கவிமணியின் கடைசி கவிதை: இன்று கவிமணி நினைவு நாள்
''பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த கவி...கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவர்களிடத்தில் அவர் இயற்றிய கவிதையை நாம் புகழ்ந்து பேசினால், அதை அவர் ரசிப்பதில்லை. அவர் புகழ்ச்சியைச் சிறிதும் விரும்பியதில்லை,'' என கவிமணி குறித்து தெரிவித்துள்ளார், தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்.,
இருபதாம் நுாற்றாண்டின் புகழ் பெற்ற கவிஞர்களில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தனி இடமுண்டு. மலரும், மாலையும், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உமர் கயாம் போன்ற அவரது காவியங்கள் அழியாப் புகழ்பெற்றவை.
குமரி மாவட்டம் தேரூரில் 1876 ஜூலை 14ல் பிறந்த கவிமணி, அங்கு ஆரம்ப கல்வியை முடித்தார். அவரது 19ம் வயதில் தேரூரில் குடிகொண்டுள்ள அம்பாளின் பெயரால், 'அழகம்மை ஆசிரிய விருத்தம்' என்ற நுாலை வெளியிட்டார். ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
முதல்வராக இருந்த ராஜாஜிக்கு கவிமணி மீது அபரிதமான மரியாதை. ஒரு முறை கன்னியாகுமரிக்கு ராஜாஜி சென்றிருந்தார். புத்தேரியில் வசித்த கவிமணியை பார்க்க விரும்பினார். கார் போக கூட வழியில்லாத இடத்தில் அவர் வசித்தார். அதை சுட்டி காட்டிய அதிகாரிகள், அவரை அழைத்து வரட்டுமா எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இருக்குமிடத்திற்கு சென்று சந்திப்பது தான் மரியாதை எனக் குறிப்பிட்ட ராஜாஜி, காரை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு நடந்து சென்று அவரை சந்தித்துள்ளார்.
கவிமணியை கொண்டாடிய டி.வி.ஆர்.,:சென்னை மாநில தமிழ் சங்க 7வது ஆண்டு விழாவில் 1940ல், 'கவிமணி' பட்டத்தை தமிழறிஞர் உமாமகேசுவரம்பிள்ளை வழங்கினார். கவிமணிக்கும், தினமலர் நிறுவனர் டி.வி ஆருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. தினமலர் முதல் நாளிதழ் கவிமணியின் வாழ்த்து கவிதையுடன் தான் வெளி வந்தது.
கவிமணியின் 70வது பிறந்த நாளை கொண்டாட தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., விரும்பினார். ஆனால், கவிமணி மறுத்து விட்டார். பிறகு டி.வி.ஆர்., தன் நண்பர்களிடம் கூறி அவரை சம்மதிக்க வைத்துள்ளார். நாகர்கோவில் எஸ்.எல்.பி., பள்ளியில் கவிமணிக்கு பாராட்டு விழா நடந்தது. அந்த காலத்திலேயே இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர். இதுதான் கவிமணிக்கு நாஞ்சில்நாடு நடத்திய முதல் பாராட்டு விழா என டி.வி.ஆர்., குறிப்பிட்டுள்ளார்.
எல்லை மாநாட்டில் ஆவேசம்: இன்று தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி மாவட்டம், அன்று திருவிதாங்கூர்-கொச்சி ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அன்றைய நாஞ்சில் நாட்டு மக்கள், தாங்கள் தாய் தமிழகத்துடன் இணைவது தான் சரி என குரல் எழுப்பினர். அதற்கான ஆதாரங்களை ஏராளமாக வைத்திருந்தார் கவிமணி.
1950 ஜன., 6ல் கன்னியாகுமரியில் தென்குமரி எல்லை மாநாடு நடந்த போது, அதை துவக்கி வைத்து தன்னிடமிருந்த ஆதாரங்களுடன் விரிவாக பேசினார். பின் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது. உடல் நலம் குன்றியிருந்த போதும், தினமலர் நாளிதழுக்கு ஒரு கவிதையை 1954 செப்., 24ல் எழுதி அனுப்பினார். இரு நாட்களிலேயே அவர் இறந்ததால், அந்த கவிதையே அவரது கடைசி கவிதையாகவும் அமைந்தது.
தேரூரிலுள்ள கவிமணி நினைவிடத்திற்கு ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். அதன் டிரஸ்டியாக அவரது வம்சாவளியை சேர்ந்த பழனிவேல்பிள்ளை உள்ளார். கவிமணி நம்மை விட்டு பிரிந்தாலும், பள்ளி பாடங்களில் இடம் பெற்ற அவரது பாடல்கள் மூலம் நம்மிடம் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...இருப்பார்.
- அய்யம்பெருமாள், கவிமணியின் கொள்ளு பேரன், உதவி கமிஷனர், வருமான வரித்துறை, www.lawwal_kk@yahoo.co.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE