வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு : கல்வி துறையை எதிர்த்து முற்றுகிறது போராட்டம் | வெயிட்டேஜ் பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு : கல்வி துறையை எதிர்த்து முற்றுகிறது போராட்டம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு : கல்வி துறையை எதிர்த்து முற்றுகிறது போராட்டம்

Added : செப் 23, 2014

சென்னை: 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து
உள்ளனர்.ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, தகுதி தேர்வை (டி.இ.டி.,), ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்துகிறது. தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண், கல்வி தகுதியில், 40 சதவீத மதிப்பெண் என, 100 மதிப்பெண்ணுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
'கிரேடிங்' முறைபட்டதாரி ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 15; ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு, 25 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.
இந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயத்தில், 'கிரேடிங்' முறை பின்பற்றப்பட்டது. அதாவது, பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்துக்கும் மேல் பெற்றிருந்தால், 10 மதிப்பெண்; 80 - 90 சதவீதம் பெற்றிருந்தால், 8; 70 - 80 சதவீதம் பெற்றிருந்தால், 6 என, கிரேடு முறை பின்பற்றப்பட்டது.
இதே போல், பட்டப் படிப்பில், பி.எட்., படிப்பில், 70 சதவீதம் மேல் பெற்றிருந்தால், 15 மதிப்பெண்; 50 - 70 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12 மதிப்பெண் என, பின்பற்றப்பட்டது.
தமிழக அரசு கையாண்ட, 'கிரேடிங்' முறையை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, ரத்து செய்தார். மதிப்பெண் கணக்கிடுவதற்கான புதிய முறையை கொண்டு வரும்படி, அரசுக்கு பரிந்துரை செய்தார். கடந்த, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மே மாதம் முதல் அமல்இதையடுத்து, நீதிபதியின் பரிந்துரைப்படி, புதிய, 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, கடந்த மே மாதம், அரசு கொண்டு வந்தது. அதன்படி, தகுதி தேர்விலும், கல்வி தகுதி தேர்விலும், எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ, அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த, ஏப்ரலில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, அதைத் தொடர்ந்து, மே மாதம், பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களில், 'சரிவர பரிசீலிக்காமல், தனி நீதிபதி தெரிவித்த பரிந்துரையை, அரசு ஏற்றுக் கொண்டு, அரசாணை பிறப்பித்துள்ளது. தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 60ல் இருந்து, 55 சதவீதம் என, தகுதி மதிப்பெண் அளவை குறைத்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட, தகுதி தேர்வு மதிப்பெண்ணை, குறைக்கும் அதிகாரம், அரசுக்கு இல்லை' என, கூறப்பட்டுள்ளது.
'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு
மனுக்களை, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர், டி.கிருஷ்ணகுமார், ஆஜராகினர். 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, தமிழக அரசு, தன் அதிகாரத்தை செயல்படுத்தி உள்ளது. தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டதன் மூலம், தகுதி அடிப்படையில் மனுதாரர்களை பரிசீலிப்பதற்கான உரிமை பறிபோய் விடவில்லை.
கடந்த, 2013, ஆகஸ்டில், தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 2012, அக்டோபரில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தேர்வு எழுதிய பின், அரசு பின்பற்றிய நடைமுறையை, மனுதாரர்கள் எதிர்க்க முடியாது.
மனுதாரர்கள், 'வெயிட்டேஜ்' முறையையும், தகுதி தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறையை கையாள்வதையும் எதிர்த்துள்ளனர். கல்வி தகுதிக்கு என, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது தொடர்பாக, இந்தப் பிரச்னையை முன்பு யாரும் எழுப்பவில்லை.
மூன்று விதமான தேர்வுகளை (பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., படிப்பு) அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளது. இந்த அளவுகோல், நியாயமானது. படிப்பில் எடுத்த மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 60 சதவீத மதிப்பெண் அளிக்கப்படுகிறது. மீதி, 40 சதவீதம் தான், அடிப்படை கல்வி தகுதிக்கு வழங்கப்படுகிறது.
எனவே, தகுதி தேர்வுக்கு, அரசு பின்பற்றியுள்ள மதிப்பெண் நடைமுறையை, தன்னிச்சையானது எனக் கூற முடியாது. அரசு பின்பற்றும் நடைமுறை சரியல்ல என, மனுதாரர்கள் தான் விளக்க வேண்டும்.முன்பு பின்பற்றிய நடைமுறை (கிரேடிங்) சரியில்லை எனக் கூறி, அதை, தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். அதனால், முரண்பாடுகளை, அரசு சரியாகவே நீக்கி உள்ளது.
மற்ற மாநிலங்களான, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் பின்பற்றப்படும் நடைமுறையை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறை சரியானது தான். அரசு பின்பற்றும் முறையில் நியாயமில்லை என, மனுதாரர்களால் விளக்க முடியவில்லை.
தனி நீதிபதியின் பரிந்துரையில், எந்த தவறும் இல்லை. அதைத் தொடர்ந்து, அரசு பிறப்பித்த உத்தரவிலும், எந்த சட்ட விரோதமும் இல்லை. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து, போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்
புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.
இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X