மலைக்கோட்டையின் கம்பீரத்தை பிரதிபலிக்கும் திண்டுக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைக்கோட்டையின் கம்பீரத்தை பிரதிபலிக்கும் திண்டுக்கல்

Updated : செப் 15, 2014 | Added : செப் 15, 2014
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 30 ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த தருணத்தில் மாவட்டத்தின் வரலாற்றினை நினைவு கூர்வதோடு, வளர்ச்சிக்கு ஒற்றுமை உணர்வுடன் துணைநிற்கவும் உறுதிகொள்வோம். மாவட்ட வரலாறு : ஆரம்ப காலங்களில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் திகழ்ந்து கொண்டிருந்தது. கலெக்டரை சந்திக்க, நலத்திட்டங்களை பெற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 30 ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த தருணத்தில் மாவட்டத்தின் வரலாற்றினை நினைவு கூர்வதோடு, வளர்ச்சிக்கு ஒற்றுமை உணர்வுடன் துணைநிற்கவும் உறுதிகொள்வோம்.
மாவட்ட வரலாறு : ஆரம்ப காலங்களில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் திகழ்ந்து கொண்டிருந்தது. கலெக்டரை சந்திக்க, நலத்திட்டங்களை பெற பல கி.மீ., பயணிக்கும் நிலை ஏற்பட்டது. திண்டுக்கல்லின் வளர்ச்சியில் அதிகாரிகளால் தனி கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் திண்டுக்கல்லை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் 1985 செப்.,15 ல் மதுரையில் இருந்து திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் தாலுகாக்களுடன் திண்டுக்கல் மாவட்டம் உருவானது. முதல் கலெக்டராக மாதவன் நம்பியார் பொறுப்பேற்றார். தற்போது 20 வது கலெக்டராக வெங்கடாசலம் உள்ளார்.
பெயர் மாற்றம் : அண்ணாத்துரை பெயரில் துவங்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் 1986 மார்ச் 27 ல் காயிதே மில்லத் மாவட்டம் என்றும், 1996 ல் மன்னர் திருமலை நாயக்கர் மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 1997 ஜூலையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
அமைப்பு : கடல் மட்டத்தில் இருந்து திண்டுக்கல் 280.11 மீ., உயரத்தில் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 6,266.64 சதுர கி.மீ., இதில் விவசாய நிலம் 2,47,619 எக்டேர். காடுகள் 1,28,923 எக்டேர். தரிசு நிலங்கள் 36,210 எக்டேர். மேய்ச்சல் நிலம் 6,946 எக்டேர். விவசாயத்திற்கு பயனில்லாத நிலம் 66,186 எக்டேர். திண்டுக்கல் மாவட்டம் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகளோடும், கிழக்கு பகுதியில் சிறிய மலைத் தொடர்களோடும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதிகள் பாறைகளாகவே உள்ளன. மலைகள் சூழ்ந்துள்ளதால் குளிர்காலங்களில் பனி அதிகமாக இருக்கும். தமிழ், தெலுங்கு, உருது, சவுராஷ்டிரம், கன்னடம் பேசுபவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
வளர்ச்சி : திண்டுக்கல் மாவ ட்டம் கடந்த 29 ஆண்டுகளில் கல்வி, விவசாயம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அபிரிமிதமான
வளர்ச்சியை எட்டியுள்ளது. 1886 நவ.,1 ல் உதயமான திண்டுக்கல் நகராட்சி, 2014 பிப்.,19 முதல் மாநகராட்சியாக மாறியுள்ளது. கடந்த 1996 ஜன.,2 ல் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் பிரிக்கப்பட்டு தனி தாலுகாவானது. அதேபோல் 2007 அக்.,31 ல் திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூர் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டது. 2014 பிப்.,12 ல் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகாக்களாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது 9 தாலுகாக்கள் உள்ளன.
நிர்வாகம் : திண்டுக்கல் மாநகராட்சி, பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகள். (14 ஒன்றியங்கள்): திண்டுக்கல், சாணார்பட்டி, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடசந்தூர், பழநி, வடமதுரை, கொடைக்கானல்.
பேரூராட்சிகள் (23): தாடிக்கொம்பு, அகரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட் டை, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், நத்தம், அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகன்பட்டி, பண்ணைக்காடு, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கீரனூர், வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், எரியோடு, பாளையம்.
எல்லைகள்: வடக்கில் கரூர், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி, மதுரை மாவட்டங்களையும், தெற்கில் மதுரை, தேனி மாவட்டங்களையும், மேற்கில் திருப்பூர் மாவட்டமும், கேரள மாநிலத்தையும் எல்லையாக கொண்டுள்ளது.
சிறப்புகள் : திண்டுக்கல் மலைக்கோட்டை: 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை. இன்றும் அழியாத நினைவு சின்னமாக நிலைத்து நிற்கிறது. இந்த கோட்டையை, மதுரையில் ஆட்சிசெய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் கட்டினார். மலைக்கோட்டையில் ஏறினால் கடற்காற்று தழுவுவதை போன்ற உணர்வு ஏற்படும்.
சிறுமலை : புராண காலத்தில் அனுமன், சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு சென்ற பின், மீண்டும் இமயமலைக்கு திரும்ப கொண்டு சென்றபோது கீழே விழுந்த துகள்களில் ஒன்றுதான் சிறுமலை என நம்பப்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. மூலிகை காற்றை சுவாசித்தப்படியே அடிவாரத்தில் இருந்து 30 நிமிடங்களில் சிறுமலையை அடையலாம்.
கொடைக்கானல் : மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடிக்கு மேல் உள்ளது. வானிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இதில் பல லட்சம் மலர்கள் இடம்பெறும்.
கொடைக்கானலில் 12 ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ உள்ளது. சில்வர் காஸ்கேட், பிரையண்ட் பூங்கா, டம் டம் பால்ஸ், தொப்பிதூக்கி பாறை, பேரிஜம் லேக், வெள்ளிநீர் வீழ்ச்சி, கொடைக்கானல் ஏரி, குணாகுகை போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன.
பழநி : இது புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயில் இங்கு உள்ளது. இதன் உயரம் 450 மீ., ஆகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். தைப்பூசம், ஆடி, சூரசம்ஹாரம், வைகாசி விசாகம் திருவிழாக்கள் சிறப்பாக நடக்கும். தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் கோயிலாக பழநி உள்ளது.
நிலக்கோட்டை : திராட்சைக்கும், பூக்களுக்கும் பெயர் பெற்றதாக நிலக்கோட்டை உள்ளது. பித்தளை பாத்திரம், தங்க நகைகளை இங்கு வாங்கலாம். பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தினமும் 50 டன் பூக்கள் விற்பனையாகிறது. இங்கு விளைவிக்கப்படும் மல்லி "மதுரை மல்லி' என அழைக்கப்படுகிறது. இங்கிருந்து மலேசியா, தென்ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் : புகழ்பெற்ற காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், கேரளாவிற்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.
தொழில்வளம் : மாவட்டத்தில் 542 சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. வேடசந்தூரில் புகையிலை பயிரிடப்படுகிறது. கேரளாவிற்கு வாசனை புகையிலை அதிகளவில் அனுப்பப்படுகிறது. திண்டுக்கல்லில் சுருட்டு சுற்றுதல் முக்கிய தொழிலாகும். திண்டுக்கல் சுருட்டுக்கு இங்கிலாந்தில் பெரும் கிராக்கி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பூட்டு தயாரிப்பதில் தனிமுத்திரை பதித்துள்ளது. இரும்பு பெட்டி தயாரிப்பு தொழிலும் அதிகளவில் நடக்கிறது. திண்டுக்கல் பெட்டகம் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது. தோல் தொழிற்சாலைகள் உள்ளன. நூல் ஆலைகள், பருத்தியிலிருந்து விதைகளை அப்புறப்படுத்தி பஞ்சினை எடுக்கும் ஆலைகள் உள்ளன. நெல் தவிட்டில் எண்ணெய் எடுக்கும் ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிமென்ட், கடலை எண்ணெய் ஆலைகள் உள்ளன. சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி தொழிற்சாலைகள் பிரசித்தி பெற்றவை. வெங்காயம், கடலை மொத்த வியாபாரத்திற்கு திண்டுக்கல் பெயர் பெற்றுள்ளது.
கல்வி : காந்திகிராம பல்கலை, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைகள் உள்ளன. அண்ணா பல்கலை கல்லூரி உட்பட 10 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கலை, அறிவியல் கல்லூரிகள் 16, பாலிடெக்னிக் கல்லூரிகள் 9, கல்வியியல் கல்லூரிகள் 9, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 10, தொடக்கப்பள்ளிகள் 1,119, நடு நிலைப்பள்ளிகள்300, உயர்நிலைப் பள்ளிகள் 86, மேல்நிலைப் பள்ளிகள்117, மெட்ரிக் பள்ளிகள் 87 உள்ளன.
விளையாட்டு : திண்டுக்கல்லில் மாவட்ட விளையாட்டு அரங்கம், நவீன நீச்சல் குளம் உள்ளது. திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் விளையாட்டு திடல் உள்ளது. மாரியம்மன்கோயில் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் விளையாட்டு துறையில் மிக சிறப்பான இடத்தை தக்க வைத்துள்ளது.
போக்குவரத்து : திண்டுக்கல்லில் போக்குவரத்து வசதிக்கு எந்த குறையும் இல்லை. திண்டுக்கல்லில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் போன்ற முக்கிய ஊர்களுக்கு பஸ் வசதிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களுக்கும், வழிபாட்டுதலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் முக்கிய ஜங்ஷனாக உள்ளது. வாராந்திர ரயில்கள் உட்பட 86 ரயில்கள் தினமும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. பெங்களூரு, கோல்கட்டா, புதுடில்லி, மும்பை நகரங்களுக்கு செல்ல ரயில் வசதி உள்ளது.
விவசாயம் : விவசாய உற்பத்தியில் திண்டுக்கல்லுக்கு தனி இடம் உண்டு. நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பயிர் வகைகள், கரும்பு, தென்னை, பருத்தி, காய்கறிகள், பழ வகைகள், பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. காற்கறி உற்பத்தியில் 12 சதவீதம், வெங்காய உற்பத்தியில் 50 சதவீதம், வெள்ளைப்பூண்டு உற்பத்தியில் 70 சதவீதம் திண்டுக்கல் மாவட்டத்தின் பங்களிப்பாக உள்ளது. பட்டிவீரன்பட்டியில் பன்னீர் திராட்சை, ஏலக்காய், காபி விளைகிறது. சிறுமலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்றது.
வியாபாரம் : தேனி, பொள்ளாச்சி, மணப்பாறை வணிக நகரங்களுக்கு இடையில் அமைந்திருப்பதால் திண்டுக்கல், வணிக சந்தைகளின் மையமாக உள்ளது. வேடசந்தூர் புகையிலை, சின்னாளபட்டி நார்ப்பட்டு துணி வகைகள், சிறுமலை வாழைப்பழத்திற்கு மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்து வரும் சாத்துக்குடி, ஆரஞ்சுபழத்திற்கும் திண்டுக்கல் வர்த்தக மையமாக செயல்பட்டு வருகிறது.

வளர்ச்சி பாதையில் வழி நடத்திட கைகோர்ப்போம்

குவியும் திட்டங்கள் : கலெக்டர் வெங்கடாசலம்: கல்வி, சுற்றுலா அனைத்திலும் திண்டுக்கல் மாவட்டம் வளர்ச்சி பெற்றுள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர கோடை விழா கொண்டாடப்படுகிறது. மன்னவனூரில் ரூ.25 கோடியில் "எகோ டூரிசம்' செயல்படுத்தப்பட உள்ளது.
சிறுமலையை சுற்றுலா மேம்படுத்த ரூ.10 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு ரூ.42 கோடிக்கு மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ரெட்டியார்சத்திரத்தில், இஸ்ரேல் உதவியுடன் காய்கறி மகத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள் வழங்கப்படுகின்றன. பழநி மலையில் பக்தர்கள் எளிதாக சென்றுவர "ரோப்கார்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தேவை: தொலை நோக்கு பார்வை : வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.கே.சீ., குப்புச்சாமி: மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. மழை இல்லாததால் சமீபகாலமாக வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் பிழைப்பை தேடி வெளியூர் செல்கின்றனர். அவர்களின் வாழ்க்கை வளம் பெறவும், விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரிய தொழிற்சாலைகள் மாவட்டத்தில் துவங்க வேண்டும். சேலம், கரூர், ஈரோடு நகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளன. திண்டுக்கல்லில் சிறு தொழில்கள் கூட வளர்ச்சி அடையாமல் உள்ளது. நூற்பாலைக்கும், நெசவு தொழில் வளர்ச்சிக்கும் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

மருத்துவக்கல்லூரி வேண்டும் : பாலபாரதி எம்.எல்.ஏ.,: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 29 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. 200 க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன.
அவற்றில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் பணிபுரியவில்லை. உபதொழிற்சாலைகளை துவங்க வேண்டும். தோல்தொழிற்சாலை அதிகளவில் உள்ள திண்டுக்கல்லில் அதற்கான உப தொழிற்சாலைகள் இல்லை. பூட்டு தொழில் நலிவடைந்து குடிசை தொழிலாக மாறிவிட்டது. புதிய அணைக்கட்டுகள் துவங்காததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்போடு நிற்கும் மருத்துவக்கல்லூரியை துவங்க வேண்டும். நிலக்கோட்டை பகுதியில் பூச்செண்டு தொழிற்சாலை அமைக்க வேண்டும். பல லட்சம் பேர் வந்து செல்லும் பழநி மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கொடைக்கானலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.

வழிப்பாட்டு தலங்கள் : பழநி திருஆவினன்குடி, அணைப்பட்டி அனுமார் கோயில், ராமகிரி, தீண்டாக்கல் கோயில், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில், தவசிமடை மகாலிங்கேஸ்வரர் ஆலயம், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில், கோட்டைப்பட்டி சென்றாயப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில், ஊற்றாங்கரை, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், காமாட்சிபுரம் கோபிநாதசுவாமி கோயில், திருமலைக்கேணி கோயில்கள் பிரசித்தி பெற்றவையாக உள்ளன.
நீர்த்தேக்கங்கள் : ஆத்தூர், குதிரையாறு, பெரியகோம்பை, பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி, பரப்பலாறு, மருதாநதி, குடகனாறுகள் உள்ளன. இவை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. வைகை, குடகனாறு, நங்காஞ்சியாறு, அமராவதி நதிகள் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X