உணவு பாதுகாப்பு சட்டம் யாருக்காக?| Uratha Sindhanai | Dinamalar

உணவு பாதுகாப்பு சட்டம் யாருக்காக?

Added : செப் 06, 2014 | கருத்துகள் (6) | |
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் உணவு கிடைக்காமல், வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பது போல், ஒரு மாயை உணர்வை ஏற்படுத்தி, கடந்த ஆட்சியிலிருந்த மத்திய அரசு, உணவு பாதுகாப்பு திட்டத்தை பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் தாண்டி, அவசர சட்டமாக கொண்டு வந்தது.இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், ஏறக்குறைய, 75 சதவீத கிராமப்புற மக்களுக்கும், 50 சதவீத நகர்புற மக்களுக்கும்,
உணவு பாதுகாப்பு சட்டம் யாருக்காக?

இந்தியாவில் பெரும்பாலானவர்கள் உணவு கிடைக்காமல், வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பது போல், ஒரு மாயை உணர்வை ஏற்படுத்தி, கடந்த ஆட்சியிலிருந்த மத்திய அரசு, உணவு பாதுகாப்பு திட்டத்தை பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் தாண்டி, அவசர சட்டமாக கொண்டு வந்தது.

இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், ஏறக்குறைய, 75 சதவீத கிராமப்புற மக்களுக்கும், 50 சதவீத நகர்புற மக்களுக்கும், சராசரியாக ஒரு நபருக்கு, ஒரு மாதத்துக்கு, ஐந்து கிலோ அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களை, கிலோ ஒன்றிற்கு, 1 - 3 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும்.இதற்காக, ஆண்டுக்கு ஆகும் செலவு, ஏறக்குறைய 1.25 லட்சம் கோடி ரூபாய். உணவு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு, இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால், விவசாயிகளுக்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
கடந்த, 1965 முதல், பல்வேறு விவசாய பொருட்களுக்கு, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, அவற்றை கொள்முதல் செய்ய, மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், பஞ்சாப், அரியானா தவிர, அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானிய பொருட்களை, அதற்கு தேவைப்படுகிற, கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி, அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை என்பது உண்மை.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான விவசாயிகள், இடைத்தரகர்கள் மூலம் பொது அங்காடிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் உணவு தானியங்களை விற்று, குறைந்த லாபம் ஈட்டி வருகின்றனர் என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது இப்படி இருக்கையில், 75 சதவீத கிராம மக்களுக்கும், 50 சதவீத நகர மக்களுக்கும் பயன் அளிக்கப்பட்டுள்ளதால், அரிசி, கோதுமை மற்றும் இதர உணவு தானியங்களின் விலையில், பெரிய சரிவு ஏற்படும். ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்குண்டுள்ள விவசாயிகளுக்கு, மேலும் பல பிரச்னைகளை இது ஏற்படுத்தி விட வாய்ப்புள்ளது.அதுமட்டுமன்றி, உற்பத்தி சம்பந்தப் பட்ட பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவின் நீர் பாசன பரப்பு உலக அளவில் மிகப்பெரியதாக உள்ள போதிலும், ஏறக்குறைய, 60 சதவீத அளவிலான சாகுபடி பரப்பு, இன்றும் நீர்பாசனமின்றி, மழை நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவகால மாற்றங்கள் உணவு உற்பத்தியை குறைத்து, பல்வேறு இன்னல்களை சமீப காலங்களில் ஏற்படுத்தியுள்ளன.பருவ மழை மாற்றங்களால், மழை பொழிவு குறைந்தால், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு தேவையான அளவாக மதிப்பிடப்பட்டுள்ள, 800 லட்சம் டன் கோதுமை மற்றும் அரிசியை எங்கிருந்து பெறுவது என்பது சவாலாகி விடும். இந்த அளவு உணவு தானியங்களை, இந்தியா இறக்குமதி செய்யப் போகிறது என்ற செய்தியால், உலக சந்தையில் இப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் சூழல் தேவைதானா?இத்திட்டத்தில், 75 சதவீத கிராம மக்கள், 50 சதவீத நகர மக்கள், எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்பதற்கு சரியான காரணம் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மத்திய திட்டக்குழுவின் மதிப்பீட்டின் படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் (2011 - 12) வாழ்பவர்களின் எண்ணிக்கை, 21.90 சதவீதம் மட்டுமே. மாற்றியமைக்கப்பட்டுள்ள, பேராசிரியர் சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி மதிப்பீட்டின்படி, 25.70 சதவீத கிராம மக்களும், 13.70 சதவீத நகர்புற மக்களுமே, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என, கண்டறியப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களை, மத்திய திட்டக்குழு பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு பயன்படுத்தி வருகிறது.இது போன்ற புள்ளி விவரங்களை கையில் வைத்து, எதற்காக நான்கில் மூன்று பங்கு கிராம மக்களை, இத்திட்டத்தின் பயனாளிகளாக அறிவிக்க வேண்டும். வருமான உயர்வு மற்றும் பல்வேறு காரணங்களால், இப்போது பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பலர், இந்த உணவு தானியங்களை வாங்கப் போவது இல்லை. வாங்கப்படாத உணவு தானியங்கள், சிலரால் கடத்தப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் வீணாவதற்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும். உணவு பாதுகாப்பு சட்டத்தை, உண்மையான முறையில் நடைமுறைப்படுத்த, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு இதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகம், கேரளா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள், பொது வினியோக முறையில், மிகவும் குறைந்த விலையில் உணவு தானியங்களை வினியோகித்து வருகின்றன. இந்த மாநிலங்களில், உணவு பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தையை நம்பி, வளர்ந்த குழந்தையை கொல்ல நினைப்பது போல் உள்ளது.மத்திய அரசால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஏறக்குறைய, 40 சதவீத விவசாயிகள், லாபமின்மையால் விவசாயத்திலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். 2006ல்- கொண்டு வரப்பட்ட தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் (நுாறு நாள் வேலை), விவசாய கூலி தொழிலாளருக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தியதோடு, கூலி உயர்வை ஏற்படுத்தி, சாகுபடி செலவை பன்மடங்காக உயர்த்தியுள்ளது என்பதை மத்திய அரசின் விலை குழும ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. கடந்த 10 ஆண்டு களில், சாகுபடிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த, 20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தரிசு நிலமாக விடப்பட்டுள்ளது.

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை, அரசு கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். 2010 - 11ம் ஆண்டு புள்ளி விவரப்படி, இந்தியாவின் மொத்த நெல் உற்பத்தியில், வெறும், 33 சதவீதம்; கோதுமையில், 26 சதவீதம் மட்டுமே, அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலையங்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் உணவு பொருட்கள் கொடுக்கப்படுவதால், அங்காடி விலையில் வீழ்ச்சி ஏற்படும். விவசாயிகள் உணவு பயிர்களின் சாகுபடியை விட்டுவிட்டு, மற்ற பயிர்களை சாகுபடி செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம். இது நாட்டின் ஒட்டு மொத்த உணவு பாதுகாப்பை கூட சீர் குலைத்து விடும்.

ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்பதில், இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், சுதந்திரமடைந்து, 66 ஆண்டுகளுக்கு பிறகும், 75 சதவீத மக்கள், உணவு பொருளை விலை கொடுத்து வாங்குவதற்கு வழியில்லாமல் இருக்கின்றனர் என்பதை கனவில் கூட யாரும் ஏற்று கொள்ள முடியாது.இந்த திட்டத்தால் நாட்டின் வறுமையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. இத்திட்டம், அரசுக்கு நிதி சிக்கலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கள்ள மற்றும் ஊக வணிகத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து விடும். பல குளறுபடிகளை ஏற்படுத்த கூடிய, உணவு பாதுகாப்பு சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இ - மெயில்:
na_narayana@hotmail.com
narayana64@gmail.com

அ.நாராயணமூர்த்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X