திருமண
நாள், பிறந்தநாள் உட்பட பல்வேறு விழாக்களை ஆடம்பரமாக
கொண்டாடுவோர் ஒருபுறம் இருந்தாலும், ஏழை குழந்தைகளின் கல்விக்கு
உதவுவது, அனாதைகளுக்கு அன்னதானம் இடுவது, மரம் நடுவது போன்ற நல்ல
காரியங்களை செய்யும் விழிப்புணர்வும் சமீபகாலமாக அதிகரித்து
வருகிறது. இப்படி நல்ல காரியம் செய்ய நினைப்பவர்களின் துணையோடு,
தமிழகத்தை பசுமை போர்வையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் டீ
வியாபாரி ஒருவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, நெல்லை -
விருதுநகர் இடையே, எக்ஸ்பிரஸ் ரயிலில் டீ வியாபாரம் பார்த்துக்
கொண்டிருந்தவர், நெல்லை, ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அர்ஜுனன், 42.
2.5 லட்சம் மரங்கள் :
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோன தனது மகன் நினைவாக வீட்டிற்கு அருகே ஒரு அத்திமரத்தை நட்டார். அந்த மரம் செழிப்பாக வளர்ந்ததை கண்டு, அன்று முதல் மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட அர்ஜுனன், தனது சீடர்களின் துணையோடு இன்று வரை தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் மரங்களை நட்டுள்ளார். இதுகுறித்து அர்ஜுனன் கூறியதாவது: தற்போதுள்ள காலகட்டத்தில், சுற்றுச்சூழலை மேம்படுத்த, பசுமை போர்வையை வேகமாக அதிகரிக்க வேண்டியுள்ளது. மரக்கன்றுகளை நட்டு, அவை வளர்வதற்கு சில ஆண்டுகள் ஆகும். அதுவரை கால்நடைகளின் பிடியில் இருந்து, அவற்றை காப்பாற்றுவது கடினமான காரியம். இதனால் தான் எட்டு அடி உயரம் கொண்ட கிளைகளை, மரங்களாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இத்தனை உயரம் கொண்ட மரங்களை பொது இடங்களில் நடும் போது, அவற்றை கால்நடை மேயாது. மூன்று மாதங்களில் இதுபோன்ற கன்றுகள் வேகமாக வளரும். வளர்ந்த மரங்கள் தண்ணீரையும், அதிகமாக உறிஞ்சாது.
செப்பறை வளபூமி பசுமை உலகம் அறக்கட்டளை' என்ற எங்கள் அமைப்பின் மூலம் திருவாரூர், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகமான எண்ணிக்கையில் மரங்களை நட்டுள்ளோம். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 700 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழி சாலையில், சாலையோரம் மரங்களை நட வேண்டும் என்பது அறக்கட்டளையின் இலக்கு. அரசு இதற்கு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும். மரங்களை வளர்க்கவும், அவற்றை நடுவதற்கும் நன்கொடைகள் வழங்க, பல நிறுவனங்கள் தயாராக உள்ளன. பணிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். சென்னையில் 25 சதவீதம் பசுமை போர்வை திட்டத்தை மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். இதுகுறித்து, நாளிதழில் செய்தி படித்த பிறகு, மேயரை நேரடியாக அணுகி மரம் நடுவது குறித்து பேசினோம்.
சென்னையில் அனுமதி :
சென்னை போன்ற நெரிசல் மிகுந்த சாலைகளில், வளர்ந்த மரங்களை நட்டு வளர்ப்பதே சிறந்தது. மகாகனி மரங்கள் சென்னைக்கு உகந்தவை. வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்ட இந்த மரங்கள், முதற்கட்டமாக, 1000 மரங்களை சில மாதங்களில் சென்னையில் நட, மேயர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த மரம், 25 அடி உயரத்திற்கு மேல் தான் கிளைகள் வரும். இதன் மூலம் மரக்கிளைகளால் வாகனங்களுக்கோ, வடங்களுக்கோ பாதிப்பு இருக்காது. சென்னையில் மரம் நடுவதற்கு நன்கொடையாளர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி அனுமதி கொடுத்தால் மட்டும் போதும். மரம் வளர்ப்பதில், கன்றுகளை கொடிகளில் பரவவிட்டு வேகமாக எப்படி மரமாக்குவது, கிளைகளை ஆணி வேருடன் கூடிய மரங்களாக எப்படி உருவாக்குவது என, எங்களின் பலகட்ட சோதனை முயற்சிகள் வெற்றிகரமாகியுள்ளன. இவ்வாறு அர்ஜுனன் கூறினார்.
- நமது நிருபர் -