உலுக்கும் நினைவுகள்| Dinamalar

உலுக்கும் நினைவுகள்

Updated : செப் 12, 2014 | Added : ஆக 28, 2014 | கருத்துகள் (1)
Advertisement
உலுக்கும் நினைவுகள்

பாரமுல்லாவில் நடந்த அந்த முதல் தாக்குதல் குறித்து நான் விசாரிக்க ஆரம்பித்தபோது அந்தச் சம்பவங்களை நினைவில் வைத்திருந்த மனிதர்கள் அனைவரும் பெரும்பாலும் விடைபெற்றுச் சென்றிருந்தனர். கடந்த காலத்தின் புகை மூட்டத்துக்குள் அந்த நினைவு ரயிலின் கடைசிப் பெட்டியும் மறைய ஆரம்பித்திருந்தது. வெறும் பின்புறச் சிவப்பு விளக்கு மட்டுமே மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்தது. நான் மட்டும் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் அதில் தொற்றிக்கொள்ளவில்லை என்றால் அந்த நினைவுகள் இந்த உலகில் இருந்து என்றென்றைக்குமாக மறைந்து போயிருக்கும். பழங்குடி ராணுவத்தின் கொடூரச் செயல்கள், கிறிஸ்தவ மடாலயம்மீது நடத்தப்பட்ட தாக்குதல், கொள்ளையடிப்பு, குறிப்பாக முஸ்லிம் அல்லாதோரின் கொலைகள், கடத்தல்கள் என எல்லாமே அந்த நகரத்தின் நவீனகால வரலாற்றின் மறக்கக்கூடாத பக்கங்களாக இருக்கவேண்டியவை.
செயிண்ட் ஜோசப் மருத்துவமனையின் அருட்சகோதரி எமிலியா மட்டுமே அந்தச் சம்பவங்களை நேரில் பார்த்த ஒரே சாட்சியாக இருந்தார். நகரில் வேறு பல வயோதிகர்களும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், துயரமும் சரித்திர முக்கியத்துவமும் வாய்ந்த அந்தக் கடந்தகால நாடகத்தின் திரைச்சீலை மெல்ல அவிழ்ந்து, அரங்கின் கதவுகள் ஒவ்வொன்றாக மூட ஆரம்பித்திருந்தன. அனைத்து வாய்மொழி ஆதாரங்களையும் இன்னபிற தரவுகளையும் சேகரிக்க நான் காற்றாகப் பறந்தேன். தில்லியில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் கிறிஸ்தவ மடாலய மருத்துவமனை நோக்கிய என் பயணம் குறித்து ஒரு கட்டுரையை எழுதினேன். அதைப் படித்த பலரும் எனக்குக் கடிதங்கள் அனுப்பினர்.


கடிதங்கள் தந்த விளக்கம்:

பழங்குடியினரை விரட்டி அடித்த இந்திய ராணுவ வீரர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவருடைய உறவினரிடமிருந்தும் கடிதம் வந்திருந்தது. ஏதோ ஒரு தனிப்பட்ட ஆர்வத்தில் நான் ஆரம்பித்த செய்தி சேகரிப்பு என் வாழ்க்கையின் லட்சியமாக ஆனது. செயிண்ட் ஜோசப் மருத்துவமனையில் அன்று நடந்த தாக்குதலுக்கும், காஷ்மீர் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக நடந்த முதல் ராணுவத் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பு எனக்கு ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்தது. காஷ்மீர் ஏன் இன்று ஒரு போர்க்களம் ஆகிக்கிடக்கிறது என்ற உண்மையைக் கண்டுபிடிக்கவும் விளக்கவும் நானே சொந்தமாக மேற்கொண்ட ஒரு மாபெரும் பயணமாக அது பரிணமித்தது.
அன்றைய தாக்குதலில் கர்னல் டைக்ஸு ம் அவருடைய மனைவியும் கொல்லப்பட்டதால் அவர்களுடைய பச்சைக் குழந்தை அநாதை ஆகியிருந்தது. அருட்சகோதரி எமிலியா அந்தக் குழந்தையைத் தான் அன்புடன் கவனித்துக்கொண்டதைச் சொன்னார். மருத்துவமனையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட நிலையிலும் குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுத்திருக்கிறார். டைக்ஸின் மூத்த குழந்தைகளை (ஒரு குழந்தைக்கு 5 வயது; இன்னொன்றுக்கு 2 வயது) முடிந்தவரை ஆறுதல்படுத்தியிருக்கிறார். 'சின்னக் குழந்தை பெரிய குழந்தையின் கையைப் பிடித்தபடி அழுதது. ஆறுதலாகச் சாய்ந்துகொள்ளத் தாயோ தந்தையோ இல்லை. அந்தக் காட்சி என் மனத்தை உருக்கிவிட்டது.
'அப்பாவும் அம்மாவும் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். கவலைப்படாதீர்கள்' என்று சொன்னேன். இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கொடி இறக்கப்பட்ட நேரத்தில்தான் அந்தக் குழந்தைகள் பிறந்திருந்தனர். அவர்களுடைய பிஞ்சுத் தோள்களில்தான் எத்தனை பெரிய பாரம்? தங்கள் பெற்றோரின் துயரமிகு மரணத்தை அவர்கள் எப்படித்தான் மீறி வரப்போகிறார்களோ என்று கலங்கினேன்' என்றார்.


தகவல் தந்த 3 பேர்:

பாரமுல்லா தாக்குதல் தொடர்பான எல்லா வாக்குமூலங்களையும் நான் சேகரிக்க விரும்பினேன். என் தொடர்முயற்சியாலும் அதிர்ஷ்டத்தாலும், தாக்குதலின்போது அந்த மருத்துவமனையில் தஞ்சம் புகுந்த மூன்று பேரைத் தேடிக் கண்டுபிடித்தேன். ஒருவர் கராச்சியில் இருந்தார். இன்னொருவர் கொல்கத்தாவில் இருந்தார். இருவரும் பேட்டி தரவோ தங்கள் பெயர் வெளியே தெரியவோ விரும்பவில்லை. ஆனால், அன்று நடந்தவற்றைத் தங்கள் கைப்பட எனக்கு எழுதிக்கொடுத்தனர். மூன்றாவது நபரான டாக்டர் ஃபிரான்சிஸ் ராத் ஒரு கத்தோலிக்கர். அவர் இப்போதும் பாரமுல்லா செயிண்ட் ஜோசப் மருத்துவமனைக்கு வெகு அருகில் வசித்துவருகிறார். தாக்குதல் நடந்தபோது அவருக்கு வயது 22. குடும்பத்துடன் செயிண்ட் ஜோசப் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்தார். 'இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைத்தே பார்த்திருக்கவில்லை. அவர்கள் சுற்றி வளைத்ததும் நிலைமை பயங்கரமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச் சூடு' என்றார்.


லஷ்கர் நடத்திய வெறியாட்டம்:

நகரின் இன்னொரு மூலையில் வசித்த சீக்கியக் குடும்பத்தினர், தங்கள் சமூகம் சந்தித்த இன்னல்களைப் பற்றிப் பேசினர். லஷ்கர் படை, கண்ணில் பட்ட ஆண்களையெல்லாம் வெட்டிக் கொன்றது. பெண்களைக் கடத்திச் சென்றது. இரண்டு வயோதிக முஸ்லிம்கள் தங்கள் அனுபவத்தைச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் லஷ்கர் தீவிரவாதிகளுடன் சுமுகமான உறவையே வெளிப்படுத்தியிருக்கிறார். இருந்தும் அவர்களுடைய வீடுகளும் கடைகளும் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டன என்பதை அவர்கள் விவரித்தனர். லஷ்கர் தீவிரவாதிகள் காஷ்மீரை, முஸ்லிம் சகோதரர்களுக்காக, இந்து அரசரிடமிருந்து விடுவித்துக்கொடுக்க வந்திருந்தனர். ஆனால், அவர்களே முஸ்லிம்களின் வீட்டை அடித்து நொறுக்கிவிட்டுச் செல்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு வெறியில் அவர்கள் இருந்திருக்கக்கூடும்!
சமீப காலத்தில் பாரமுல்லா மாவட்டம் பிரிவினைவாதிகளின் கோட்டையாக ஆகியுள்ளது. 1947ல் லஷ்கர் பழங்குடியினரிடம் அனுபவித்ததைவிடப் பல மடங்கு அதிகமான உயிரிழப்பையும் உடைமை அழிப்பையும் பாரமுல்லா மாவட்டம் அதன்பின் சந்தித்துவந்துள்ளது. பிரச்னையின் முகம் இப்போது வெகுவாக மாறியுள்ளது. ஆனால், பழங்குடியினர் என்ன காரணத்துக்காக ஆயுதம் ஏந்தி அழித்தொழிப்பில் ஈடுபட்டார்களோ, அதுவே அடி ஆழத்தில் பிரச்னையின் ஆணிவேராக இருந்துவருகிறது.
========================
காஷ்மீர் : முதல் யுத்தம்
ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் : B.R. மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
01-செப்-201414:56:03 IST Report Abuse
P. SIV GOWRI நம்ம துராதிர்ஷ்டம் .நம்ம மொடிஜி மட்டும் அன்று இருந்து இருந்தால் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X