உபயோகம் முடிந்த பிறகு தூக்கி எறியப்படும் பேப்பர் கப், மருந்து பாட்டில்கள், கொசுவத்தி ரீபிள், திருமண பத்திரிகைகள், தினசரி பேப்பர்கள் போன்றவற்றைக் கொண்டு ஒருவர் கலை நயமிக்க அழகிய பல பொருட்களை படைத்து கொலுவாக வைத்துள்ளார்.
அவர் பெயர் இந்திராணி
தற்போது 74 நான்கு வயதாகும் இவருக்கு சிறு வயது முதலே கொலுவைப்பது என்றால் மிகவும் பிரியம்.கொலு பார்க்க வாருங்கள் என்று பத்திரிகை அடிதது உறவினர்,நண்பர்களுக்கு எல்லாம் கொடுப்பவர்.
'தீம்' கொலு என்று இப்போது பெரிதாக பேசப்படுகிறது ஆனால் பல வருடங்களுக்கு முன்பே பொங்கல்,விவசாயம்,கிராம திருவிழா என்பது போன்ற பல தீம்களில் கொலுவைத்தவர்.பிரதமர் இந்திரா கொண்டுவந்த இருபது அம்ச திட்டத்தை கொலுவாக வைத்திருந்தார். இது மாணவர்கள் மத்தியில் எளிதில் போய்ச்சேரும் என்று பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நவராத்திரி கொலு முடிந்த பிறகும் பல நாட்கள் மாணவர்கள் பார்க்கட்டுமே நீடிக்கப்பட்ட கொலு இவருடையது.
வித்தியாசமான சிந்தனை:
இப்படி வருடம் தவறாமல் இவர் வித்தியாசமாக சேகரித்த பொருட்களைக்கொண்டு கொலுநடத்திவந்தவர் கடந்த சில வருடமாக சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டார்.
அப்போதுதான் குப்பையில் வீசி எறியப்படும் பேப்பர் கப்,மருந்து பாட்டில்கள் உள்ளீட்ட பொருட்களை பார்த்துள்ளார்.இப்படி வீணாகும் பொருட்களைக்கொண்டு கொலுவிற்கு தேவைப்படும் பொம்மை உள்ளீட்டவைகளை செய்தால் என்ன என்று தோன்றியது.
இதன் விளைவாக பழைய செய்தித்தாளில் இருந்து டிஷ்யூ பேப்பர் பாக்ஸ், திருமண பத்திரிகையின் அட்டையை வெட்டி செய்த கிப்ட் கவர் மற்றம் துளசி மாடம்,பேப்பர் கப்பால் செய்யப்பட்ட வரவேற்பு தோரணங்கள், பூச்செடிகள், விதவிதமான பொம்மைகள் என்று செய்துள்ளார்.
இவரது படைப்புகள் பொதுவாக மிகுந்த கலைநயத்துடன் இருக்கும், இதை எல்லாம் எதில் இருந்து செய்தார் என்பது தெரிந்து கொண்டதும் பொருளின் மீதும், படைப்பாளி இந்திராணி மீதும் மதிப்பு கூடுகிறது.
மாணவியர்க்கு உதவி:
இதை வைத்து இவர் செய்யும் இன்னொரு முக்கியமான காரியத்தை தெரிந்து கொண்டால் இவர் மீது இன்னும் அதிக மதிப்புகூடும். ஒரு நாளைக்கு ஆறு மணியில் இருந்து எட்டு மணி நேரம் வரை செலவழித்து கொலு பொருட்களை உருவாக்குகிறார். ஜனவரி மாதத்தில் இருந்தே அந்த வருட கொலுவிற்கு பொருட்களை தயாரிக்க துவங்கிவிடுவார். கொலுவில் உள்ள பொருட்களை மிகக்குறைந்த விலையில் விற்றுவிடுவார். இப்படி விற்று கிடைக்கும் பணத்தை படிக்க முடியாத மாணவியர்க்கு அப்படியே கொடுத்துவிடுவார்.
இதோ இந்த வருட கொலுவிற்கு தயராகிவிட்டார். நாம் குப்பையாக கருதும் பொருட்கள் எல்லாம் வண்ண மயமான அழகுடன் மிளிர்கிறது.
இந்த கொலுவை பார்ப்பதன் மூலம் சுற்றுச்சழலுக்கு நாம் எந்த அளவு உதவமுடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்,இவரது கொலுவில் இடம் பெற்ற பொருட்களை வாங்குவதன் மூலம் ஏழை மாணவியர் படிப்பிற்கும் உதவலாம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இவரது வீட்டில் நடைபெறும் கொலுவை பார்க்க போகும் முன்பாக அவருக்கு ஒரு போன் செய்துவிட்டு போகவும், அவரது எண்: 9940146233.
- எல்.முருகராஜ்