இப்போது அகில்...

Added : செப் 06, 2014 | கருத்துகள் (11) | |
Advertisement
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு சமூக அக்கறையே இல்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்வது தவறு, என்பதை அகிலுடன் பழகியவர்கள் நிச்சயம் சொல்வார்கள்.யார் அந்த அகில்.கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் அதற்கு இணையாக ஆடிட்டராவதற்கான படிப்பும் படித்துக் கொண்டும இருந்தார்.படித்துக் கொண்டு இருந்தார் என்றால் சாதாரணமாக
இப்போது அகில்...

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு சமூக அக்கறையே இல்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்வது தவறு, என்பதை அகிலுடன் பழகியவர்கள் நிச்சயம் சொல்வார்கள்.
யார் அந்த அகில்.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் அதற்கு இணையாக ஆடிட்டராவதற்கான படிப்பும் படித்துக் கொண்டும இருந்தார்.
படித்துக் கொண்டு இருந்தார் என்றால் சாதாரணமாக படித்துக்கொண்டு அல்ல பிரமாதமாக படித்துக் கொண்டு இருந்தார்.
நன்றாக படிக்கவேண்டும் நல்ல வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்க வேண்டும். தன்னை சிரமப்பட்டு படிக்கவைத்த பெற்றோர்களை சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதன்பிறகு தான் சார்ந்த இந்த சமூகத்திற்கு நிறைய உதவிடவேண்டும் என்பது இவரது எண்ணம்.
சமூக சேவை என்பதை இயல்பாக கொண்ட அகில் காலநேரம் பார்க்காமல் பல முறை ரத்த தானம் செய்தவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கல்லூரி நண்பர்களை அழைத்துக் கொண்டு குடிசைப் பக்கமும், அரசாங்க ஆஸ்பத்திரி பக்கமும், ஆதரவற்றோர் இல்லங்களின் பக்கமும் போய் முடிந்த தொண்டுகளை செய்துவந்தவர்.
கல்லூரி மாணவர்களால் இயங்கிவந்த அல்ட்ரா சேவை பயண பொது நல அறக்கட்டளை என்ற அமைப்பின் தூணாகவே இருந்து செயல்பட்டவர். இந்த அமைப்பின் மூலம் அக்கம் பக்கம் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல், ஏழை மாணவர்களுக்கு புத்தகம் வாங்கித் தருதல், தெருக்களை சுத்தம் செய்தல்,சுகாதாரத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல் போன்ற காரியங்களில் முதல் ஆளாக இறங்கி செயல்படுவார்.
ஐந்து செமஸ்டர் முடித்த நிலையில் ஆறாவது செமஸ்டர் படிக்கவேண்டும், கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் அகில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் எடுத்த மார்க்குகள் மற்றும் கல்லூரியில் ஐந்து செமஸ்டரில் எடுத்து உயர்ந்த மார்க்குகள், கேள்விகளை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு பதிலளித்தல் போன்ற காரணங்களால் கோவையில் உள்ள ஒரு முக்கியமான தனியார் நிறுவனத்தின் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிக்கட்டமாக நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகதேர்வு மட்டும்தான் பாக்கி.இந்த நேர்முக தேர்வில் மிக எளிதான தேறிவிடுவேன், கையில் வேலை கிடைத்ததற்கான பேப்பருடன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் பைக்கில் நிறுவனத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.
எப்போதும் போல பைக்கை நிதானமாகத்தான் ஒட்டிச்சென்றார்.
இன்னும் கொஞ்சம் தூரத்தில் நிறுவனம் வந்துவிடும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலைக்கான ஆர்டர் கிடைத்துவிடும், இன்னம் கொஞ்சம் காலத்தில் தன்நிலை உயர்ந்துவிடும் பிறகு தன்னைச் சார்ந்தவர்களை எல்லாம் உயர்த்தவேண்டும் என்ற உயர்ந்த கனவுகளோடு சென்றவருக்கு முன் சென்ற லாரி வலது பக்கம் இன்டிகேட்டரை போட்டுவிட்டு திடீரென இடது பக்கம் திரும்பவே நிலைதடுமாறிய அகிலின் பைக் லாரியின் பின்பக்கம் இடித்தது. பைக்கில் சென்ற இருவருக்குமே தலையில் சரியான காயம்.
உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர், சில நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அகிலின் நண்பர் குணமாகி வீட்டிற்கு சென்றுவிட்டார், அகில் மட்டும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார்.
இன்னும் இரண்டொரு நாளில் அகில் முழுமையாக குணமடைந்துவிடுவார் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று சொன்னதை அடுத்து அந்த நாளுக்காக அனைவரும் காத்திருந்தனர்.
அந்த நாளும் வந்தது ஆனால் அதிர்ச்சியான தகவல் சுமந்தே வந்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அகிலுக்கு திடீரென மூளையில் ரத்தம் உறைந்துவிட்டது என்று சொன்னவர்கள் அடுத்து கொஞ்ச நேரம் கழித்து அகிலுக்கு மூளை சாவு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டனர்.
அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர்களுக்கு மூளைசாவு என்றால் என்ன புரிந்து கொள்ளமுடியவில்லை.
அகிலின் பெற்றோர்களிடம், மருத்துவர்கள் தயங்கியபடி உங்கள் மகன் வாழ்க்கை முடிந்துவிட்டது, ஆனாலும் அவன் வாழ்க்கையை வேறுவிதமாக தொடங்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. இறப்பதற்கு முன் அகிலின் கண் உள்ளிட்ட ஏழு உடல் உறுப்புகளை எடுத்து தானமாக தந்தால் ஏழு பேரின் உருவில் அகில் வாழ்வான் ஆனால் இது கட்டாயமில்லை உங்கள் விருப்பம் என்று சொன்னார்கள்.
இருக்கும் போதும் பிறருக்காக வாழ்ந்தான் இறந்த பின்னும் பிறருக்காக வாழட்டும் என்று முடிவெடுத்த பெற்றோர்கள் ரவீந்திரன்- ஜெயலட்சுமி தம்பதியினர் மகனின் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் தந்தனர்.
இதன் காரணமாக அகிலின் கண் உள்ளிட்ட ஏழு முக்கிய உடல் உறுப்புகள் தேவைப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டது.
சம்பந்தபட்டவர்கள் புது உற்சாகத்துடன் புது உத்வேகத்துடன் புத்துயிருடன் எழுந்து உட்கார்ந்து தங்களுக்கு உதவிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி சொல்லவிரும்பினார்கள்.
ஆனால் அந்த நன்றியை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அகில் இல்லை, உடல் உறுப்புகளை தந்த நிம்மதியின் காரணமாகவோ என்னவோ புன்முறுவலுடன் சிதையில் எரிந்து கொண்டிருந்தார்.
- எல்.முருகராஜ்


(குறிப்பு: எங்களது நண்பன் அகில் தனது மரணத்தை கூட அர்த்தப்படுத்திவிட்டு சென்றிருக்கிறான். ஏழுபேரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்திருக்கிறான் இருந்தும் அகில் பற்றி எந்த ஊடகத்திலும் ஒரு வரிகூட செய்தி வரவில்லை, நீங்களாவது எங்கள் அகில் பற்றி எழுதுங்கள் என்று சொல்லி நிஜக்கதை பகுதிக்கு அகில் பற்றிய தகவல் மற்றும் படங்களை தந்தவர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல்.)
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagainalluran - Salem,இந்தியா
11-செப்-201416:09:09 IST Report Abuse
nagainalluran அவர் பெற்றோருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இதனை எதிர்கொள்ளும் தைரியம் நம்பிக்கை ஆகியவற்றையும் அகிலை தன்னிடம் எடுத்து கொண்ட இறைவன் வழங்கட்டும்
Rate this:
Cancel
Prabu Prabu - coimbatore,இந்தியா
10-செப்-201414:41:14 IST Report Abuse
Prabu Prabu அகில் இன்றைய மாணவர்களின் வழிகாட்டி
Rate this:
Cancel
nilaarasi - trichy,இந்தியா
10-செப்-201411:54:24 IST Report Abuse
nilaarasi அகில் நிஜமான ஹீரோ தான் ஆனால் கடவுள் நல்லவர்களை எப்பொதும் அவர் கூடவே வைத்துகொள்ள தான் ஆசை படுவர் போல ஆனாலும் அந்த ஏழு பேரின் உருவில் அகில் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X