம்பியதல்ல. நிறைய அவமானங்கள் அதைவிட நிறைய சிரமங்கள்.அவை அனைத்தையும் படிக்கட்டுகளாக மாற்றி தனக்கான உயரத்தை அடைந்தவர்.
ஐந்து வயதில் வீட்டில் முடங்கிப்போனவருக்கு அறுபது வயதில் வீட்டோடு முடங்கிப்போன பாட்டி கமலத்தின் இசைப்பயிற்சிதான் வாழ்க்கையின் திசையை மாற்றிப்போட்டது. இவருக்குள் ஒரு இசைக்கலைஞன் உறங்கிக்கிடக்கிறான் என்பதை உணர்ந்த பாட்டி கமலம் இவருக்கு இசைக்கு நல்ல அடித்தளம் போட்டுக்கொடுத்தார்,அதன்பின் கோவை இசைக்கல்லூரி இவருக்கு இசையின் ஆழ,அகலத்தை காண்பித்தது.
கல்லூரியில் படிக்கும் போது மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பாட்டுப்போட்டியில் மாநில அளவில் முதல்பரிசைப்பெற்ற போது தான் சாதிக்கபிறந்தை உணர்ந்தார் பின்னர் சுவர்ணா சோமசுந்தரம்,தஞ்சை நடராஜன் போன்ற இசைநிபுணர்கள் மூலமாக கூடுதல் திறமை பெற்றார்.
பள்ளிநேரம் முடிந்ததும் வீட்டில்வைத்து தேவாரம்,திருப்புகழ்,பன்னிரு திருமுறைகள் போன்ற தமிழிசை வகுப்புகள் எடுத்துவருகிறார்.
இன்றைய அறிவியலின் துணையோடு,அதன் தொழில்நுட்பத்தோடு பயணிப்பது இவரது சிறப்பாகும்.பார்வையற்றவர்களுக்கான கம்ப்யூட்டர் மற்றும் அதுதொடர்பான சாப்ட்வேர் உதவியோடு நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிறார்,தமிழிசையின் புதிய பரிணாமங்களை புரிந்துகொள்கிறார்,ஸ்கைப் மூலமாக இசைப்பாடம் நடத்துகிறார்.
இது தவிர பார்வையற்ற ஆனால் பாடும் வல்லமை கொண்டவர்களை ஒருங்கிணைத்து இசைக்குழு நடத்திவருகிறார்,இந்த இசைக்குழு எல்லாதரப்பு பாடல்களையும் பாடி பார்வையாளர்களை மகிழ்விக்கக்கூடியதாகும்.
தன்னுடைய இசைக்குழுவினருடன் பாடி சிவஞான தேனிசை மாலை என்ற ஆடியோ சிடியும் வெளியிட்டுள்ளார்.
குறைபடுவதால் குறைகள் குறைவதில்லை என்பதை உணர்ந்து இசையால் சிகரத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்துவரும் ஞானப்பிரகாசத்துடன் தொடர்பு கொள்வதற்கான எண்:9486019582.(இவர் பள்ளியில் பணியாற்றுவதால் மாலை 5 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்.)இவரை நமக்கு அறிமுகப்படுத்திய நண்பர் ரைட்மந்திரா சுந்தருக்கு நன்றிகள் பல.
- எல்.முருகராஜ்