புதுடில்லி : ''மோட்டார் வாகனங் கள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
டில்லியில், சாலை பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றில் பேசிய, கட்காரி கூறியதாவது:சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றினால், நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளை குறைக்கலாம். அத்துடன், தற்போது அமலில் உள்ள, மோட்டார் வாகனங்கள் சட்டம், 1998க்கு மாற்றாக, மின்னணு நிர்வாக முறையை பயன்படுத்தும், மோட்டார் வாகனங்கள் தொடர்பான, புதிய சட்ட திருத்த மசோதாவை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும். புதிய மசோதா தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், விரைவில் கருத்துகள் கேட்கும் பணி துவங்கும்.அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளில் அமலில் உள்ள நடைமுறைகளை பின்பற்றும் வகையில், பல முக்கிய அம்சங்கள், சட்ட திருத்த மசோதாவில் இடம் பெறும். இவ்வாறு, கட்காரி கூறினார்.