குற்றமும் தண்டனையும்

Added : அக் 01, 2014 | கருத்துகள் (1)
Advertisement
குற்றமும் தண்டனையும்

லஷ்கர்-இ-தோய்பா என்றால் தூய்மையானவர்களின் படை என்று பொருள். காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கு எதிராகப் போராடும் வலிமை மிகுந்த ராணுவப் படை. அதன் தகவல் தொடர்புச் செயலாளரான அப்துல்லா முண்டாஸர் தனது அமைப்பு குறித்தும் அதன் இலக்குகள் குறித்தும் என்னிடம் பேச முன்வந்தார். மிகவும் துடிப்பான இளைஞர். முகத்தில் தாடி, தலையில் டிரேட்மார்க் பதான் தொப்பி. பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் அபோட்டாபாத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அவரை முதன்முதலாகச் சந்தித்தபோது, கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவராகத் தெரிந்தார். கேள்விகள் கேட்கும் புதிய நபரைச் சந்தேகக் கண்களுடன் பார்ப்பவராக இருந்தார்.

1990-களில் இந்தியா காஷ்மீரில் இருந்த பிரிவினைவாத ஆயுதக் குழுக்களை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கியிருந்தது. அப்போது பிரிவினைவாத இயக்கத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்ட 1990-களின் பிற்பகுதியில் புதிய அலையாக லஷ்கர்-இ-தோய்பா களத்தில் குதித்தது.


மதவாதமும் ஆயுத தாக்குதலும்:

ஹர்கத்-உல்-அன்ஸார், அதன் அடுத்தகட்ட அமைப்பான ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து லஷ்கர்-இ-தோய்பா இன்று செயல்படுகிறது. இந்த அமைப்பு காஷ்மீர் பிரச்னையில் மதத்தை வலுவாகப் புகுத்தி இருக்கிறது. ஆயுதத் தாக்குதல்களிலும் தீவிரமான பாணியை வெளிப்படுத்திவருகிறது.

காஷ்மீர் பிரச்னையில் மதவாத அம்சம் ஆரம்பத்திலிருந்தே இருந்துவந்துள்ளது என்றாலும் அதன் ஆரம்ப நிலைகளில் சுயாட்சி கோரும் அரசியல் இயக்கமாகவே பெரிதும் முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீநகர் முஸ்லிம்களின் தலைமை மதகுருவும் பிரிவினைவாதத் தலைவருமான உமர் ஃபரூக்கூட, காஷ்மீர் பிரச்னை என்பது அடிப்படையில் ஓர் அரசியல் பிரச்னைதான் என்றே சொல்லி வந்தார். ஆனால், லஷ்கர், ஹர்கத் போன்றவர்கள் அதை வெறும் மதப் பிரச்னையாகவே பார்த்தனர். அவர்களைப் பொருத்தமட்டில், அது ஒரு ஜிஹாத், அதாவது புனிதப் போர். இந்த ஜிஹாத் கருத்தாக்கம் 1980-களில் தெற்கு ஆசிய முஸ்லிம்களிடையே அமெரிக்க, பாகிஸ்தானிய ஆதரவுடன் மீண்டும் கிளறிவிடப்பட்டது. சோவியத் ஆதரவு பெற்ற ஆஃப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக ஜிஹாத் என்ற பெயரில் கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காஷ்மீர் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகட்டங்களில் தாக்கிவிட்டுத் தப்பித்து ஓடும் வழிமுறையே பின்பற்றப்பட்டது. தீவிரவாதிகள் இந்திய ராணுவ மையங்கள்மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு, மக்கள் திரளுக்குள் பதுங்கித் தப்பிவிடுவார்கள். அல்லது ராணுவ வாகனங்களைக் கண்ணி வெடி வைத்துத் தகர்ப்பார்கள். எப்போதாவது மறைந்திருந்து தாக்குதலில் ஈடுபடுவார்கள். சில நேரங்களில் உளவாளி என சந்தேகிக்கப்படுபவரைக் கொல்வார்கள்.


தற்கொலை தாக்குதல்கள்:

ஆஃப்கன் பிரச்னையில் கற்றுக்கொண்ட சில பாடங்களை லஷ்கரும் ஹர்கத்தும் காஷ்மீரில் புகுத்தினர். ஹர்கத்-உல்-அன்சார், அதன் மறு அவதாரமான ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய இரு அமைப்புகளுமே தாலிபனுடன் தொடர்புகொண்டவை. தாலிபன்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த அமைப்புகளுக்கு ஆஃப்கனிஸ்தானுக்குள்ளேயே முகாம்கள் இருந்தன. இந்த அமைப்புகள் ஏற்கெனவே காஷ்மீரில் இருந்த ஆயுதக்குழுக்களைவிடத் தைரியம் மிகுந்தவை. இந்திய ராணுவத்தை நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் திறன் கொண்டவை. ராணுவ மையங்களுக்குள் அதிரடியாக நுழைந்து, தங்களால் முடிந்தவரை தாக்குதலை நீடிக்கச் செய்துப் பலரைக் கொன்றிருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே மிகவும் பெரிய இந்திய ராணுவத்தளமான ஸ்ரீநகரில் இருக்கும் பதாமிபாக் பகுதிக்குள்ளேயே ஊடுருவித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

லஷ்கர், ஹர்கத், ஜெய்ஷ் அமைப்பினர் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் வசிக்கும் முஸ்லிம் அல்லாத கிராம மக்களைக் கொன்று குவித்திருக்கின்றனர். இந்திய அதிகார அமைப்பின் மையத்துக்கே தம் தாக்குதலைக் கொண்டுசென்றுள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் ஸ்ரீநகரின் மாநில சட்டமன்றக் கட்டடத்தின் மீதும் தில்லியில் இருக்கும் இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தற்கொலைத் தாக்குதல்களாகவே இருந்தன. நாடாளுமன்றத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாய நிலை ஏற்பட்டது.


இந்தியாவுக்கு விடப்பட்ட சவால்:

இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; தனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது என்று பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துவருகிறது. இந்திய அரசு, தன் மதச் சார்பற்ற ஜனநாயகத் தன்மைக்கும் தேசிய அடையாளத்துக்கும் விடப்பட்ட பெரும் சவாலாகவே இந்தத் தாக்குதல்களைக் கருதுகிறது.

ஜனவரி 2002-ல், அதாவது நான் அப்துல்லா முண்டாஸரைச் சந்தித்து இரண்டு வருடங்கள் கழித்து, பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப், லஷ்கர், ஜெய்ஷ் போன்ற அமைப்புகளைத் தடை செய்தார். ஆனால், அந்த அமைப்புகள் வேறு பெயர்களில் இப்போதும் இயங்கி வருகின்றன. 2005 அக்டோபரில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தத் தீவிரவாத அமைப்புகள் நிவாரணப் பணிகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டன. இதனால் மக்கள் மத்தியில் இவற்றின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. ஆனால், நன்கொடை திரட்டுவது, ஆட்களைச் சேர்ப்பது, தீவிரவாதப் பயிற்சிகள் அளிப்பது போன்றவற்றுக்கு இப்போதும் தடைகள் இருந்துவருகின்றன.

காஷ்மீர் போல் ஒடுக்கப்படும் தேசங்களுக்கு உதவவேண்டும் என்று எங்கள் இஸ்லாம் எங்களுக்குக் கற்பிக்கிறது என்று அப்துல்லா முண்டாஸர் சொன்னார். ஆஃப்கனிஸ்தானில் அவர் ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் லஷ்கர்-இ-தோய்பா முகாம்கள் குறித்து வெளிப்படையாகவே பேசினார். தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியில் அப்படி எந்தத் தீவிரவாத முகாம்களும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளது. ஆனால், அத்தகைய பொய்யுரைகளைப் பரப்பவேண்டிய அவசியம் ஏதும் இந்த அமைப்புகளுக்கு இல்லை.


ஊடுருவுவது சிரமமான செயல்:

இந்திய காஷ்மீரில் 1995-ல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்தும் அப்துல்லா சொன்னார். 'கெரில்லாத் தாக்குதல் பயிற்சியின்போது எப்படி ஊடுருவது, எப்படித் தப்பிப்பது போன்றவை சொல்லித்தரப்பட்டது. ஆனால், இது மிகவும் சிரமமான வேலை. கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்தபோது (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய காஷ்மீருக்குள் நுழைவது) நள்ளிரவு ஒரு மணி ஆகியிருந்தது. இரவு முழுவதும் நடந்தோம். மலை உச்சியை அடைந்தபோது எங்களுக்கு மிகவும் பசி எடுத்தது. அங்கு ஒரு காஷ்மீரி எங்களுக்கு உணவு கொடுத்தார். பசித்துச் சாப்பிடும் உணவின் ருசியே அலாதியானதுதான். மூன்று நாள் பயணம் அது.'

இந்திய ராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இந்திய காஷ்மீருக்குள் நுழைந்த அப்துல்லா முண்டாஸரும் அவருடைய தோழர்களும் கண்ணிவெடித் தாக்குதல், ஏவுகணைத் தாக்குதல் போன்றவற்றைக் காஷ்மீரி மக்களின் உதவியுடன் மேற்கொண்டிருக்கிறார்கள்.

'அவர்களுக்கு உதவவே அங்கு போனோம். அவர்களுடைய விருந்தாளிகள் நாங்கள். காஷ்மீர் மக்கள் எங்களை வெகுவாக மதிக்கிறார்கள். நாங்கள் காஷ்மீரிகள் அல்லர். எங்களுக்கு இந்த ஊரின் அமைப்பு குறித்து ஏதும் தெரியாது. அவர்கள்தான் எங்களுக்கு உதவுவார்கள். இந்திய ராணுவ முகாம்கள் எங்கு இருக்கின்றன, அவற்றுக்கு எப்படிப் போகவேண்டும் என்று அவர்கள்தான் வழிகாட்டுவார்கள். இந்திய ராணுவம் அங்கு அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது. நாங்கள் ராணுவத்தினரை விரட்டி அடிக்க அங்கு போனோம். அவர்கள் கொலைகாரர்கள். உலகின் எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் கொலைகாரனுக்குத் தண்டனை மரணம்தான்.'

========================

காஷ்மீர் : முதல் யுத்தம்

ஆண்ட்ரூ வைட்ஹெட்

தமிழில் : .B.R. மகாதேவன்

கிழக்கு பதிப்பகம்

இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html

தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X