மாண்டலின் சீனிவாஸ் உடல் தகனம்: பிரபலங்கள் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாண்டலின்' சீனிவாஸ் உடல் தகனம்: பிரபலங்கள் அஞ்சலி

Added : செப் 20, 2014

சென்னை : சென்னையில், நேற்று முன்தினம் மரணமடைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர், 'மாண்டலின்' சீனிவாசின் உடல், நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.

சென்னை, வடபழனியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த, 'மாண்டலின்' சீனிவாஸ், 45, கல்லீரல் பாதிப்பால், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல், வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை, 9:45 மணிக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவர் கூறுகையில், ''மாண்டலின் சீனிவாசின் மறைவு, ஈடுசெய்ய முடியாத இழப்பு. தனது சிறு வயது முதலே, கர்நாடக இசையை, உலகளவில் பரப்பி, புகழ்க்கொடி நாட்டி இருக்கிறார். இசை உலகில், மிகச்சிறந்த சாதனைகளை புரிந்த அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

உடல் தகனம் : கர்நாடக இசை பாடகர்கள் சுதா ரகுநாதன், டி.என்.சேஷ கோபாலன், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் மற்றும் கே.வி.பிரசாத், பிரபல பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன், கார்த்திக், நரேஷ் அய்யர், 'கானா' பாலா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, வயலின் கலைஞர் வி.வி.சீனிவாச ராவ், 'கடம்' கார்த்திக், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இல்லத்தில் இருந்து, அவரது உடல், மதியம், 2:30 மணிக்கு ஊர்வலமாக, பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது தந்தை சத்யநாராயணன், இறுதி சடங்கு செய்தார். 3:30 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன்: அவருக்கும், எனக்கும், 20 ஆண்டுகளாக மிகச்சிறந்த நட்பு இருந்தது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவரது இசையை ரசித்திருக்கின்றனர். இசைத் துறையில் அவரது இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது.

நல்லி குப்புசாமி: மிகச்சிறிய வயதிலேயே, மிகச்சிறந்த புகழ் பெற்றவர். இங்கு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், அவரது இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அவர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

பாடகர் ஹரிஹரன்: 'மாண்டலின்' சீனிவாசை போன்ற ஒரு தங்கமான மனிதரை யாரும் பார்த்திருக்க முடியாது. என்னுடைய மிகச் சிறந்த சகோதரர்.அவரை, இசைக்கலைஞர் என்று சொல்வதை விட, மகா இசை மேதை என்று தான் சொல்ல வேண்டும். அவரது மரணம் தந்த அதிர்ச்சியால், எனக்கு வார்த்தைகளே வரவில்லை.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா: அவரை சாதாரண மனிதப்பிறவி என்று சொல்வதை விட, தெய்வப் பிறவி என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அவரது இசை, பலரது மனதிற்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து இசை அமைக்க வேண்டும் என்ற என் ஆர்வம் கடைசி வரை நிறைவேறாமலே போய் விட்டது.இவ்வாறு, பிரபலங்கள் பேட்டி அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X