திண்டுக்கல் :பழநியில் பக்தர்களை ஏமாற்றும் புரோக்கர்களில் 30 பேரை கைது செய்துள்ள போலீசார், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பழநிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்களை வழிமறிக்கும் புரோக்கர்களில் பலர், சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். புரோக்கர்கள் போர்வையில் சுற்றித்திரியும் திருடர்கள், பெண் பக்தர்களின் நகை, பணத்தை திருடி வந்தனர். இவர்களின் தொல்லையால் பழநி வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மன அமைதியை இழந்து விரக்தியடையும் நிலை ஏற்பட்டது.
தற்போது இதை தவிர்ப்பதற்கான முயற்சி, மாவட்ட போலீஸ் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையில் தனிப்படையினர் பழநியில் தொடர்ந்து சோதனை நடத்தி புரோக்கர்களை பிடித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும், பக்தர்களுக்கு தொல்லை கொடுத்ததாக 100 புரோக்கர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பழநி டி.எஸ்.பி., சண்முக சுந்தரம் கூறுகையில்,"அபிஷேக பொருட்கள் என்ற பெயரில் ஏமாற்றுவதும், வின்ச், ரோப்காரில் அழைத்து செல்வதாக கூறி அலைக்கழிப்பதை புரோக்கர்கள் செய்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக புரோக்கர்களில் சிலரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்துள்ளோம். புரோக்கர்கள் போர்வையில் திருடர்களும் சிக்கியுள்ளனர். பக்தர்களுக்கு யார் இடையூறு விளைவித்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE