மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கில் உயிர்ப்போடு கொட்டிக்கிடக்கும் புத்தகங்கள், கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நினைவுகளின் தொகுப்பால், மனித மனங்களை பண்படுத்த தவம் கிடக்கின்றன. சிறந்த புத்தகம் அதன் வடிவமைப்பிலோ, அட்டையின் அழகிலோ, தாளின் தரத்திலோ அல்ல. வாசிப்பவரது மனதில் உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை,
இனி நடக்கப் போவதை... : அப்படியே நிஜக்காட்சிகளாக கண் முன் கொண்டுவந்து அதனோடு ஒருநிலைப்படுத்தி, பரவசப் படுத்தும் அற்புத ஆற்றல் புத்தக வாசிப்பை தவிர வேறு எதிலும் கண்டடைய முடியாது. வாசிப்பையே சுவாசிப்பாக கொண்டு மதுரை புத்தக கண்காட்சியில் வலம் வந்த பலரில், நம் பார்வையில் பட்ட சிலரது கருத்துக்கள்
பிறந்த நாள் பரிசு புத்தகம்
கவுரி (ஓய்வு பெற்ற அரசு டாக்டர்) : எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிறந்த நாள் என்றால் நான் அளிக்கும் அன்பளிப்பு புத்தகம் தான். எனக்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கும் இந்த கண்காட்சி ஒரு வரப்பிரசாதம். எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில், எதை தேர்வு செய்வது என முடிவு செய்ய முடியாத அளவிற்கு புத்தகங்கள் உள்ளன.
விலை பற்றி கவலை இல்லை
டாக்டர் காயத்ரி: அம்மா டாக்டர் கவுரி, சிறுவயது முதல் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நானும் எனது குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை தேடித் தேடி வாங்குகிறேன். ஆன்மிகம், பஞ்சதந்திர கதைகள் என பல தலைப்புகள் இதில் அடங்கும். தினமும் புத்தக வாசிப்பு தேவை என்பதால், விலை பற்றி கவலைப்படுவதே இல்லை.
நாவல்கள் மீது கொள்ளைப் பிரியம்
கலைச்செல்வி (கல்லூரி மாணவி): மதுரை, எனது சொந்த ஊர்; ஆனாலும் எனக்கு தமிழ் தெரியாது. ராணுவத்தில் இந்தியாவின் வட எல்லையில் அப்பா பணிபுரிந்ததால், நானும் அங்கே வளர்ந்தேன். இப்போது புத்தக வாசிப்பில் தமிழ் கற்றுவருகிறேன். ஆங்கில நாவல்கள் மீது எனக்கு அதிக ஆர்வம். எனது அண்ணன் மனோஜ் ராணுவத்தில் பணிபுரிகிறார். அவன் சிறுவயதில் இதுபோல் அதிகமாக நாவல்கள் படிப்பார். அவரைப் பார்த்து நானும் படிக்கத் துவங்கினேன். புத்தக கண்காட்சியில் நான் எதிர்பார்த்து வந்த அனைத்து எழுத்தாளர்களின் நாவல்கள் கிடைத்தன.
புத்தகத்திற்கே முதல் மரியாதை
மீனாட்சி (குடும்பத் தலைவி) : மகள்கள் கோகிலா, ஷர்மிளா, மகன் தினேஷ்குமார், தங்கை மகாலட்சுமி என குடும்பமாக இங்கு வந்துள்ளோம். வீட்டில் எல்லோரும் புத்தக வாசிப்பில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். சித்த வைத்திய சிந்தாமணி, பதர்குண சிந்தாமணி, நாடி குத்து, தந்திர யோகம் பகுதி 2... இப்படி பல தலைப்புகளில் புத்கங்களை எதிர்பார்த்து வந்தோம். அவை அனைத்தும் இங்கு கிடைத்தன. ஜவுளிக்கடையில் கூட பிள்ளைகள் அதிக நேரம் செலவு செய்ய மாட்டார்கள். ஆனால் புத்தக கண்காட்சி என்றால் மணிக்கணக்கில் புத்தகங்களை தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு புத்தக கண்காட்சிக்கும் குறைந்தது ரூ.5,000 செலவாகும். வீட்டில் நூலகம் அமைக்கும் அளவிற்கு புத்தகங்கள் உள்ளன. எல்லோருமே புத்தகத்திற்கு தான் முதல்மரியாதை அளிக்கிறோம். இவ்வாறு கூறினர்.
கண்காட்சி செப்.,7 வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE