விசித்திரமான நிலப்பரப்பு| Dinamalar

விசித்திரமான நிலப்பரப்பு

Added : செப் 12, 2014 | கருத்துகள் (3)
Advertisement
விசித்திரமான நிலப்பரப்பு

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள்தாம். ஸ்ரீநகரின் விளிம்பில் அமைந்திருக்கும் அந்தப் பல்கலையில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு இடைவேளைகளில் தால் ஏரியின் கரை ஓரங்களில் பனி மலைச் சூரியனின் இளங்கிரணங்கள் தழுவ நடக்கும் பாக்கியம் பெற்றவர்கள். வானைத் தொடும் சிகரங்கள். ஆதி சிவனின் தலை போன்ற அந்த மலை முகடுகளில் இருந்து உருகி வழியும் நீர்ப் பிரவாகம். சிறிது தூரத்தில் வெண் பளிங்கினால் ஆன ஹஸரத்பால் மசூதி. முகமது நபியின் புனித முடி பாதுகாக்கப்பட்டுவரும் புண்ணியத் தலம். விசுவாசிகளுக்கு அவ்வப்போது தரிசனத்துக்குக் காட்டப்படும் அந்த முடி பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளது. 1960களில் காணாமல் போனது. திரும்பிக் கிடைக்கும்வரை காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே பதற்றத்தில் ஆழ்ந்திருந்தது.
அப்துல்லா வம்சத்தின் அதிகார மையமாக ஹஸரத்பால் ஒருகாலத்தில் விளங்கியது. நவீன காலகட்டத்தின் முன்னணித் தலைவரும் காஷ்மீரின் சிங்கம் என்று அழைக்கப்படுபவருமான ஷேக் அப்துல்லா இந்த ஏரிக் கரை ஓரத்தில்தான் புதைக்கப்பட்டுள்ளார். 1982ல் இறந்த அவர் காஷ்மீரின் கதாநாயகனாக மதிக்கப்படுகிறார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கலந்துகொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே அவருடைய சமாதி பிரிவினைவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட அந்தச் சமாதியை, இந்திய எதிர்ப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
சமீப காலங்களில் ஹஸரத்பால், அடிப்படைவாதக் காஷ்மீரி அமைப்புகளின் கோட்டையாக விளங்குகிறது. நான் முதலில் காஷ்மீருக்குச் சென்றபோது, ஸ்ரீநகரில் மக்கள் செல்வாக்குடன் விளங்கிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜே.கே.எல்.எஃப்) பிரதிநிதி ஒருவரைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டேன். இந்திய அரசு அவரைச் சிறைப்பிடிக்கத் தேடிக்கொண்டிருந்தது. ஹஸரத்பால் மசூதியின் பின்வாசலில் இருந்த சிறு வீட்டில் அவர் மறைந்திருந்தார். பேட்டி நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் இந்தியச் சீருடை அணிந்த காவலர்கள் இங்கும் அங்கும் வந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனேன். எதிரிகளின் கண்ணில் படும்படியான ஓர் இடம். அதில் வெளிநாட்டு நிருபரைத் தொலைக்காட்சிக் குழுவோடு சேர்த்துச் சந்திக்கும் அளவுக்குத் துணிச்சலுடன் அவர் இருந்ததைப் பார்த்து வியந்துபோனேன்.
'உங்களை இந்திய அரசு தேடிக்கொண்டிருக்கிறது; இங்கோ கண்முன்னே இந்தியக் காவலர்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்களே, இது என்ன விந்தை?' என்று அவரிடம் கேட்டேன். 'அவர்கள் இந்தியக் காவலர்கள் அல்லர்; ஜம்மு காஷ்மீர் காவலர்கள்' என்றார் அவர். கூர்ந்து கவனித்தபோது, உள்ளூர்க் காவல் படையின் பெயர்ப் பட்டயம் அந்தக் காவலரது சட்டையில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. சிக்கலான காஷ்மீர் அரசியலில் நான் தெரிந்துகொண்ட முதல் பாடம் அது. இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்த ஓர் அமைப்பின் முக்கியமான பிரதிநிதி அவர். ஆனால், அவரோ இந்திய அரசால் நியமிக்கப்பட்ட காவலர்களின்முன் எந்தப் பயமும் இல்லாமல் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்!
பல்கலைக்கழகத்தை நடத்துவதற்குப் படும் சிரமங்கள் பற்றி, காஷ்மீரின் விசேஷமான குங்குமப்பூ தேநீரைக் குடித்தபடியே ஒரு பேராசிரியர் சொன்னார். அவர் ஒரு காஷ்மீரி. காஷ்மீர் சரித்திரம் பற்றி அவருக்கு நிறையவே தெரியும். பேட்டி தருவதையோ தன் பெயர் வெளியில் தெரிவதையோ அவர் விரும்பவில்லை. ஏற்கெனவே இருக்கும் நிலையை அது மேலும் சிக்கலாக்கும். 'காஷ்மீரிகளிடமிருந்து காஷ்மீர் கைவிட்டுப் போய் எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன?' என்று கேட்டேன். பதில் உடனே வந்தது: '1586. சுமார் 400 ஆண்டுகள். அதன் பிறகு முகலாயர்கள், ஆஃப்கன்கள், சீக்கியர்கள், டோக்ராக்கள் எனப் பலர் ஆட்சி புரிந்திருக்கின்றனர். 1947லிருந்து தில்லியின் அதிகாரத்தின்கீழ் இருந்து வருகிறது.'
நவீன காலகட்டத்தில் காஷ்மீரிகளுக்குத் தங்களைத் தாங்களே ஆள முடியாமல் போனது குறித்த கவலை அடி ஆழத்தில் இருக்கிறது. சுதந்தரத்துக்குப் பின் காஷ்மீர் பெரும்பாலான காலம், காஷ்மீரி முஸ்லிம் ஒருவரையே தன் முதலமைச்சராகக் கொண்டிருந்தது. ஆனால், இந்திய அரசு காஷ்மீர் மாநில ஆட்சியை நடத்தும் விதம், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் விதம் ஆகியவை காஷ்மீரிகளுக்கு வருத்தம் தருபவையாகவே இருந்துள்ளன. ஆட்சியில் தங்களுக்கு நேரடியாக எந்தப் பங்களிப்பும் இல்லை என்று வருந்த வைப்பவையாகவே இருந்துள்ளன.
காஷ்மீரை ஆண்ட எல்லோருமே மோசமானவர்கள் அல்லர். முகலாயர்களின் ஆட்சி காஷ்மீரைப் பொருத்தவரை ஒருவகையில் பொற்காலமாகவே இருந்திருக்கிறது. காஷ்மீரை பூலோக சொர்க்கம் என்று வருணித்தது ஒரு முகலாயப் பேரரசர்தான். அவர்கள் காஷ்மீரை மதித்தார்கள். அடிக்கடி வந்துபோனார்கள். மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். பின்னால் வந்த அரச வம்சங்களுமேகூட அவ்வளவு மோசமானவை அல்ல.
நிகழ்காலத்தின் ஊடாகக் கடந்த காலத்தைப் பார்க்கும் பொதுவான மனோபாவத்தைப் போலவே, காஷ்மீரிகளும் 1586க்கு பின்பு ஆட்சி அதிகாரம் கைவிட்டுப் போனதையே தங்களுடைய இன்றைய வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கிறார்கள். முகலாய ஆக்கிரமிப்பின் மூலமாக காஷ்மீர், ஆக்ரா அல்லது தில்லியின் ஆதிக்கத்தின்கீழ் அடிபணிய வேண்டி வந்துவிட்டது. இந்திய எதிர்ப்பு வளர்ந்துவரும் இன்றைய நிலையில் முகலாய ஆட்சியை யாரும் நல்லெண்ணத்தோடு பார்க்க வாய்ப்பே இல்லை.
பன்முகத்தன்மையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் கொண்டது காஷ்மீர் கலாசாரம் (காஷ்மீரியத்). பல்வேறு அந்நிய சாம்ராஜ்ஜியங்கள் இங்கு வேரூன்றிக் கலப்பதற்கு முன்பிருந்தே இந்தக் கலாசாரம் இருந்துவருகிறது. சூஃபியிஸத்தின் தாக்கம்கொண்ட மிதமான, ஆன்மிக, மனிதாபிமான இஸ்லாம் அதன் மையத்தில் இருக்கிறது. பெரும்பான்மையினரான இஸ்லாமியர்கள், சிறுபான்மையினரான இந்து பண்டிட்டுகள் ஆகிய இரு தரப்பையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தையே 'காஷ்மீரி' என்ற பெயர் குறிக்கிறது. இந்திய, பாகிஸ்தானிய தேசியவாதக் கதையாடல்களுக்கு மாற்றாக காஷ்மீர் அடையாளம் என்பது சில நேரங்களில் மிகைப்படுத்தப்படுவதுண்டு.
காஷ்மீரி மொழி பேசும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மத, வர்க்க வேறுபாடுகள் மிகவும் தெளிவானவை. இறுக்கமானவை. காஷ்மீர் அடையாளம் என்ற தனித்த ஒன்றை முன்வைக்கும் இயக்கங்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்குக்கு மாறாக இஸ்லாமின் ஒற்றைப்படைத் தன்மையை முன்வைத்தே வளர்ந்துள்ளன. 1947க்கு முன்புவரை காஷ்மீரியத் என்ற பதம் பயன்படுத்தப்படவே இல்லை. அதன்பின்னும் அது ஓர் அரசியல் கோஷமாகவே முன்னெடுக்கப்பட்டது.1 ஆனால், இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எல்லாம் தாண்டி இருவரையும் வலுவாக இணைக்கும் ஒன்றாக காஷ்மீரி என்ற அடையாளம் இருப்பதாகவே நம்பப்படுகிறது.
காஷ்மீர் மொழிக்கு இரு தரப்புமே பெரும் பங்காற்றியிருக்கின்றன. இரு தரப்பினரும் பிறருடைய மதத் திருவிழாக்கள், சடங்குகள் ஆகியவற்றை மதித்து வந்துள்ளனர். கொண்டாட்டங்களில் பங்கெடுத்து வந்துள்ளனர்.
1989 வாக்கில் தலையெடுக்கத் தொடங்கிய பிரிவினைவாதப் போக்குகளால் இந்த நல்லிணக்க அம்சங்கள் எல்லாம் சிதைய ஆரம்பித்தன. காஷ்மீரியத் என்ற அரவணைக்கும் கோட்பாட்டுக்கு மாறாக, வெளிப்படையாக, இறுக்கமான அடிப்படைவாத இஸ்லாத்துக்கே பெரும்பாலான காஷ்மீரி ஆயுதக் குழுக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றன.
காஷ்மீர் இந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உள்ளூர் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர். ஒரு லட்சத்து எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகள் வசித்துவந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போது சில ஆயிரம் பேர் மட்டுமே வசித்துவருகின்றனர்.3 ஸ்ரீநகரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் இப்போதும் இந்துக் கோவில்களில் வழிபாடுகள் நடந்துவருகின்றன. பிரிவினைவாதிகளின் மிரட்டல்களையும் தாக்குதல்களையும்மீறி இப்போதும் அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடந்துவருகிறது. என்றாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் பண்டிட்டுகள், இந்துச் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் விழாக்கள், சடங்குகள் எதுவும் இப்போது அங்கு நடப்பதில்லை என்ற வருத்தத்துடனே வாழ்கிறார்கள். பயந்தபடியே தனித்து வாழும் அவர்கள், அகதிகளாகப் புலம் பெயர்ந்த தங்களுடைய சக பண்டிட்டுகள் காஷ்மீருக்குத் திரும்பிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தபடிக் காத்திருக்கிறார்கள்.
========================
காஷ்மீர் : முதல் யுத்தம்
ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் : மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
15-செப்-201400:11:16 IST Report Abuse
babu இன்று இருக்கும் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஸ்ரீலங்கா மோரிஷஸ் நம்ம ரத்தம் தான்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X