பாரமுல்லா : மறக்கமுடியாத நினைவுகள்| Dinamalar

பாரமுல்லா : மறக்கமுடியாத நினைவுகள்

Updated : செப் 12, 2014 | Added : ஆக 22, 2014
Advertisement
பாரமுல்லா : மறக்கமுடியாத நினைவுகள்

காஷ்மீரைப் பாகிஸ்தானுக்காக வென்றெடுக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டனர்? யார் அவர்களுக்குத் தலைமை தாங்கியது? தங்கள் இலக்கில் அவர்கள் எதனால் தோல்வியுற்றனர்? இவைபற்றி இதுவரை யாரும் சொல்லியிராத தகவல்களை எமிலியா என்னுடன் பகிர்ந்துகொண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கின்மீது உரிமை கொண்டாடுபவர்கள் சொல்லும் சரித்திரங்களை அது சந்திக்கு இழுக்கிறது. தேசியக் கதையாடல்கள், எல்லைக் கோடுகள் என்று பொதுவாகப் பேசப்படும் விஷயங்களுக்கு மாற்றாக இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மனிதர்களின் நினைவுகள், எதிர்பார்ப்புகள், வேதனைகள் ஆகியவற்றை மையத்துக்குக் கொண்டுவருகிறது.
அருட்சகோதரி எமிலியா அன்று சாட்சியாக நின்று பார்த்த சோக நாடகத்தின் காட்சிகள் இன்றும் தொடர்கின்றன. இப்போது அணு ஆயுத பலம் பெற்றிருக்கும் இரண்டு தேசங்களுக்கு இடையிலான கசப்பான சண்டையாக அது மாறியுள்ளது. ஆயுதம் ஏந்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் மதச்சார்பற்ற சக்தியாகக் கருதப்படும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான போராக அது மாறியுள்ளது. பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரம் பெற்ற 1947லிருந்து, காஷ்மீரை யார் ஆள்வது என்பது தொடர்பான சண்டை இரு தேசங்களுக்கு இடையில் நடைபெற்றுவருகிறது. அந்தச் சண்டை காஷ்மீரின் வளர்ச்சியை முடக்கிப் போட்டுள்ளது. போர்களை உருவாக்கியுள்ளது. லட்சக்கணக்கான காஷ்மீரிகளின் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கியுள்ளது. காஷ்மீரின் கம்பீர அழகைச் சூறையாடியுள்ளது.பாரமுல்லா சம்பவங்கள்:

உண்மையான பிரச்னை, பிரிவினையின் கறுத்த மேகங்களால் மூடப்பட்டு, தேசியவாதத்தின் சூறைக்காற்றுக்கு நடுவே சிக்கித் தவிக்கிறது. 1947ன் இலையுதிர் காலத்தில் பாரமுல்லாவின் நதிக்கரையில் நடந்த அந்தச் சம்பவங்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான முதல் சண்டையின் விளைவுகளைத் தீர்மானித்தன. அங்குதான் அந்தச் சண்டை உருத்திரள ஆரம்பித்தது.
இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறியதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களின் நினைவுகளைப் பதிவு செய்வதுதான் முதலில் என் நோக்கமாக இருந்தது. இந்தியப் படையினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான சண்டைகள் பற்றிய செய்திகளைச் சேகரிக்க நான் பலமுறை அந்தப் பகுதிகளுக்குப் போயிருக்கிறேன். எந்தவொரு சம்பவம் குறித்தும் முற்றிலும் முரண்பட்ட இரு தரப்பு விவரிப்புகளை வைத்து உண்மை எதுவாக இருக்கும் என்ற முடிவுக்கு வர நான் பெரிதும் சிரமப்பட்டிருக்கிறேன். அதிலும் காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருக்கும் அஹ்தூ ஹோட்டலில் தொலைபேசித் தொடர்புகள் மிகவும் பிரச்னைக்கு உரியவையாக இருந்தன. எனவே, அந்த நிருபர்களுக்கான மையத்தில் இருந்து செய்திகளை உடனுக்குடன் அனுப்ப மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். இந்த முறை போனபோது வேறு ஒரு பெரிய இலக்குடன் சென்றேன். இந்துக்கள் மிகுதியாக வாழும் இந்தியா, இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் உருவானதை ஒட்டி நடந்த பிரிவினைக் கலவரங்களை மையமாக வைத்து ஒரு வானொலி நிகழ்ச்சி தயாரிக்கத் தேவையான தகவல்களைச் சேகரிப்பதுதான் அது.
பிரிவினைக்கால நிகழ்வுகள்:

காஷ்மீரின் பிரிவினைக்கால நிகழ்வுகள் மற்ற பகுதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பிற பகுதிகளில் அரசியல் படுகொலைகள், உள்ளூர் அதிகாரப் போட்டிகள், பழிவாங்கல்கள் என வன்முறைகள் தலைவிரித்தாடின. சுருக்கமாகச் சொல்வதானால், அந்த வன்முறை நிகழ்வுகள் இஸ்லாமியரை ஒரு பக்கத்திலும் இந்துக்களையும் சீக்கியர்களையும் அவர்களுக்கு மறு பக்கத்திலும் நிறுத்தின. பல லட்சக்கணக்கானவர்கள் விரும்பியோ கட்டாயத்தினாலோ இடம் பெயர நேர்ந்தது. இந்த நூற்றாண்டின் மிக மோசமான படுகொலை நிகழ்வான அந்தப் பிரிவினையில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் ஆரம்பத்தில் சமூக வன்முறையாக அது தொடங்கவில்லை. ஆனால், பஞ்சாபில் பிரிவினைக் கொலைகள் குறைய ஆரம்பித்ததும் காஷ்மீரில் ஆக்கிரமிப்பும், மத, அரசியல், சமூக வன்முறைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. அந்தக் கலவரம் புதிதாகப் பிறந்த இரு தேசங்களுக்கு இடையிலான போராக மாறியது.பழங்குடியினர் ஊடுருவல்:

காஷ்மீர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த சமஸ்தானத்தை இந்து மகாராஜா ஒருவர் ஆண்டுவந்தார். இந்துக்களிடமிருந்து சகோதர இஸ்லாமியர்களை விடுவிக்கும் நோக்கில் ஆஃப்கனிஸ்தானிலிருந்து பழங்குடியின ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். முதன்முதலில் பாரமுல்லாவில் இருந்த கத்தோலிக்க மடாலயத்தைச் சூறையாடினர். பிறகு அதைத் தங்களுடைய ராணுவத்தளமாக ஆக்கிக்கொண்டனர். வான்வழி, தரை வழி என இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களால் தொடர்ந்து அந்த மடாலயம் தாக்குதலுக்கு உள்ளானது. அந்தப் போரின் முதல் கட்டம் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது.

நான் முதலில் பாரமுல்லாவுக்குப் போனபோது அந்தக் கத்தோலிக்க மடாலயத்தைச் சென்று பார்க்கவில்லை. 1947ல் நடந்தவற்றை நினைவுகூர்ந்து சொல்லும்வகையில் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றே நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், எதுவும் என் திட்டத்தின்படி நடக்கவில்லை. வயதானவர்களைச் சந்தித்துப் பேட்டி எடுக்க விரும்பியிருந்தேன். எனக்கு உதவ ஓர் உள்ளூர் நிருபர் முன்வந்திருந்தார். ஆனால், இந்திய உளவுத்துறைக்கு என் வருகை தெரியவந்திருந்தது. நான் எதற்காக அங்கு வந்திருக்கிறேன்; யார் யாரைச் சந்திக்கப் போகிறேன் என்று தெரிந்துகொள்ள இந்திய ராணுவத்தினர் அந்த உள்ளூர் நிருபரை இரண்டு முறை அழைத்து விசாரணை செய்தனர். அதற்குப்பின், அவர் என்னிடமிருந்து விலகி ஓடுவதிலேயே குறியாக இருந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான மடாலயம்:

எனவே, நான் திட்டமிட்டதற்கு முன்பாக, பகல் பொழுதிலேயே பாரமுல்லாவிலிருந்து ஸ்ரீநகருக்குத் திரும்ப வேண்டிவந்தது. வரும்வழியில் மதில் சுவருக்கு மேலாக எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றைக் கண்ணுற்றேன். வண்டியை அங்கு ஓட்டச் சொன்னேன்.

அதற்குப் பக்கத்தில் ஒரு கான்வெண்ட் இருந்தது. மடாலயக் கட்டடங்களிலேயே மிகவும் பழமையானது அதுதான். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கர் ஒருவர்தான் சிஸ்டர் சுப்பீரியராக இருந்தார். அவரைச் சந்தித்தேன். பழங்குடியினரின் தாக்குதலை நேரில் பார்த்தவர்களைத் தேடி வந்திருப்பதாக அவரிடம் சொன்னேன். 'நல்லது, அந்தக் காலகட்டத்தில் இருந்தே வசித்துவரும் கன்யாஸ்திரீ ஒருவர் இங்கு இருக்கிறார். அவர் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவரிடம் கேட்டு, உங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்' என்றார்.

அருட்சகோதரி எமிலியா, கன்யாஸ்திரீகளுக்கான வெளிர் சாம்பல் நிறச் சீருடை அணிந்திருந்தார். எந்தவித விளக்கமும் தூண்டுதலும் தேவைப்படவில்லை. அன்று கண்முன் நடந்த கோரச் சம்பவங்களையும் அதைத் துணிச்சலுடன் எதிர்கொண்டதையும் அவர் விவரிக்க ஆரம்பித்தார். 'பாதிரியார்களின், கன்யாஸ்திரீகளின் விசுவாசமும் சேவையும் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட தருணங்களில் அதுவும் ஒன்று. கிறிஸ்து ராஜாவின் விருந்து தினத்துக்கு அடுத்த நாள் அந்தப் பழங்குடியினக் கும்பல் இங்கு முற்றுகையிட்டது. நாங்கள் அப்போது மருத்துவமனையில் பணியில்தான் இருந்தோம். ஆதரவற்றவர்களுக்காக எப்போதும் திறந்தே கிடக்கும் மடாலயத்தின் கதவுகளின் வழியாக அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினார்கள். கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொள்ளையடித்தார்கள். தேவாலயத்தை இடித்துத் தள்ளினார்கள்.'

வன்புணர்ச்சி பற்றிய விவரங்களை அருட்சகோதரியிடம் கேட்கும் மன தைரியம் அன்று என்னிடம் இல்லை. வயது முதிர்ந்த இத்தாலிய அருட்சகோதரி எமிலியா, அன்று நடந்த சம்பவங்களை பெரும் உற்சாகத்துடன் சாகசக் கதை ஒன்றைச் சொல்லும் பாணியில் விவரித்தார். ஆனால், நினைவின் கண்ணிகள் வயதின் முதிர்ச்சியினால் வலுவிழக்கத் தொடங்கியிருந்தன.
========================
காஷ்மீர் : முதல் யுத்தம்
ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் :. மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்

இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X