"டிவி'யில் காமெடி சேனலை ரசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. திரையில், வண்டு முருகன் காமெடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
மித்ரா, சமையலறையில் பிஸியாக இருந்தாள்; சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, சட்னி தயாரானது.
"டிவி'யை பார்த்துக் கொண்டே விவாதத்தை துவக்கிய சித்ரா, ""ஏற்றுமதியாளர் சங்கம் துவங்கி, 25 வருஷமாச்சு. படுஅமர்க்களமா விழா நடத்த திட்டமிட்டிருக்காங்க. வர்ற 31ம் தேதி, மத்திய, மாநில அமைச்சர்களை கூப்பிட்டு, பங்ஷன் நடத்துறாங்க. அடுத்து, மத்த தொழில் அமைப்புகளை சேர்ந்தவங்க, தொழிற்சங்கத்தை சேர்ந்தவங்க, வங்கி நிர்வாகிகள் என ஒவ்வொரு தரப்பையும் அழைச்சு, வருஷம்பூரா விழா நடத்தப்போறாங்க. ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருக்காங்க. அதனால, தொழில் துறையை சேர்ந்தவங்க, படுகுஷியா இருக்காங்க. விழா ஏற்பாடு, ஜோரா நடந்துக்கிட்டு இருக்கு,'' என்றாள்.
"தொழில் துறையை சேர்ந்தவங்க, எந்த விழா நடத்துனாலும், அமர்க்களப்படுத்துறது தெரிஞ்சது தானே,'' என்று பதில் சொன்ன மித்ரா, ""கலெக்டர் ஆபீசுல, வீடியோ அறையில் 60 "இன்ச்' எல்.இ.டி., "டிவி' மாட்டியிருக்காங்க. அரசாங்கத்தோட சாதனைகளை ஒளிபரப்பணும்னு உத்தரவு. ஆனா, ஒரு மாசம் கழிச்சுதான் கேபிள் கனெக்ஷன் கொடுத்தாங்க. "டிவி'யை ஆன் செய்ததும்... பார்க்காதே... பார்க்காதே...னு சினிமா பாட்டு ஓடியிருக்கு. எல்லோருமே அதிர்ச்சி ஆகிட்டாங்க. அதுக்கு அப்புறமா, பசுமை வீடுகள் திட்ட வீடியோ ஓளிபரப்பாச்சு. இப்ப, "டிவி'யை பயன்படுத்துறதே இல்லை,'' என அங்கலாய்த்தாள்.
"கவலைப்படாதடீ... புது கலெக்டர் ஆபீஸ் கட்டிக்கிட்டு இருக்காங்கள்ல, அங்க "வீடியோ ரூம்' ரெடி செஞ்சு, சாதனையை "டெலிகாஸ்ட்' பண்ணுவாங்க. அதுவரைக்கும் அமைதியா இரு,'' என்று அமைதிப்படுத்தினாள் சித்ரா.
"புது கலெக்டர் ஆபீசுனு சொன்னதும் ஞாபகம் வருது. குட்டை மாதிரி பள்ளமா இருக்கிற அந்த எடத்துக்கு, குளத்துல இருந்து மண் எடுத்து கொட்டப்போறோம்னு பேசினாங்களே? என்னாச்சு?'' என கேள்வி எழுப்பினாள் மித்ரா.
"ஆண்டிபாளையம் குளத்துல இருந்து, 5,000 லோடு மண் எடுக்கலாம்னு கலெக்டர் சொன்னார். குளத்துல மண் எடுக்கறதுக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் வரைக்கும் போயி, பெர்மிஷன் வாங்கணுமாம். அதனால, இப்போதைக்கு மண் கொட்டி மேடு படுத்துற திட்டத்தை, "ஸ்டாப்' பண்ணியிருக்காங்க,'' என விளக்கினாள் சித்ரா.
"முழுசா "ஸ்டாப்' பண்ணிட்டாங்கன்னா... மழைக்காலத்துல, கலெக்டர் ஆபீசுக்கு பரிசல் சர்வீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் வந்துரும். அதுக்குள்ள பள்ளத்தை மூடுனாங்கன்னா பரவாயில்லை...'' என்று கிண்டலடித்தாள் மித்ரா.
"மாநகராட்சியை பத்தி, எந்த சேதியும் இல்லையா; ரொம்ப நாளாச்சே,'' என, சித்ரா கேட்க, ""மாநகராட்சியில புது கட்டடங்களுக்கு வரி போடுறதுக்கு ஆள் இல்லையாம்,'' என, மித்ரா ஆரம்பித்தாள்.
"ஆமாம்... நானும் கேள்விப்பட்டேன். கொஞ்சம் விளக்கமா சொல்லேன்...'' என சித்ரா கேட்டதும், "நம்ம கார்ப்பரேஷன்ல, நாலு ஜோன் இருக்கு. புது கட்டடங்களுக்கு "டேக்ஸ்' விதிக்க, ஒவ்வொரு ஜோன்லயும், ஒவ்வொரு ஆர்.ஐ., இருந்தாங்க. ஒருத்தர் "ரிட்டையர்டு' ஆயிட்டார். ரெண்டு பேரை வேறு சீட்டுக்கு மாத்திட்டாங்க. நாலு ஜோனுக்கும் ஒரே ஒரு ஆர்.ஐ., மட்டும் தான் இருக்காரு. மாநகராட்சி முழுக்க ஒருத்தரே "டேக்ஸ்' விதிக்கணும்னா, முடியுற காரியமா? இனி, "கவனிப்பு' இல்லாம, "டேக்ஸ்' விதிக்கிறது கஷ்டம்தான்னு புலம்பிக்கிட்டு இருக்காங்க. அதேநேரத்துல,"கவனிப்பு' ஒரே இடத்துக்கு வரணும்னு, திட்டம் போட்டுத்தான், மத்த ரெண்டு பேரையும், வேற சீட்டுக்கு மாத்தியிருக்காங்கன்னு, பேசிக்கிறாங்க,'' என்று, விவாதத்தை முடித்தாள் மித்ரா. பஜ்ஜி தட்டு காலியாகியிருந்தது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE