ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் அரசின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு முதற் கட்ட தவணை தொகை வழங்க தாமதமாகிறது. இது வரை 10 சதவீத பயனாளிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் இருந்து 688 பயனாளிகள் அரசின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பலர் வீடுகளுக்கு அடித்தளம் அமைத்து விட்டு முதல் கட்ட தவணை தொகைக்காக காத்திருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 688 பேருக்கு 62 பேருக்கு மட்டுமே முதற்கட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக அடித்தளம் அமைக்க 2 ஆயிரத்து 400 ரூபாய் அல்லது 12 மூடை சிமென்ட் மற்றும் 7 ஆயிரத்து 417 ரூபாய் வழங்கப்படும். இரண்டாம் கட்டமாக ஜன்னல் மட்டம் வரை கட்டுவதற்கு சிமென்ட் மற்றும் கம்பிகள் வாங்க 8 ஆயிரத்து 580 ரூபாய் மற்றும் ரூ.5 ஆயிரத்து 331 ரூபாய் வழங்க வேண்டும்.
மூன்றாம் கட்டமாக கூரை மட்டம் கட்ட சிமென்ட் மற்றும் கம்பி வாங்க 21 ஆயிரத்து 85 ரூபாய் மற்றும் ரூ. 3 ஆயிரத்து 400 ரூபாய் வழங்க வேண்டும். கடைசியாக சிமென்ட் மற்றும் கம்பி வாங்க 9 ஆயிரத்து 5 ரூபாய் மற்றும் ரூ. 17 ஆயிரத்து 782 உட்பட மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் ஒரு வீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை கட்டிக் கொள்ள 2 ஆயிரத்து 200 ரூபாய் கொடுக்கப்படும்.
ஒட்டன்சத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் கூறுகையில், அடித்தளம் கட்டி முடித்தவுடன் அதனை போட்டோ எடுத்துக் கொடுத்தால் உடனடியாக பாங்க்கில் அவர்களுடைய கணக்கில் பணம் போடப்படுகிறது. இதில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றார். இனிவரும் காலம் மழை காலமாக இருப்பதால் வீடு கட்டும் வேலையை விரைவாக முடித்திட ஒதுக்கப்பட்ட தொகையை தாமதமின்றி பயனாளிகளுக்கு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE