வீட்டில் இருந்து வெளியே கிளம்பிய சித்ரா, மொபைல் போனை எடுத்து, "ஹேண்ட் பேக்'கில் வைத்தாள். அதைப்பார்த்த மித்ரா, ""வண்டியில் போகும்போது, ஏதாவது போன் வந்தா, எப்படி தெரியும். மொபைலை என்னிடம் கொடுங்க,'' என்றாள்.
"இப்ப, முன்ன மாதிரி இல்லை. சிட்டியில் மொபைல் பேசிட்டு "டிரைவிங்' செஞ்சா, போலீஸ்காரங்க தீவிரமா கண்காணிக்கிறாங்க. டூவீலர்ல போறவங்க யாரும் இயர் போன், புளூடூத் எதுவும் காதுல தொங்க விடக்கூடாதுன்னு உயரதிகாரிங்க உத்தரவிட்டிருக்காங்க. யாராவது, மொபைல் போனில் பேசிட்டு போனா, தடுத்து நிறுத்தி, சிம் கார்டை கழற்றி கொடுத்துட்டு, போனை பறிமுதல் செஞ்சிடுறாங்க. "கப்பம்' கட்டிட்டு, போனை வாங்கிக்கலாம். ரெண்டு நாளைக்கு முன்னால, புஷ்பா தியேட்டர் சந்திப்புல, நடுத்தர வயதுக்காரர் மொபட்ல போயிருக்கார். அங்க கண்காணிச்ச ஆயுதப்படை போலீஸ் ஒருத்தர், கையைக்காட்டி வண்டியை நிறுத்தச் சொல்லி, அவர் காதுல மாட்டியிருக்கற இயர் போனை கழட்டுங்கன்னு சொல்ல, அவர் திகைச்சுப்போய், என்னிடம் மொபைல் போனே இல்லை. இது, காதொலி மெஷின்னு சொல்ல, சரி, சரி, போங்கன்னு அசடு வழிஞ்சு அனுப்பி வச்சாங்க,'' என்றவாறு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
"டூவீலரில் மொபைல் போன் பேசிட்டு போறவங்களை பிடிக்குறாங்க. ஆனா, மொபைல் போன் பேசிட்டு கார் ஓட்டுறவங்கள்ல ஒருத்தரை கூட பிடிக்கறதில்லையே,'' என்ற மித்ரா, "போலீஸ்காரங்களுக்கும் "கவுன்சிலிங்' கொடுக்க வேண்டியிருக்கு,'' என அழுத்துக் கொண்டாள்.
"ஏன்... என்னாச்சு...'' என, சித்ரா கேட்க, "சில நாட்களுக்கு முன்னாடி, ஒரு பெண் போலீஸ் மாயமாகிட்டாங்க. இவுங்களுக்கு 11 வயசுல பொண்ணு, 9 வயசுல பையன் இருக்காங்க. போலீஸ்காரம்மா, தன்னோட ஆண் நண்பரோட ஓடிப்போயிட்டாங்கன்னு, வழக்குப்பதிவு செஞ்சிருக்காங்க. ஆண் நண்பருக்கு, 19 வயசுல பொண்ணு, 13 வயசுல பையன் இருக்காங்க. இந்த வழக்கு, போலீஸ் தரப்புல பெரிய விவாதமா ஓடிக்கிட்டு இருக்கு,'' என்று நொந்து கொண்டாள் மித்ரா.
"ஆமாமா... நீ சொன்ன மாதிரி, குடும்ப உறவுகளை பத்தி, போலீஸ்காரங்களுக்கு "கவுன்சிலிங்' கொடுக்கணும். அப்பத்தான், மன அழுத்தத்துல இருந்து, அவுங்க விடுபடுவாங்க,'' என்றவாறு, ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி விட்டு, ரேஷன் கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.
நுழைந்த வேகத்தில் திரும்பி வந்த அவள், "எந்த பொருளுமே இல்லைன்னு சொல்றாங்க... எப்பத்தான் சரக்கு கொடுப்பாங்கன்னு தெரியலை'' என, புலம்பினாள்.
"ஒனக்கு விஷயம் தெரியாதா? திருப்பூரிலுள்ள கூட்டுறவு சங்கத்துக்கு பொருள் சப்ளை செய்ற, அவிநாசி சங்கத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் பாக்கி வெச்சிருக்காங்க. அந்த கணக்கை முடிக்காம பொருள் சப்ளை செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இவங்க பிரச்னையில், பொருள் கிடைக்காம பொதுமக்கள் அவதிப்படுறாங்க,'' என்று ரேஷன் கடை பிரச்னைக்கான உண்மையை சொன்னாள் மித்ரா.
"புதுசா வந்துருக்கிற ஆபீசர், எப்படி "டீல்' பண்ண போறாருன்னு தெரியலையே டீ,'' என்றபடி, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
"எந்த அதிகாரியை சொல்றீங்க... புதுசா வந்திருக்கிற சப்-கலெக்டரா, கல்வி அதிகாரியா,'' என துருவிக் கேட்டாள் மித்ரா.
" ரெண்டு வருஷமா, தொடக்க கல்வி துறையில் மாவட்ட அதிகாரி பணியிடம் காலியா இருந்துச்சு. பல பேரு "பொறுப்பு' அதிகாரியா இருந்தாங்க. மாவட்டத்துல இருக்கற சில நர்ஸரி, பிரைமரி ஸ்கூல்ல, விதிமுறைப்படி கட்டட அமைப்பு, வகுப்பறை இல்லைங்கற புகார் ரொம்ப நாளா இருக்கு. ஸ்கூல் நடத்துறவங்களுக்கு, "பொலிட்டிக்கல் சப்போர்ட்' இருக்கறதால, "பொறுப்பு' அதிகாரிகளா இருந்தவங்க, "நமக்கேன் வம்பு'ன்னு கண்டுக்காம விட்டுட்டாங்க. இப்ப வந்திருக்கிற ஆபீசுரு, எப்படி "டீல்' பண்ண போறாருன்னு தெரியலைன்னு சொன்னேன்,'' என விளக்கமளித்தவாறு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE