மீண்டு(ம்) வருமா?| Uratha sindanai | Dinamalar

மீண்டு(ம்) வருமா?

Added : செப் 20, 2014 | கருத்துகள் (3)
Share
 மீண்டு(ம்) வருமா?

நாட்டில் அன்றாடம் நிகழும் பலவிதமான சம்பவங்கள், நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மாறாக, நம்பிக்கையை குலைக்கும் வண்ணமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.அவ்வாறு நம்பிக்கையைக் குலைக்கும் நிகழ்வுகளில், மிக மிக முக்கியமானது, அயல்நாடுகளில் குறிப்பாக, சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணம்.

நம் நாட்டில் சம்பாதித்து, அந்த சம்பாத்தியத்திற்கு முறையாக கணக்குக் காட்டி வருமான வரி கட்டாமல், அரசை டபாய்த்து, திருட்டுத்தனமாக அப்பணத்தை அயல்நாடுகளில், வட்டியே இன்றி, டிபாசிட் செய்துள்ளனர். அந்த டிபாசிட் தொகைக்கும் ஆண்டுதோறும் லாக்கர் கட்டணம் மாதிரி, ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகக் கட்டிக் கொண்டிருக்கும் தொகை ஏறக்குறைய, இரண்டு லட்சம் கோடி ரூபாய் என, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளி விவரம் தெரிவித்தது.
அந்த, இரண்டு லட்சம் கோடி ரூபாய் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வந்தால், நாட்டின் மொத்த அயல்நாட்டுக் கடன்களையும், பைசல் செய்து விடலாம். வரியே இல்லாமல், பல ஆண்டுகளுக்கு பட்ஜெட் தயாரிக்கலாம். நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் பங்கு பிரித்துக் கொடுக்க முடியும் என்பது போன்ற, பல கதைகள் கூறப்பட்டன.கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ., கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது, 'வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு, மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம்' என்பது.இது என்னடா வம்பாப் போச்சு. அந்த கறுப்புப் பணம் குறித்து எதுவும் கூறாமல், 'கம்'மென்று இருந்தால், மக்கள் பா.ஜ., கட்சிக்கு ஓட்டுப் போட்டு விட்டால், நம் கதை கந்தலாகி விடுமே என்று யோசித்த காங்கிரஸ் கட்சியும் 'ஆம்... ஆட்சிக்கு வந்தால், நாங்கள் முதல் வேலையாக செய்ய இருப்பது, வெளிநாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது தான்' என்று, 'கயிறு' திரித்தது.

மக்களும், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் வாக்குறுதியை விட, காங்கிரசின் வாக்குறுதியையே நம்பித் தொலைத்தனர். அவ்வாறு நம்பித் தொலைத்ததற்கு முக்கிய காரணம், நாட்டுக்கு விடுதலை வாங்கித் கொடுத்த கட்சி என்பது தவிர, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அனுபவசாலிகள். அவர்களால் முடியும் என்று நம்பி ஆட்சியில் அமர வைத்தனர்.தேர்தலின் போது, கொடுத்த கறுப்பு பண மீட்பு குறித்து, 2014 வரை காங்கிரஸ் துரும்பைக் கூட கிள்ளி போடாதது, மக்களை யோசிக்க வைத்தது.உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு, காங்கிரஸ் அரசை கடுமையாக கண்டித்த போதும், அவர்கள் கவலையே படவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கும் சேர்த்து அல்வா கொடுத்து கொண்டிருந்தனர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் துவங்கி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வரை, நாளும் ஒரு ஊழல் புறப்பட்டு, நாட்டு மக்களை பீதியடைய வைக்க, இதற்கு மேலும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதும், தனக்குத் தானே குழி வெட்டி, அதில் தானே அமர்ந்து, தானே மண்ணையும் அள்ளி அள்ளிப் போட்டுக் கொள்வதும் ஒன்று என்று உணர்ந்த மக்கள், 2014 தேர்தலில், காங்கிரசை முற்றிலுமாகப் புறக்கணித்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலையை உருவாக்கினர்.

அப்போதாவது அக்கட்சிக்கு புத்தி வந்ததா என்றால், இல்லை என்பது தான் நிதர்சனம்.'எதிர்க்கட்சி பதவி கொடு கொடு' என்று பதவி வெறி கொண்டு அலைந்து, தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டி கொண்டிருக்கின்றனர்.தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர, பா.ஜ., அரசு முயற்சியைத் துவக்கியது. உச்ச நீதிமன்றமும் வழி காட்டியது.வெளிநாட்டு வங்கிகளும், அங்கு முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பட்டியலை தர தயாரானது.வெளிநாடுகளில், குறிப்பாக சுவிஸ் வங்கிகளில், இன்றைய நிலவரப்படி, முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் முதலீட்டுத் தொகை, 14 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இரண்டு லட்சம் கோடிகள் என்றிருந்த முதலீடு வெறும், 14 ஆயிரம் கோடிகள் ஆனது எப்படி? 1.86 லட்சம் கோடிகள் எப்படி மாயமானது? எங்கே சென்று மறைந்தது?யாருக்காவது தெரியுமா?

நம் நாட்டிலேயே வங்கிகளில் வீட்டுக்குத் தெரியாமல், கணக்கு வைத்திருப்போர் உண்டு. தாங்கள் சாகாவரம் பெற்ற, சிரஞ்சீவிகள் என்ற நினைப்பில், அந்த கணக்குகளுக்கு நாமினேஷன் (வாரிசு) கூட யார் என்று குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள்.இவர்கள் காலமாகி விட்டால், வங்கியில் உள்ள முதலீட்டுத் தொகை, கேட்பார், மேய்ப்பார் இன்றி அப்படியே உறங்கிக் கொண்டிருக்கும். அதாவது வங்கிக்கும், இவர் காலமாகிவிட்ட தகவல் தெரியாது. மனைவி மக்களுக்கும், இவருக்கு வங்கியில் உள்ள முதலீடு குறித்து தெரியாது.சுவிஸ் வங்கி, இன்றைய தேதியில், எங்கள் நாட்டு வங்கிக் கணக்கில் உள்ள இந்தியர்களின் முதலீடு, 14 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டிருப்பது, இதுபோன்ற, 'அன்க்ெளய்ம்டு டிபாசிட்'களாகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு தானே?வெளிநாடுகளில் இருந்து திருப்பி எடுத்து வரப்பட்ட, அந்த, 1.86 லட்சம் கோடிகள், முறைகேடாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளனவா?யாருக்குத் தெரியும்?இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படும் தொகைகள் மீண்டு(ம்), இந்தியாவுக்கு முறைப்படி திரும்பும் என்ற நம்பிக்கை அற்றுப் போய் விட்டது.
வேறு என்ன சொல்ல?
இ-மெயில்: dmrcni@dinamalar.in

- எஸ்.ராமசுப்ரமணியன்--
எழுத்தாளர் - சிந்தனையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X