சிறிது நேரத்துக்குபின் வெளியே வந்து, ""அரிசி மட்டும்தான் இருக்கு. மூன்று மூட்டை சர்க்கரை, பருப்புன்னு கொஞ்சமா ஒதுக்கீடு செஞ்சாங்களாம். அதுவும் மூன்று மணி நேரத்துல காலியாகிருச்சுன்னு சொல்றாங்க,'' என, சலிப்புடன் ஸ்கூட்டரை "ஸ்டார்ட்' செய்தாள்.
"அரிசியாவது வாங்கலையா,'' என்று விடாப்பிடியாக கேட்டாள் மித்ரா.
"அது, போன மாசம் வாங்கியதே இன்னும் இருக்கு,'' என்றாள் சித்ரா.
"கடைக்கு வெளியே நான் நின்னுட்டிருந்தப்ப, ஒரு பாட்டி வந்தாங்க. அரிசி வாங்கினா தான் இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பாங்கன்னு கடையில் சொன்னாங்களாம். அதனால, பொருட்கள் வந்தா தகவல் தரச்சொல்லி, சேல்ஸ்மேன்கிட்ட சொல்லியிருக்கலாமே,'' என்றாள் மித்ரா.
"அதெப்படி சொல்வாங்க. ரேஷன் கடையில நிரந்தரமா எந்த சேல்ஸ்மேனும் இருக்க மாட்டேங்கிறாங்க. மாசத்துக்கு மாசம் வெவ்வேறு கடைக்கு மாறிக்கிட்டே இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"ஏன், அடிக்கடி கடை மாத்துறாங்க; புகார் ஏதும் வந்து நடவடிக்கை எடுக்கிறாங்களோ, என்னவோ,'' என, அப்பாவியாய் சொன்னாள் மித்ரா.
"அதெல்லாம் இல்லை. ஆபீசர் ஒருத்தரு, ரேஷன் கடை ஊழியர் ஒருவரை தன்னோட ஏஜன்டா நியமிச்சிருக்கார். வேலை குறைவா இருக்கற கடை வேணுமா? வியாபாரம் அதிகம் நடக்குற கடை வேணுமான்னு சேல்ஸ்மேன் முடிவு செஞ்சு, அதற்கேற்ப குறிப்பிட்ட தொகையை அவர்கிட்டே கொடுத்தா போதுமாம். அவர் அந்த ஆபீசர்கிட்டே ஆர்டர் வாங்கி கொடுத்துடுவார். இப்படித்தான் சிட்டியில் பல பேர் கடை மாறியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"நம்மூர் மாநகராட்சியில, ஒவ்வொரு மாசமும் தண்ணீர் லாரி வாடகைக்கு 12 லட்சம், டீசல் செலவுக்கு 22 லட்சம் ரூபாய் செலவாகுதாம்பா... ஆனா, வரி வசூல் மட்டும் எதிர்பார்க்குற அளவுக்கு இருக்கிறதில்லை,'' என்ற கவலையுடன் அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"மாநகராட்சியில ஆளுங்கட்சி கவுன்சிலர்கள்தான் அதிகமா இருக்காங்க. மன்றத்துல கேள்வி கேட்க ஆளில்லை. நிர்வாகத்தரப்புல இஷ்டத்துக்கு செலவு செய்றாங்க. நீ சொல்ல வந்ததை, கொஞ்சம் விளக்கமா சொல்<லு,'' என, கேட்டாள் சித்ரா.
"தண்ணீர் வசதி இல்லாத ஸ்கூலுக்கும், "ஸ்லம்' ஏரியாக்களுக்கும், வாடகை லாரி மூலமா தண்ணீர் கொடுக்குறாங்க. மாசம் 12 லட்சம் ரூபாய் செலவாகுதுனு ஒவ்வொரு மாசமும் மன்றத்துக்கு தீர்மானம் வரும். இப்ப, மொட்டையா, "லாரி வாடகை செலவை அனுமதிக்கணும்'னு தீர்மானத்தை சுருக்கமா முடிச்சுக்கிறாங்க. எவ்வளவு செலவாகுதுனு சிலருக்கு மட்டும்தாங்க தெரியும். முதலாவது மண்டலத்துல தண்ணிர் லாரி எங்க போகுது? எங்க வருதுன்னே தெரியா மாட்டேங்குது. தேவையான இடங்களுக்கு "பைப்' அமைச்சுக் கொடுத்தாங்கன்னா, லாரி வாடகை செலவு மிச்சமாகுமே,'' என, வெகுளித்தனமாய் சொன்னாள் மித்ரா.
"குழாய் அமைச்சுக் கொடுத்தா, பிரச்னை தீர்ந்திருமே; "டிரிப்' கணக்கை அதிகமா எழுதி, காசு பார்க்க முடியாதே,'' என, தண்ணீர் லாரி பில் சூட்சுமத்தை விளக்கிய சித்ரா, ""டீசல் செலவை பத்தி சொன்னீயே, அதென்ன,'' என கேள்வி எழுப்பினாள்.
"அதுவாக்கா, மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டு. அதில், 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியார் வசமாகியிருக்கு. இதுக்கு முன்னாடி, 60 வார்டுகளிலும் குப்பை அள்ளுற வாகனங்களை மாநகராட்சி பயன்படுத்த, டீசல் செலவு 15ல் இருந்து 20 லட்சம் ஆனதாம். இப்ப, 30 வார்டு களில் மட்டுமே அள்ளுறாங்க. ஆனா, டீசல் செலவு 22 லட்சத்தை தாண்டி யிருச்சு. டீசல் ஊழல் நடக்குதுன்னு தெளிவாத் தெரியுது. ஆனா, யாரும் சிக்க மாட்டேங்கிறாங்க,'' என்றவாறு விவாதத்தை முடித்தாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE