சென்னை : 'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது. புதிய ஆசிரியர் நியமன விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியரை பணி நியமனம் செய்ய, நீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு, நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இந்த பிரச்னையில், அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல், தேர்வு பெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத ஆசிரியரும், திகிலில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டபோது 'தற்போதைய தேர்வுப் பட்டியல், தற்காலிகமானது; வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது' என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இதனால், ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், 'கடைசியாக வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தான், ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி, மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால், அதற்கேற்பவும், பட்டியலை தயாரித்து வெளியிட, தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE