போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, தட்டுத்தடுமாறி, ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றாள் சித்ரா. பின்னால் அமர்ந்திருந்த மித்ரா,""ரோட்டோரம் மணல் பரவிக்கிடக்குது; பார்த்து ஓட்டு; சறுக்கிட போகுது,'' என எச்சரித்தாள்.
"ஆமாம்பா, இந்த மணலே பிரச்னைதான். கொஞ்சம் அசால்ட்டா இருந்தா, சறுக்கி விழச்செய்து விடுகிறது,'' என்றாள் சித்ரா.
"நீங்க, ஏதோ... பொடி வச்சு பேசுற மாதிரி தெரியுதே. அது, என்ன,'' என துருவிக்கேட்டாள் மித்ரா.
ஜூஸ் கடைக்கு முன் ஸ்கூட்டரை நிறுத்திய சித்ரா, இரண்டு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் கொடுத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தாள்.
"போன மாசம், கரூரில் இருந்து சட்ட விரோதமா மணல் அள்ளிட்டு வர்றதை வருவாய்த் துறைக்காரங்க ஆய்வு செஞ்சாங்க. காங்கயம் ரோடு பகுதியில், கிட்டத்தட்ட ஆயிரம் யூனிட் மணலை அனுமதி யில்லாம ஆங்காங்கே குவிச்சு வச்சிருந்தாங்க. மணல் குவியலை பறிமுதல் பண்ணிட்டாங்க. பொதுப் பணித்துறை விதிமுறைப்படி, ரேட் நிர்ணயிச்சு விற்பனை செய்யப்போறதா அறிவிச்சாங்க,'' என, விளக்கத்தை நீட்டினாள் சித்ரா.
"அதுக்கென்ன, நல்ல விஷயம்தானே. துணிச்சலா நடவடிக்கை எடுத்த, அந்த அதிகாரியை பாராட்டலாமே,'' என சர்ட்டிபிகேட் கொடுத்தாள் மித்ரா.
"முழுசா கேட்டுட்டு சர்ட்டிபிகேட் கொடு. ஆயிரம் யூனிட் மணலை பறிமுதல் செஞ்சிருக்காருன்னா சும்மா இருப்பாங்களா... இப்ப, அந்த அதிகாரியை காத்திருப்போர் பட்டியலில் வச்சிருக்காங்க. அவருக்கு பதிலாக, 13 வருஷம் கழிச்சு, சப்-கலெக்டர் ரேங்குல அதிகாரி நியமிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சிருக்காங்கன்னு சொல்லுங்க. குடைச்சல் கொடுத்த அதிகாரியை ஓரங்கட்டின மாதிரியும் ஆச்சு. பல வருஷம் கழிச்சு, மீண்டும் சப்-கலெக்டர் ரேங்குல அதிகாரி நியமிச்ச மாதிரியும் ஆச்சு,'' என, உயரதிகாரிகளின் "திருவிளையாடல்'களை தெளிவுபடுத்தினாள் மித்ரா.
அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு ஜூஸ் வந்தது. அதை வாங்கி உறிஞ்சிய சித்ரா, "நம்மூர்ல வெளிநாட்டு கரன்சியை புழக்கத்தில் விட்டாங்களாமே. அதைப்பத்தி தெரியுமா,'' என கேள்வி எழுப்பினாள்.
"அதுவாக்கா, ஆப்கானிஸ்தான் நாட்டுல செல்லாதுன்னு அறிவிச்ச கரன்சியை, ஒரு கும்பல் கைப்பத்தியிருக்கு. அதை, திருப்பூர் பகுதியில புழக்கத்தில விட முயற்சி செஞ்சாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, திருப்பூரை சேர்ந்த ஒருத்தர்ட்ட ரெண்டு பேர் பேரம் பேசியிருக்காங்க. அவர் போலீசுக்கு தகவல் சொல்லியிருக்கார். போலீஸ்காரங்க, கரன்சியை பார்த்துட்டு, கலர் ஜெராக்ஸ்ன்னு சொல்லிட்டு, அசால்ட்டா இருந்துட்டாங்க. அந்த கும்பல், பக்கத்து மாவட்டமான ஈரோட்டுல பேரம் பேச முயற்சி செஞ்சப்ப, அந்த ஊர் போலீஸ்காரங்க பிடிச்சிட்டாங்க. திருப்பூர் போலீஸ்காரங்களுக்கு அவமானமா போயிடுச்சு,'' என்றாள் மித்ரா.
ஜூஸ் கடையில் இருந்து வெளியே வந்தபோது, அவ்வழியா கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் சென்றதை சித்ரா பார்த்ததும், "நம்மூர் கார்ப்பரேஷன் அதிகாரிகள், மக்களோட வரிப்பணத்தை வெட்டியா செலவு செய்றாங்க,'' என்றாள்.
"அது, வழக்கமானது தானே. இப்ப, என்ன செலவு பண்ணியிருக்காங்க,'' என கேள்வி எழுப்பினாள் மித்ரா.
"சின்னாண்டிபாளையத்துல கால்வாய் மேடு பள்ளமா இருக்கறதால, கழிவு நீர் தேங்குச்சு. லாரியில் உறிஞ்சி எடுத்துட்டு போனாங்க. தெனமும் இதே மாதிரி செய்ய முடியாதுனு சொல்லி, குளத்துக்கு பக்கத்துல, "செப்டிக் டேங்க்' மாதிரி தொட்டி, மோட்டார் ரூம் கட்டி, ஒரு கி.மீ., தூரத்துக்கு பிளாஸ்டிக் பைப் பதிச்சாங்க. கிட்டத்தட்ட, 13 லட்சம் ரூபாய் செலவு செஞ்சாங்க. வேலை முடிஞ்சு பல மாசமாகியும், இன்னும் மோட்டார் வைக்கல. இப்ப, தொட்டியில் தேங்குற கழிவுநீரை, மாநகராட்சி லாரி உறிஞ்சி எடுத்துட்டு போயி, ஆத்துல விட்டுட்டு இருக்கு. மோட்டார் வச்சு "பம்ப்' பண்ணினா, லாரி செலவு குறையும். வழக்கம் போல் லாரியே உறிஞ்சிட்டு இருக்கிறதா இருந்தா, 13 லட்சம் மிச்சமாயிருக்கும்,'' என அங்கலாய்த்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE