ஆநிரை மீட்ட வீரக்கல் தேனியில் கண்டுபிடிப்பு| Dinamalar

தமிழ்நாடு

ஆநிரை மீட்ட வீரக்கல்' தேனியில் கண்டுபிடிப்பு

Added : செப் 05, 2014போடி : பதினொன்றாம் நூற்றாண்டில் இரு ஆட்சியர்களிடையே நடந்த போரின் போது, எதிரிகளிடமிருந்து மாடு அல்லது பெண்களை மீட்டு வரும் வீரரின் நினைவாக வைக்கப்பட்ட பழங்கால "ஆநிரை மீட்ட வீரக்கல்' தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போடி சி.பி.ஏ., கல்லூரி வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் சார்பில், முதல்வர் ராஜராஜன் வழிகாட்டுதலின் படி பேராசிரியர்கள் ஞானசேகரன், மாணிக்கராஜ், கபேஷ், கனகராஜ் ஆகியோர் கம்பம் புதுப்பட்டி சுற்றுப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தமிழகத்தில் அரிதாக கிடைக்கக் கூடிய 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் "ஆநிரை மீட்ட வீரக்கல்.' இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X