போதைப்பாக்கு விற்பனை அமோகம் : தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : ஆக 21, 2014
Advertisement
பொள்ளாச்சி: 'கஞ்சாவை போலவே போதை பாக்கு விற்பதையும் கருதி, தண்டித்தால் மட்டுமே அவற்றின் விற்பனையை தடுத்து இளைய சமுதாயத்தை அழிவின் பாதையிலிருந்து மீட்க முடியும்,' என புகையிலைக்கு எதிரான அமைப்புகள் குரல் கொடுக்கின்றன.இளைஞர்களில் ஒரு தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது போதைப்பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள். வளரும் வயதில் பலரும்
   போதைப்பாக்கு விற்பனை அமோகம் : தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொள்ளாச்சி: 'கஞ்சாவை போலவே போதை பாக்கு விற்பதையும் கருதி, தண்டித்தால் மட்டுமே அவற்றின் விற்பனையை தடுத்து இளைய சமுதாயத்தை அழிவின் பாதையிலிருந்து மீட்க முடியும்,' என புகையிலைக்கு எதிரான அமைப்புகள் குரல் கொடுக்கின்றன.

இளைஞர்களில் ஒரு தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது போதைப்பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள். வளரும் வயதில் பலரும் இவற்றுக்கு அடிமையாகி, நோயாளிகள் ஆகியுள்ள அவலம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காண முடிகிறது.

பெருநகரங்கள் முதல் சின்னஞ்சிறு கிராமங்கள் வரை, இந்த புகையிலை பொருட்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. இவற்றிற்கு அடிமையானவர்கள் புற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம்.


இக்காரணங்களால், தமிழக அரசு இவ்வகை புகையிலை பொருட்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்தது. இதனால், போதைப்பாக்கு விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்; அவற்றிற்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்திலிருந்து மீண்டு விடுவர் என அனைத்து தரப்பினராலும் நம்பப்பட்டது.


ஆனால், சில பேராசை வியாபாரிகள், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, போதை பாக்கு மற்றும் பாக்கெட் புகையிலைகளை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட சுவடே இல்லாமல், ஏறத்தாழ அனைத்து கடைகளிலும் அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


குறிப்பாக பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், இரு மடங்கு கூடுதல் விலைக்கு தடை செய்யப்பட்ட பாக்கு மற்றும் பாக்கெட் புகையிலைகள் விற்பனையாகின்றன. அதாவது மூன்று ரூபாய் விலையுள்ள பாக்கு ஐந்து ரூபாய்க்கும், நான்கு ரூபாய் விலையுள்ள பாக்கு எட்டு முதல் பத்து ரூபாய்க்கும், ஆறு ரூபாய் விலையுள்ள பாக்கு பத்து முதல் 15 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.


மேலும், எட்டு ரூபாய் விலையுள்ள பாக்கெட் புகையிலை 15 முதல் 20 ரூபாய் வரையிலும் விலை வைத்து விற்கப்படுகிறது. அதிகாரிகள் அவ்வப்போது சில கடைகளில் ஆய்வு நடத்தி, இத்தகைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனாலும் அது அவற்றின் விற்பனையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது: இந்த பொருட்களுக்கு தடை விதித்தது சில வியாபாரிகளுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. தடையை காரணம் கூறி, கூடுதல் விலை வைத்து கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இவற்றிற்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இல்லாதததே இது போன்ற விதி மீறல்களுக்கு காரணம்.


அதிகாரிகள் எப்போதாவது ஆய்வு நடத்தி, எங்கேனும் சில இடங்களில் பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்காரர்களை எச்சரித்து விட்டு விடுகின்றனர். மாறாக, பெரிய அளவிலான அபராதம் மற்றும் சிறை தண்டனை என்று கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதாவது கஞ்சா விற்பதை போலவே போதை பாக்கு விற்பதையும் கருத வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.இருந்தும் இல்லாத நிலையில் ஐ.டி., பூங்காக்கள்:

மதுரை : மதுரையில் தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.,) பூங்காக்கள் உட்பட தொழிற் பேட்டைகளை மேம்படுத்தி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வேலைதேடி ஐ.டி., பட்டதாரிகள் வெளியூர் செல்வது தடுக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் மூன்றரை லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.வேலைவாய்ப்புகளை வழங்கிய செல்லூர் கைத்தறி நெசவு கூடங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடப்பட்டன. கப்பலூர், உறங்கான்பட்டி, புதூர் சிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளில் பல தொழில் நிறுவனங்கள் மின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நலிவுற்றன. வேலை வாய்ப்பு தரும் பெரிய தொழிற்சாலைகளை மதுரையில் ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
அவசர கோலத்தில் : ஐ.டி., பூங்காக்கள்தகவல் தொழில் நுட்ப புரட்சி காரணமாக இத்துறை சார்ந்த படிப்புகளை ஏராளமான இளைஞர்கள் படிக்கின்றனர். மதுரையில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 60க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப கம்பெனிகள் செயல்படுகின்றன. தமிழக அரசு எல்காட் மூலம் மதுரையில் இலந்தைகுளம், வடபழஞ்சியில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்க முன்வந்தது. முந்தைய தி.மு.க., ஆட்சியில் 2011ல் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி அவசரம் அவசரமாக இலந்தைகுளத்தில் மட்டும் 28 ஏக்கரில் 50 ஆயிரம் சதுரடியில் ரூ.10 கோடிக்கும் மேல் பிரமாண்டமான கட்டடங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

ஆர்வம்காட்டாத நிறுவனங்கள்: இதில் தொழில் துவங்க ஐ.டி., கம்பெனிகள் முன்வரவில்லை. இப்பூங்காக்களில் வாடகை அதிகம். ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் ஐ.டி.,நிறுவனங்களுக்கு இங்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.50 லட்சம் வரை வெளிநாட்டு வர்த்தகம் செய்திருக்க வேண்டும். இத்தகைய நிபந்தனைகளால், ஐ.டி., நிறுவனங்கள் யாரும் அங்கு செல்லவில்லை. ஜெலாக்ஸி என்ற கம்பெனி மட்டும் செயல்படுகிறது. வடபழஞ்சியில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
அரசு ஆர்வம் காட்டுமா : அ.தி.மு.க., அரசு அமைந்தவுடன் தகவல் தொழில் நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமார் வந்து பூங்காக்களை பார்வையிட்டு எல்காட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு கடந்த இரு ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ, அதிகாரிகளோ வந்து ஆய்வு செய்யவில்லை. மேலும் இப்பூங்காக்களில் தொழில் துவங்க ஐ.டி., கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.இதனால் ஐ.டி., முடித்த பட்டதாரிகள் கோவை, பெங்களூரு, சென்னைக்கு செல்லும் அவலம் நிலவுகிறது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஐ.டி., நிறுவனங்கள் இப்பூங்காக்களில் தொழில் துவங்க முன்வரச் செய்ய வேண்டும். அதன் மூலம் வெளியூர் செல்லும் ஐ.டி., பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இப்பூங்காக்கள் மட்டுமின்றி உறங்கான்பட்டி, கப்பலூர், புதூர் சிட்கோ தொழிற்பேட்டைகளை மேம்படுத்திட வேண்டும். கைத்தறி, விசைத்தறி யுனிட் மீண்டும் செயல்படவும் வழிவகைகளை காண வேண்டும்."நடுவுல கொஞ்சம் குப்பையை காணோம்':

அரைகுறையாக, பெரும்பள்ளம் ஓடையில், தூர் வாரும் பணிகள் நடந்து வருகிறது.


சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் துவங்கும் பெரும்பள்ளம் ஓடை, காரை வாய்க்காலில் சங்கமிக்கிறது. மழை நீர், உபரி நீர் செல்ல வசதியாகவே, பெரும்பள்ளம் ஓடை உருவானது. நாளிடைவில் சாக்கடை நீர் செல்லும் ஓடையாக மாறியது. மாநகர கழிவு நீர் மட்டுமின்றி, ஓடையில் பெருமளவில் குப்பைகளும், சாயப்பட்டறை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பை மேடாக, மாறி வருகிறது. மழை காலங்களில், பெருக்கெடுக்கும் மழைநீர், தேங்கிய குப்பைகளால், மேற்கொண்டு செல்ல வழியின்றி, குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.


ஓடையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. எனவே, தீவிர மழைக்கு முன்னதாகவே, ஓடையை முற்றிலுமாக தூர்வார வேண்டும், என மக்கள் கோருகின்றனர். சில தினங்களுக்கு முன், முதற்கட்டமாக காரை வாய்க்கால் பகுதியில், தூர்வாரும் பணி நடந்தது. சிறிது, சிறிதாக தற்போது, பெரியார் நகர் வரை, ஓடையில் தூர் வாரும் பணிகள் நடந்து வருகிறது.


புதுமை காலனியின் பின்புற பகுதியில், சில தினங்களுக்கு முன், தூர் வாரப்பட்டது. மலை போல் குவிந்து இருந்த குப்பையை, இரண்டாக பிரித்து, தூர் வாரப்பட்டுள்ளது. நடுவில் உள்ள குப்பை அகற்றப்படாமல் உள்ளது. மழை நீர் செல்லும் வகையில், இரு பகுதியாக குப்பைகள் வழித்து எடுக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் கூறியதாவது: பெயரளவுக்கு பெரும்பள்ளம் ஓடையில், தூர் வாரும் பணி நடக்கிறது. குப்பையை முழுமையாக அகற்றிட வேண்டும். ஆனால், ஓடையின் நடுவே இருந்த குப்பையை மட்டும் விட்டு விட்டனர். அதிகளவில் நீரோட்டம் இருக்கும் காலத்தில், மீண்டும் இதே பிரச்னை தான் தோன்றும்.


ஓடையில், இரு கால்வாய்கள் வெட்டி இருப்பது, இங்கு தான் காண முடியும். முழுமையாக அகற்றி இருந்தால், மழை காலத்தில், மழை நீர் எளிதாக வெளியேறும். மக்களுக்கும் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால், அரைகுறையாகவே, தூர் வாரப்படுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து, முழுமையாக தூர் வார தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றனர். துணை மேயர் பழனிசாமி கூறுகையில், ""தீவிர மழைக்காலம் நெருங்குகிறது. மழை நீர் தேங்காமல் இருக்கும் வண்ணம், ஓடையில் தூர் வாரும் பணி நடக்கிறது,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X