திண்டுக்கல் :கொடைக்கானலில் வெளிநாட்டினர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு விதமான பிரேத பரிசோதனை அறிக்கைகள் அளிக்கப்பட்டிருப்பதால் போலீசார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லண்டன் நாட்டை சேர்ந்தவர் வில்லியம் ஸ்டெனா கிளே,40. கொடைக்கானலில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து துாண்பாறைப் பகுதியில் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2012 ல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் உடல் 5 நாட்களாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. வசதி குறைவு மற்றும் பூச்சி தாக்குதலினால் தேனி அரசு மருத்துவமனைக்கு உடல் மாற்றப்பட்டது. லண்டனில் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என சான்றிதழ் வந்ததால், கொடைக்கானலில் உடல் புதைக்கப்பட்டது.
இவரது உடலை பிரேத பரிசோதனை செய்த கொடைக்கானல் டாக்டர்கள், மாரடைப்பினால் இறந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
தேனி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்ததில்,'தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெட்டு காயத்தால் இறந்திருப்பதாகவும், எனவே, கொலை செய்யப்பட்டிருப்பதாக தங்கள் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இந்த இரண்டு அறிக்கைகளால் குழப்பமடைந்த போலீசார், விசாரணையை காலதாமதப்படுத்தி வந்தனர்.
இதற்கிடையில், லண்டன் துாதரக அதிகாரிகள், வில்லியம் கொலை வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கேட்டிருப்பதால், இந்த விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.வெளிநாட்டினர் கொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத அப்போதைய கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பொன்ரகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கொலை வழக்கு தொடர்பாக மீண்டும் தீவிர விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE