சாந்திவனம் மடத்தின் நோக்கம் அமைதி| Dinamalar

தமிழ்நாடு

சாந்திவனம் மடத்தின் நோக்கம் அமைதி

Added : அக் 14, 2010

குளித்தலை: கரூர் அருகே 60 ஆண்டுக்கு முன் மதமாற்ற நோக்கத்தில் உருவான ஒரு மடம், தற்போது மத நல்லிணக்கம் மூலம் அமைதிக்கு வழிகாணும் இடமாக மாறிவிட்டது. இயற்கை சூழல் நிறைந்த காவிரி கரையில், அமைதி நாடிவரும் வெளிநாட்டினரை கவரும் சுற்றுலாத்தலமாகவும் மாறி வருகிறது.கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது தண்ணீர்பள்ளி. கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இவ்வூரில் காவிரி கரையில் சாந்திவனம் ஆசிரமம் அமைந்துள்ளது.ஃபிரான்ஸை சேர்ந்த பாதிரியார்கள் ஜூலியஸ் மோன்சானே, அபிசிக் ஆனந்தா இருவரும் சேர்ந்து 1950ல் மடத்தை துவக்கினர். மதமாற்றும் நோக்கத்தில் மடம் துவங்கப்பட்டாலும், இங்குள்ள ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தில் நாட்டமடைந்து அமைதிக்கு வழிதேடும் மடமாக மாறிவிட்டது.சாந்திவனத்துக்கு வெளிநாட்டினர் வருகை குறிப்பிட்ட காலங்களில் அதிகம் உள்ளது. இயற்கை சூழலுடன் கூடிய 15 ஏக்கர் தோட்டத்தில் தங்குவதற்கான 50க்கு மேற்பட்ட குடில் அமைக்கப்பட்டுள்ளது.


தென்னை, வாழை, பலா, மா என கனி மரங்கள் இங்கு பந்தலாக நிற்கிறது. இங்கு வளரும் 40க்கு மேற்பட்ட பசுக்களுக்கு தேவையான புல் மற்றும் தீவனம் இவ்வளாகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கு அடுத்து இங்குதான் இயற்கை எழில்சார்ந்த பகுதியில் ஒரு ஆசிரிமம் அமைந்துள்ளது.இங்குள்ள கோவிலில் முறைப்படி தினசரி மூன்றுமுறை வழிபாடு நடக்கிறது. பிரம்மனை பிரதிபலிக்கும் வகையில் நான்கு முனிவர்கள் நான்கு திசைநோக்கி முதுகு ஒட்டிய நிலையில் அமர்ந்துள்ள ஒரு சிற்பமும் தியான மண்டபம் நடுவில் உள்ளது.இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் முறைகளை பின்பற்றி சர்வ மத ஐக்கியமாக வழிபாடு நடக்கிறது. கோவில் சிற்பங்களும் மும்மத இணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சச்சிதானந்தா ஆஸ்ரமத்தில் அமைந்துள்ளது.சுற்றியுள்ள கிராமத்தில் அடிப்படை வசதிக்கு உதவி, குடிநீர் வசதி, சிறுதொழில் உதவி செய்யப்படுகிறது. சாந்திவனம் சார்பில் ஒரு முதியோர் காப்பகம், ஒரு குழந்தைப்பள்ளி நடத்தப்படுகிறது.
ஜனவரி முதல் மார்ச் மற்றும் நவம்பர், டிசம்பரில் வெளிநாட்டினர் இங்கு வருகின்றனர். இவர்களுக்கு உணவு, வழிபாடு வசதி, யோகா மையம், நூலகம் உள்ளிட்ட வசதி செய்துதரப்படுகிறது. தற்போது 60ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சாந்திவனம், தொடர்ந்து அமைதிக்கு வழிகாணும் இடமாக மாறி வருகிறது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X