ஆட்சியின் அச்சாணிகள் - பொது ஊழியர்கள்

Added : ஆக 23, 2014 | கருத்துகள் (9) | |
Advertisement
நம் குடியரசின் ஆரம்ப கால ஆட்சியின் போது, உலகளவில், ஊழல் குறைந்த நாடுகளின் வரிசையில் உயர்ந்து நின்றது நம் நாடு. இன்று தொண்ணுாறுக்கும் கீழே தாழ்ந்து போய், தலைகுனிந்து நிற்கிறது. அனைத்து அரசு துறைகளிலும் ஊழலின் ஆதிக்கம் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது. மித மிஞ்சும் லஞ்சத்தின் முன், நீதி, நியாயங்கள், சட்ட விதிமுறைகள் எல்லாம் முடங்கி விடுகின்றன. காசின்றி காரியங்கள் நடவாது
ஆட்சியின் அச்சாணிகள் - பொது ஊழியர்கள்

நம் குடியரசின் ஆரம்ப கால ஆட்சியின் போது, உலகளவில், ஊழல் குறைந்த நாடுகளின் வரிசையில் உயர்ந்து நின்றது நம் நாடு. இன்று தொண்ணுாறுக்கும் கீழே தாழ்ந்து போய், தலைகுனிந்து நிற்கிறது. அனைத்து அரசு துறைகளிலும் ஊழலின் ஆதிக்கம் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது. மித மிஞ்சும் லஞ்சத்தின் முன், நீதி, நியாயங்கள், சட்ட விதிமுறைகள் எல்லாம் முடங்கி விடுகின்றன. காசின்றி காரியங்கள் நடவாது என்பது, எழுதப்படாத சட்டமாகி விட்டது.

இந்த விபரீதப் போக்கை தடுத்து நிறுத்தி, நிதி நிர்வாகத்தை நிலை நிறுத்த வேண்டிய உயர் மட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும், ஊழலின் அடிமைகளாகி, அக்கிரம ஆதாயமடைவது ஒரு தேசிய அவமானம். மக்கள் தொகையில் பாதிக்கு மேல் வறுமையில் உழல்கிறது. நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போகின்றன. அனைத்துயிர்களின் வாழ்வாதாரமான நீர் நிலைகள், ரசாயனக் கழிவு மற்றும் சாக்கடைகளின் சங்கமமாகி, உயிர்க்கொல்லி நோய்களின் உற்பத்திக்களமாகி விட்டன. விலங்கினங்களின் வாழ்விடங்களும், விளைநிலங்களும் கான்கீரிட் காடுகளாகி வருகின்றன. நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது. இத்தனை அவலங்களுக்கும் முழுக் காரணம் பொது ஊழியர்கள். பொது ஊழியர்கள் இரு வகையினர். கடைநிலை ஊழியரிலிருந்து உச்சக்கட்ட உயர் அதிகாரி வரையிலான அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஒரு வகை. உள்ளாட்சி, சட்டசபை மற்றும் பார்லிமென்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மறுவகை. இந்த இருவகையினரும் தான் ஆட்சியின் அச்சாணிகள். மக்களாட்சியின் உயிர் நாடியான சட்டத்தின் ஆட்சியை கட்டிக் காக்க வேண்டியது இவர்களின் கட்டாயக் கடமை. மக்கள் தொகையில் இவர்கள், 7 சதவீதம் தான்.

நாட்டின் நல்வாழ்வுக்காக அமலிலுள்ள அனைத்து சட்டவிதிமுறைகளையும், அப்பழுக்கின்றி அமல்படுத்த வேண்டியது அனைத்து துறை அரசு அலுவலர்களின் பொறுப்பு. இவர்களின் பணிக்காக, மக்கள் வரிப் பணத்திலிருந்து மாதம் தவறாமல் சம்பளம், அது தவிர, எத்தனையோ பணப் பயன்கள். அத்துடன் ஓய்வூதியம். அவர் ஆயுளுக்குப் பின் அவருடைய வாழ்க்கை துணைக்கும் உயிருள்ள வரை ஓய்வூதியம் என, ஏராளமான சலுகைகள்.அரசு அலுவலர்களுக்கு, வயது வரம்பை வைத்து ஓய்வு. ஆனால், மக்கள் பிரதிநிதிகளுக்கு அது கிடையாது. முதுமை முற்றி மூச்சிரைக்கும் போதும் பதவியில் தொடரலாம். கல்வித் தகுதியும் இல்லை. உள்ளாட்சி உறுப்பினர்கள் தவிர, மற்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் சம்பளம், வீடு, பங்களா,வாகனம், பயணப்படி, அமர்வுப்படி, உயர் வகுப்பு பயண வசதி, பலருக்கு பகலிரவாய் பல அடுக்குப் பாதுகாப்பு, சிவப்பு விளக்கு வாகன அணிவகுப்பு என்று, அவசியமில்லா ஆடம்பரங்கள் உள்ளன.சில சமயங்களில் ஆய்வுப் பயணம் என்ற பெயரால், உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் உல்லாசப் பயணங்கள். அத்தனையும் மக்கள் வரிப்பணத்திலிருந்து தான்.

சம்பளம் உட்பட, சகலமும் கொடுக்கும் நாட்டு மக்களே பொது ஊழியர்களின் எஜமானர்கள். அந்த உப்பை தின்று வாழும் ஊழியர்கள், அதற்கு 100 சதவீதம் விசுவாசமாக உழைத்தாக வேண்டும். மாறாக, மக்கள் நலனை முழுவதும் புறக்கணித்துவிட்டு, தான், தன் குடும்பம், உற்றார் - உறவினர் தொழில் முன்னேற்றம் என்று, தங்கள் பதவியை பயன்படுத்தி பதவிக்காலம் முழுவதும் பயனடைகின்றனர்.சட்ட விதிமுறைகளை மீறுவதும், அகப்படும் பொது சொத்துகளை அபகரிப்பதும், லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதும் சட்டப்படி கிரிமினல் குற்றங்கள். அவைகளை செய்பவன் ஒரு கிரிமினல் குற்றவாளி. சமுதாய விரோதி, தேச துரோகி. அவன் ஒரு நாளும் பதவியில் இருக்கவோ, சம்பளம் பெறவோ சற்றும் தகுதி இல்லாதவன்.நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான சட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை. ஆனால், சில சமயங்களில், அதற்கு நேர் எதிராக அவர்கள் செயல்படுவது துரோகம்.ஓர் உதாரணம்: கிரிமினல் குற்றங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியில் தொடரக் கூடாது என்று உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம். ஆனால், அந்த உத்தரவை ஒன்றுமில்லாமல் செய்யும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தைப் பிணைந்து, அவசர சட்ட அந்தஸ்து கொடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்புகிறது மத்திய அரசு.அதன்படி, சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் இருக்க வேண்டிய தண்டனை கைதியும் அப்பீல் செய்து விட்டு, சட்டமியற்றும் பதவியில் தொடரலாம். தேர்தல்களில் போட்டியிடலாம். அமைச்சர்களாகி ஆட்சியில் புரியலாம்.

தேச பக்தியும், நிர்வாகத் திறனும் மிக்க அறிவாளிகள் கோடிக் கணக்கில் குவிந்து கிடக்கும் நம் பாரத நாட்டில், சிறை தண்டனை பெற்ற குற்றவாளிகளையே சட்டம் இயற்றுபவர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவியில் தக்க வைக்கவேண்டிய நிர்பந்தம் என்ன என்பது புரியவில்லை. 543 மக்களவை உறுப்பினர்களில், 2004ல், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 128 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள். அதுவே, 2009ல், 161 ஆக உயர்ந்தது.நாட்டின் பிரதான கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட அவர்கள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, மோசடி, ஊழல், ஊழலில் சொத்து குவித்தல் போன்ற கொடிய குற்றங்களைப் புரிந்தவர்களாக புலன் விசாரணையில் கண்டறியப்பட்டவர்கள். அவர்களும், அவர்களுடைய அந்தரங்கக் கூட்டாளிகளும், அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் நம் நாட்டுப் பணம், 70 லட்சம் கோடிகளைத் தாண்டி விட்டது என்பது நம்பகமான தகவல்.பொது ஊழியர்களின் அதர்மச் செயல்களால் சீரழிந்துவரும் நம் நாட்டைக் காப்பாற்ற, ஊழல் எங்கிருந்தாலும் அதை ஒன்று கூடி தட்டிக் கேட்போம்.ஊர்கூடி முயன்றால் ஒழிக்க முடியாதது ஒன்றுமில்லை.புனிதமாகட்டும் பொது ஊழியர்கள் சேவை!
இ-மெயில்: nkveluadsp@gmail.com

- என்.கே.வேலு --
கூடுதல் கண்காணிப்பாளர்,
பணி நிறைவு

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malayam Annamalai - Tirutani,இந்தியா
24-ஆக-201423:57:46 IST Report Abuse
Malayam Annamalai அரசு ஊழியர்களில் 25சதம் பணியை பற்றி அறிந்து தெரிந்து பணியாற்றுகின்றனர் 25 சதம் பணியை பற்றி தெரியவில்லை என்றாலும் தெரிந்துகொண்டு பனியா ற்றுகின்றனர் 25சதம் பணியை பற்றி தெரிதும் அறிந்தும் இருந்தும் பணிசெய்ய விருப்பமில்லாமல் சம்பளம் மட்டும் பெற்றுக்கொள்கின்றனர் 25 சதம் பனியும்தெரியாமல் வேலையும் செய்யாமல் சம்பளம் மட்டும் பெறுகின்றனர்.இந்திய ஆட்சிப்பணியில் உள்ளவர்கள் எல்லாவற்றிற்கு மேலாக தங்களுக்கு அட்டும எல்லாம் தெரியும் பிறதுறையை சேர்ந்த பட்டம் பெற்ற அறிவாளிகளை கூட மதிக்காமல் கேவலமாக நடத்துவது தனி சிறப்பு இதனாலேயே படித்த அறிவாளிகள் அரசுப்பணியில் சேராமல் தங்கள் கல்வியையும் அறிவையு மதிக்கும் தனியார் துறையை நாடுகிறனர் .அறிவாளிகள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர் என்று கூப்பாடு போடுகின்றனர் .மேலதிகாரிகள் முதலில் தூஇமையாக இருந்தால் மட்டுமே கீழ்மட்டத்தில் லஞ்சம் ஒழிக்க முடியும் தன கீழ் பணியாற்றுபவரை டீ,காபி வாங்கி வரச்சொல்லி காசு தரவில்லை என்றால் அவர் அதை சரிகட்ட லஞ்சம் வானத்தான் செய்வார் .முதலில் அரசியல் வாதிகள் தூய்மையாக இருக்கவேண்டும் .எந்த அரசியல்வாதியின் kir இமினால் வழக்கும் 2 ஆண்டுகளில் முடித்துக்கொள்ளவேண்டும் என்கிற சட்டம் வர வேண்டும் வாய்தா வாங்க அரசுக்கும் குற்ற சாட்டப்பட்டவருக்கும் குறிப்பிட்ட வாய்தாக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் இவற்றை சரி செய்யா அரசுக்கு தைரியமு துணிச்சலும் தேவை. நம் நம்பிக்கை பிரதமர் நடத்திக்காட்டுவார் என நம்புவோம் .வாழ்க இந்திய ஜனநாயகம்
Rate this:
Cancel
gmk1959 - chennai,இந்தியா
24-ஆக-201422:02:55 IST Report Abuse
gmk1959 இந்த இடத்தில் ஊழல் நடை பெறுகிறது இன்னார் லஞ்சம் வாங்குகிறார் என்று யாரிடம்சொல்வது என்றுதான் தெரியவில்லை. கோவிலுக்கு சென்று கடவுளிடம் சொல்ல கூட அர்ச்சகருக்கு லஞ்சம் கொடுக்கவேண்டுமே
Rate this:
Cancel
Ramanathan Pillai - Tirunelveli,இந்தியா
24-ஆக-201420:44:17 IST Report Abuse
Ramanathan Pillai ஊழலின் ஊற்றுக்கண் நமது நாட்டின் தேர்தல் முறை. ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு கட்சியும் பல கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து, சில பல கட்சிகள் திருமங்கலம் பார்முலா என்னும் மக்களுக்கு பணம் விநியோகம் செய்து வேட்பாளரை ஜெயிக்க வைத்து ஆட்சியை பிடிக்கிறார்கள். அதன் பின் அடுத்த ஐந்து வருடமும் போட்ட பணத்தை எடுப்பதிலும் அடுத்த தேர்தலுக்கு தேவையான நிதியை திரட்டுவதிலுமே கழிகிறது. அரசியல்வாதிகள் லஞ்சம் திரட்ட உதவி புரிவது அரசு ஊழியர்கள். ஆக மொத்த இயந்திரமும் நாறிக்கிடக்கிறது. இதிலிருந்து இப்போதைக்கு விமோசனம் கிடைப்பதற்கு உண்டான எந்த அறிகுறியும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X