தமிழ் மண்ணில் பிறந்த மராட்டிய குழந்தை சாம்பார்| Dinamalar

தமிழ் மண்ணில் பிறந்த மராட்டிய குழந்தை சாம்பார்

Added : அக் 07, 2014 | |
'தமிழர்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் பிடித்துள்ள சாம்பார், மராட்டிய மன்னரின் அரண்மனையில் உருவானது' என்ற அரிய தகவல் வெளியாகி உள்ளது. கி.பி., 17ம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் ஒருவரான சாஜி, கலை, இலக்கியங்களில் அதிக ஆர்வம் உடையவராய் திகழ்ந்தார். அவற்றின் வளர்ச்சிக்கு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி நிதி உதவியும் செய்தார். அதுமட்டுமின்றி,

'தமிழர்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் பிடித்துள்ள சாம்பார், மராட்டிய மன்னரின் அரண்மனையில் உருவானது' என்ற அரிய தகவல் வெளியாகி உள்ளது. கி.பி., 17ம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் ஒருவரான சாஜி, கலை, இலக்கியங்களில் அதிக ஆர்வம் உடையவராய் திகழ்ந்தார். அவற்றின் வளர்ச்சிக்கு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி நிதி உதவியும் செய்தார். அதுமட்டுமின்றி, மன்னர் சாஜி, சமையல் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். ஒரு முறை, மன்னர் சாஜி, மராட்டிய உணவு வகைகளில் ஒன்றான பருப்புக் கடைசல் சாப்பிட விரும்பினார். அப்போது, தலைமை சமையல்காரர் இல்லாததால், மன்னரே சமையல் அறைக்குச் சென்று, பருப்புக் கடைசல் செய்ய முயன்றார். அப்போது, அதில் சேர்க்க வேண்டிய முக்கிய பொருள் இல்லாததால், அதற்கு பதிலாக புளியை சேர்த்து பருப்புக் கடைசல் தயாரித்துள்ளார். பருப்பு, காய்கறிகள், உப்பு, மிளகாய் பொடியுடன், புளி சேர்த்த கலவை வித்தியாசமான சுவையாக இருந்ததோடு, மன்னருக்கு விருப்பமான உணவாகவும் மாறிவிட்டது. ஒரு முறை, மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி, தஞ்சாவூர் வந்த போது, அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் இந்த வித்தியாசமான உணவும் இடம் பெற்றது. சம்பாஜிக்கு பரிமாறப்பட்ட உணவு என்பதால், மராத்தி மொழியில், 'சம்பாசே ஆகார்' மற்றும் 'சம்பாகார்' என, அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் மருவி, சாம்பார் எனப் பெயர் பெற்றது என, தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலைச் சுவடி குறிப்புகள் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் போற்றும் உணவு வகையான சாம்பார், மராட்டியர்களின் கை வண்ணத்தில் உருவானாலும், அதன் பிறப்பிடம் தமிழகத்தின் தஞ்சாவூர் தான்.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X