வண்டிப்பேட்டை விநாயகரும், குபேரனும்| Dinamalar

வண்டிப்பேட்டை விநாயகரும், குபேரனும்

Added : ஆக 28, 2014 | |
விநாயகர் வழிபாட்டில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், வண்டிகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு. பொதுவாக வண்டிகளில் பயணம் செல்வோர், பயணம் துவங்கும் முன்னர் விநாயகருக்குத் தேங்காய் உடைத்து வழிபாடு நிகழ்த்திவிட்டுப் பயணத்தை துவங்கும் வழக்கம் உள்ளது. நெடுஞ்சாலைகளில், வண்டிகளை நிறுத்தி விட்டுத் தேங்காய் சூறையடித்து வழிபடுவதற்கான விநாயகர் கோவில்களும் உண்டு. 'வழிவிடு

விநாயகர் வழிபாட்டில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், வண்டிகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு. பொதுவாக வண்டிகளில் பயணம் செல்வோர், பயணம் துவங்கும் முன்னர் விநாயகருக்குத் தேங்காய் உடைத்து வழிபாடு நிகழ்த்திவிட்டுப் பயணத்தை துவங்கும் வழக்கம் உள்ளது.

நெடுஞ்சாலைகளில், வண்டிகளை நிறுத்தி விட்டுத் தேங்காய் சூறையடித்து வழிபடுவதற்கான விநாயகர் கோவில்களும் உண்டு. 'வழிவிடு விநாயகர்' என்ற பெயரிலேயே, சில நெடுஞ்சாலை விநாயகர்களும் உள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, முற்காலத்தில் பெரிய துறைமுகமாக இருந்தது. அங்கு, 'சிந்து யாத்திரை விநாயகர் கோவில்' என்ற ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது.முற்காலத்தில், கடற்பயணம் மேற்கொள்வோர், அவ்விநாயகரைத் தொழுது விட்டே கப்பலேறுவர் என்றும், சிந்து என்றால் கடலைக் குறிக்கும் என்பதால், அவ்விநாயகர், 'சிந்து யாத்திரை விநாயகர்' என்ற பெயரால் அழைக்கப்பட்டதாகவும், தற்போது அவ்விநாயகர் பெயர், 'சிந்தாத்திரி விநாயகர்' என, மருவி வழங்கு வதாகவும், அவ்வூரில், நான் தொல்லியல் துறை அலுவலராகப் பணிபுரியும்போது, கேட்டு அறிந்திருக்கிறேன்.

அதுபோல, துாத்துக்குடியில், புதிதாகப் படகு கட்டி முடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் ஓட்டிப் பார்க்கும்முன், விநாயகருக்குப் படையல்போட்டு, வழிபாடு நிகழ்த்திவிட்டே வெள்ளோட்டம் போகும் வழக்கம் இருப்பதாகவும் தெரியவருகிறது.இன்றும் முச்சந்திகளிலும், தெருமுனைகளிலும், ஆட்டோ நிறுத்தங்களிலும், சிறிய புரை வடிவில், விநாயகர் கோவில்கள் எழுப்பப்படும் வழக்கம் உள்ளது. இவற்றை எல்லாம் இணைத்து யோசிக்கும்போது, 'முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா' என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் வரியும் நினைவுக்கு வருகிறது.ஆம். திரிபுரத்தை எரிப்பதற்காக, தேரில் ஏறிப் புறப்படும் முன்னர், விநாய கரை நினைப்பதற்கு சிவன் மறந்துவிட்டதால், அந்தந்த தேரின் அச்சினை முறித்துவிட்டாராம் விநாயகர்.

தேர்களின், வண்டிகளின் இறைவன் என்று விநாயகர் கருதப்பட்டுள்ளார் என்ற உண்மை, இதன்மூலம் தெளிவாகப் புலப்பட்டது.மதுரை நெல்பேட்டையில் தட்சிணமாற நாடார்கள் எனப்பட்ட, சான்றோர்குல வணிகர்களின் வண்டிப்பேட்டை உள்ளது. அங்கு, கி.பி., ௧௮௨௪ம் ஆண்டில், அச்சமூகத்தவர் ஒரு விநாயகர் கோவில் எழுப்பி உள்ளனர்.இச்செய்தி, திருநெல்வேலி சிந்துபூந்துறையில் உள்ள, தட்சிணமாற நாடார் சங்கத்தில், பராமரிக்கப்படுகிற செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.பொதிமாட்டு வண்டிகளில் பயணம் செய்யும் வணிகர்கள், நெடுந்தொலைவு செல்ல நேர்ந்தால் வழியில், வண்டிமாடுகளை மாற்றுவார்கள். அத்தகைய இடங்களில், மாடுகள் பராமரிக்கப்படும்.

தற்காலத்தில் ரயில் நிலைய சந்திப்புகள் போன்றவை, இத்தகைய வண்டிப்பேட்டைகள். இவற்றை 'கடி' அல்லது 'கெடி' என்றும் வழங்குவதுண்டு.மோட்டார் வாகனப் போக்குவரத்து அறிமுகமாகும் முன்னர், இத்தகைய 'கெடி'கள், நெடுஞ்சாலைகளில், பரவலாக இருந்தன என்று, ௧௯௧௭ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடியில் (கெஜட்), மாவட்ட ஆட்சியராக இருந்த, எச்.ஆர்.பேட், குறிப்பிட்டுள்ளார்.கி.பி., 12-13ம் நுாற்றாண்டுகளுக்கு உரிய வணிகர் கல்வெட்டுகளில், 'கடிகைத் தாவளம்' என்ற பெயரில், இத்தகைய 'கெடி'கள் குறிப்பிடப்படுகின்றன. இக்கடிகைத் தாவளங்களில் எல்லாம், 'தாவளத்திருந்து தன்மம் வளர்க்கும் செட்டி' எனக் குறிப்பிடப்படுகிற தெய்வம், வழிபடப்பட்டதென, கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

செட்டி எனக் குறிப்பிடப்படுகிற இத்தெய்வம், 'சைத்ர ரதம்' என்றும், 'புஷ்பக ரதம்' என்றும் புராணங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிடப்படும் ரதத்தின் உடைமையாளன் ஆன, குபேரனைக் குறிப்பிடும் எனக் கருதுகிறேன். செல்வ கணபதி, குபேரனின் ஓர் அம்சமோ எனத் தோன்றுகிறது.வணிகர்களைப் பொறுத்தவரை, லாபம், சுபம் என்ற இரு தேவியர்களுக்கு நாயகன் விநாயகரே. இது, வட இந்திய மரபு என்று கருதுவது, பிழையாகும்.தமிழகத்தின் மிகப் பழமையான விநாயகர், செட்டி நாட்டு, பிள்ளையார்பட்டிக் குடைவரை விநாயகரே. இவ்விநாயகர், கி.பி., ௬ம் நுாற்றாண்டின் இடைப்பகுதியில், எருக்காட்டூர்க்கோன் பெருந்தச்சன் என்பவனால் வடிவமைக்கப்பட்டு, நகரத்தார்களால் -வணிகர்களால் - தங்கள் குலதெய்வமாகப் போற்றி வழிபடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, 'வணிகச் சாத்து' எனப்படும் பொதிமாட்டு வண்டிக் குழுவினரின் தெய்வமாகவும், நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்வோர் வழிபடும் 'கெடி' அல்லது கடிகைத் தாவளத் தெய்வமாகவும், கப்பல்கள் முதலான வாகனங்கள், வண்டிகளின் தெய்வமாகவும் விநாயகரே கருதப்பட்டு வருகிறார் என, தெரிகிறது. (கட்டுரையாளர், அமைப்பாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்றாய்வு நிறுவனம், சென்னை -௪௪)தொடர்புக்கு: maanilavan@gmail.com

- எஸ்.இராமச்சந்திரன் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X