சுதந்திர இந்தியாவின் சர்வாதிகாரிகள்!

Added : செப் 13, 2014 | கருத்துகள் (9) | |
Advertisement
இன்றைக்கு அனைத்து வசதி வாய்ப்புகளுடன், எந்தக் குறையுமின்றி வளமுடன் வாழ்பவர்கள், நம் அரசியல்வாதிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்களின் வரிசையில் இடம் பெற்றிருப்பவர்கள், இந்தியத் தொழிலதிபர்களான, உலக மகா கோடீஸ்வரர்கள்.இவ்விரு தரப்பினரும், இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகளோடு, பல கோடிகளைப் பல வெளிநாட்டு வங்கிகளில்
சுதந்திர இந்தியாவின் சர்வாதிகாரிகள்!

இன்றைக்கு அனைத்து வசதி வாய்ப்புகளுடன், எந்தக் குறையுமின்றி வளமுடன் வாழ்பவர்கள், நம் அரசியல்வாதிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்களின் வரிசையில் இடம் பெற்றிருப்பவர்கள், இந்தியத் தொழிலதிபர்களான, உலக மகா கோடீஸ்வரர்கள்.

இவ்விரு தரப்பினரும், இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகளோடு, பல கோடிகளைப் பல வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி, வலம் வருகின்றனர். இவர்கள் கூட்டணி அமைத்து, இந்திய மக்களின் பொருளாதார நிலையை சீரழித்து, தங்கள் பொருளாதார நிலையை வளம்படுத்திக் கொள்ள திட்டங்கள் தீட்டி, அவற்றை செயல்படுத்துவதில் மகா கில்லாடிகள்.இவர்களுக்கு பக்க பலமாக இருப்பவர்கள் அரசியல் குண்டர்கள், லஞ்ச லாவண்ய அரசு அதிகாரிகள். இவர்களின் சர்வாதிகாரப் போக்கையும், அடாவடித் தனங்களையும் தட்டிக் கேட்கவோ, எதிர்த்துப் பேசவோ யாரும் இல்லாததால், சுதந்திர இந்தியாவில் இவர்களின் ஆட்சியும், அதிகாரமும்தான் கொடி கட்டிப் பறக்கிறது.ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவையும், இந்தியர்களின் பரிதாப நிலையையும், பாரதி 'தாழ்வுற்று, வறுமை மிஞ்சி; விடுதலை தவறிக் கெட்டு; பாழ்பட்டு நின்றதாமோர்; பார தேசந் தன்னை...' என்று படம் பிடித்துக் காட்டுவார்.நுாறு ஆண்டுகளுக்கு முன் பாரதி பாடியது, இன்றும் கன கச்சிதமாக பொருந்துவதாக இருக்கிறது. அன்று இருந்த இந்தியரின் நிலை, இன்று வரை மாறவே இல்லை.

இன்று நன்கு படித்த, அறிவுள்ள சாமானியன் ஒருவன், தேர்தலில் போட்டியிட்டு, ஒரு எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.பி.,யாகவோ ஆக முடியாது. 'லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு, அதிகபட்ச செலவுத் தொகை, 70 லட்சம் ரூபாய்' என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவுத்துள்ளதே, இதற்கு தக்க சான்று.
இந்திய அரசியல் சாசனம், இந்தியக் குடிமக்களை சர்வ வல்லமை பெற்றவர்கள் என்று வர்ணிக்கிறது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்களும், அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், நீதிபதிகளும் கூட, மக்கள் பணியாளர்கள் என்று தான் குறிப்பிடப்படுகின்றனர். மக்கள் தொண்டாற்றுவது தான் இவர்களின் கடமை; அதற்காகத்தான் மக்கள் வரிப்பணத்திலிருந்து, இவர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், யதார்த்த நிலையோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது.
செல்வந்தர்களான அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், அரசு உயரதிகாரிகளும், பெரு வணிகர்களும், மாட மாளிகைகளில் குடியிருந்து, குளிர் சாதன வசதி படைத்த சொகுசுக் கார்களில் பவனி வருகின்றனர். இரண்டு வேளை சாப்பாட்டிற்கு கூட உத்தரவாதமின்றி, தினக்கூலிகளாக நகரங்களில் உள்ள நடை பாதைகளில் படுத்துறங்கும், கோடானு கோடி ஏழைகளின் அவலத்தை காணும்போது, நாம் சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கிறோமா என்ற ஐயம்தான் உண்டாகிறது.

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருக்க இடம் ஆகியவற்றைப் பெற முடியாது தவிக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், 40 கோடி இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் பலன்கள் கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்?கோடானு கோடி கிராமப்புற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை வழங்க, கிராமப் புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களையும், குடிசைத் தொழில்களையும், பாரம்பரியத் தொழில்களையும் ஊக்குவிக்காது, கோடீஸ்வர தொழிலதிபர்கள் மட்டும் பயனடையும் வகையில், பெரு நகரங்களை ஒட்டிய பகுதிகளில் மட்டும், பெரிய தொழிற்சாலைகள் துவங்க, நம் அரசுகள் உதவுவது ஏன்?மக்கள் சேவகர்களாகிய அரசு அதிகாரிகள் மக்களைத் தேடிச் சென்று, அவர்களை சந்தித்து, அவர்களின் நிறை, குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டிய கடமையைச் செய்யாது, இருந்த இடத்திலேயே இருக்கின்றனர். தங்களிடம் உதவி கேட்டு வரும், தங்கள் எஜமானர்களாகிய பொதுமக்களை நாள் கணக்கில், மாதக்கணக்கில் காக்க வைத்தும், அவர்களிடமிருந்து, ஆயிரங்கள் லஞ்சமாகப் பெற்று, மேல் வரும்படி பார்த்தும், மக்களை வஞ்சித்து வருகின்றனரே, இந்நிலை ஏற்பட யார் காரணம்?

வற்றாத ஜீவ நதிகள், காடுகள் என, இயற்கை வளங்களும், கனிம வளங்களும் இன்னும் பிற வளங்களும், உழைக்கும் மனித வளத்தையும் பெருமளவில் கொண்ட இந்தியாவை, உலகின் மிகப் பெரிய ஏழை நாடாக ஆக்கி, வெட்கம் சிறிதுமின்றி தற்பெருமை பேசித் திரியும் சுயநல அரசியல்வாதிகள் பெருகிப் போனதன் ரகசியம் என்ன?மக்கள் நலனுக்காக, மக்கள் பிரதிநிதிகளை கொண்ட சட்டசபைகளும், பார்லிமென்டும் இருக்க, மக்கள் விரோத சட்டங்கள் இயற்றப்படவும், மக்களை துன்பத்தில் ஆழ்த்தியும், கொடுமைப்படுத்தியும் வரும் மக்கள் பிரதிநிதிகளாக நம் அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இவ்வாறு செயல்பட நம் சட்ட திட்டங்கள் இடம் தருகின்றன.சந்தேகமின்றி நம் அரசியல்வாதிகள் தான், சுதந்திர இந்தியாவின் சர்வாதிகாரிகள்; இந்தியர் அனைவரும் அவர்களின் அடிமைகள் என்பதில், இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
'இ-மெயில்': krishna_samy2010@yahoo.com

- ஜி.கிருஷ்ணசாமி --
காவல்துறை கூடுதல்
கண்காணிப்பாளர் (பணி நிறைவு)
எழுத்தாளர், சிந்தனையாளர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (9)

NALLA THAMBI - RAIPUR,இந்தியா
03-அக்-201412:26:30 IST Report Abuse
NALLA THAMBI ஓசியில் ஏதாவது கிடைக்குமா என்று பல்லிளித்து ஏங்கித் திரியும் மக்கள் , சுயமரியாதை சிறிதும் இல்லாத மக்கள் , உழைக்காமல் உல்லாசமாக வாழ நினைக்கும் மக்கள் , போதைவசப்பட்ட குடிகார மக்கள் , இவர்கள் திருந்துவது எப்போது ? மக்கள் எப்படியோ ,அரசாள்வோரும் அப்படியே
Rate this:
Cancel
Nam - riyadh,சவுதி அரேபியா
30-செப்-201403:43:11 IST Report Abuse
Nam தமிழர்கள் தன்னிலை உணராதவர்கள் இந்தநிலை மாற விழிப்புணர்வு ஏற்படவேண்டும் அரசியல்வாதிகள் அடிக்கும் கொட்டததிற்கு அவர்கள் பின்னே வாலாட்டியதற்கும் நாய் போல எச்சில் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் குடும்பத்தைகூட மறந்தும் கொடுக்கும் 100 "200க்கு தனது உரிமையை (வோட்டு ) விற்றும் உயிரின் மதிப்புக்கூட தெரியாமல் அடிபட்டு மிதிபட்டு( உயிர்விட்டு ) கோசம் போடும் இவர்கள் திருந்தும் வரை சர்வாதிகாரம் நீடித்துக்கொண்டுதான் இருக்கும்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
16-செப்-201418:48:41 IST Report Abuse
spr அரசியலில் குற்றவாளிகள் அதிகமாகிவிட்டதாக சொல்லப்படுவதற்குக் காரணம் அதனைக் கண்டிக்கத் துணிச்சலில்லாத (காவற்துறையும் உள்ளிட்ட அனைத்து) அதிகாரிகளுமே அடுத்து அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்கள், அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு கூறும் நீதிபதிகள் அவர்களுக்கு ஆதரவாகக் கருத்தினை உருவாக்கும் ஊடகங்கள் இவையே மக்களில் எவருக்குமே இது குறித்த அக்கறையில்லை அரசியல்வியாதிக்கு இருப்பதெல்லாம் முரட்டுத்தனமான துணிச்சல்மட்டுமே தான் தலைவனாக வலம் வரவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவர்களுக்கு சட்ட அறிவோ வேறெந்த அறிவோ பொதுவாகக் கிடையாது சிலர் விதிவிலக்கு ஆனால் பலருக்கு சட்டத்தில் என்ன ஓட்டைகள் இருக்கிறது என்ன தவறு செய்தாலும் தப்பிக்கலாம் என்று அவர்களுக்கு வழி சொல்லிக் கொடுப்பதெல்லாம் அதிகாரிகளே. வேகமாக ஓடும் மானைக் காட்டிக்கொடுக்க எண்ணி வேடனிடம் தானாக வழிய வந்து மாட்டிக் கொண்ட குதிரை போல அதிகாரிகள் இந்த அரசியல்வியாதிகளிடம் சிக்கிக்கொண்டு அவர்களின் தவறான போக்கிற்கு உதவுகிறார்கள் எனவே நாடு உருப்பட வேண்டுமானால் இந்த அதிகாரிகள் யோக்கியர்களாக இருந்தால்முடியுமென சிலர் அவ்வப்பொழுது நிரூபித்து வருகிறார்கள் ஏற்றுக் கொள்ள மனம் வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X