சவக்குழிக்குள் செல்ல காத்திருக்கும் ஏழ்மை ஏகாதிபத்தியம்!| Dinamalar

சவக்குழிக்குள் செல்ல காத்திருக்கும் ஏழ்மை ஏகாதிபத்தியம்!

Added : அக் 11, 2014 | கருத்துகள் (16)
Share
 சவக்குழிக்குள் செல்ல காத்திருக்கும் ஏழ்மை ஏகாதிபத்தியம்!

விவசாய துறை உற்பத்தி வளர்ச்சிக்கு, மரபணு மாற்ற பயிர் பரிசோதனைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விதை வீரியம் இன்மை காரணமாகத்தான் விவசாயம் வீழ்ந்துவிட்டது என்று, ஏராளமானவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். அது உண்மையில்லை; விவசாயம் சார்ந்த அரசின் பார்வையால் தான் விவசாயம் வீழ்ந்து விட்டது.
இந்தியாவில் முதலாளித்துவ கோட்பாடுகளை, இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று, கோட்டு சூட்டு முதலாளித்துவம்; மற்றொன்று, கோவண முதலாளித்துவம் அல்லது ஏழ்மை முதலாளித்துவம். பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் வகை. விவசாயம், மீன்பிடி தொழில் போன்றவை இரண்டாம் வகை.
இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை யில் பெரும் பகுதி, கோட்டு சூட்டு முதலாளித்துவத்திற்கே ஒதுக்கப்பட்டுஉள்ளது. இன்றைய பொருளாதார ஏற்றத்தாழ்வில் பெரும் பங்கு வகிப்பது, இந்த ஏழ்மை முதலாளித்துவமே.
விவசாயத்திற்கு சலுகை கடன், தள்ளுபடிகள், சேவைகளுக்கு தனியார் அனுமதி, கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை செய்கிறோம். இதற்கு அப்பால் செய்ய ஏதுமில்லை. இதைவிட வேறு என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தில் அரசுகள் இருக்கின்றன.
விவசாயத்திற்கு சலுகை கடன் வழங்குவது நல்ல விஷயம் தான். ஆனால், அந்த கடன் முழுமையாக விவசாய உற்பத்திக்கு செல்கிறதா? அரை ஏக்கர் பட்டாவை வைத்து, ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வழங்குகின்றனர். இந்த, ஆறு லட்சம் ரூபாய்க்கு அரை ஏக்கர் நிலத்தையே விலைக்கு வாங்கலாம். அரசு வழங்கும் சலுகைகள் முழுவதுமாக விவசாயத்துறை வளர்ச்சிக்கு செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். தொழிற் துறைக்கு கடன் வழங்கும் போது, தொழிற் துறை கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
விவசாயத் துறையில் மிகப்பெரிய பிரச்னை, ஆள் பற்றாக்குறை. அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் காரணமாக, விவசாய துறையில் பணிபுரிய யாரும் வருவதில்லை. இதற்காக இயந்திரமயமாக்கல் அவசியமானது. இன்றைக்கு அரசு இந்த இயந்திரமயமாக்கலின் அவசியத்தை உணர்ந்து, தனியார் முதலீட்டாளர்களை இந்த தொழில்நுட்ப உதவிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், இந்த தனியார் இயந்திர தொழில்நுட்ப அனுமதி, ஏழ்மை முதலாளித்துவத்தின் வியர்வையையும், ரத்தத்தையும் கோட்டு சூட்டு முதலாளித்துவத்திற்கு பங்கிட்டு கொடுக்குமே தவிர, விவசாயிகளின் லாபம் ஒன்றும் உயரப் போவதில்லை. அதற்கு மாற்றாக, கூட்டுறவு பண்ணை முறைக்கான வரைவுகளையும், புதிய கூட்டுறவு விதிகள் கண்காணிப்பு கோட்பாடுகளையும் உருவாக்க வேண்டும். அதற்கான நிதி உதவிகளையும் அரசு நேரடியாக விவசாயிகளுக்கு செய்வதன் மூலம், உழைக்கும் விவசாயிக்கு முழு பயனும் சென்றடையும்.
கூட்டுறவு பண்ணை முறைக்கான வரைவுகளை உருவாக்கி, அதன் மூலம் இயந்திரமயம், நீர் மேலாண்மை உபகரணங்கள், சேமிப்பு கிடங்குகள் போன்ற அத்தியாவசிய வேளாண் பொருட்களை அரசே நேரடியாக வழங்க வேண்டும். இதன் பயன்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் அடுத்த மிகப்பெரிய பிரச்னை, பருவ மழை. இது, அரசின் கையில் இல்லை. ஆனால், தட்பவெப்பம் மற்றும் இயற்கை சூழலுக்கு ஏற்ப, வறட்சியை தாங்கி வளரும் மாற்று பயிர் திட்டத்தையும், அதற்கான விழிப்புணர்வுகளையும் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமானது.
எத்தனை வேளாண் அலுவலர்கள், விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றனர்? இன்றைய வேளாண் அலுவலர்கள் பெரும்பாலும் வேலையின்றி சம்பளம் பெறும் அரசு ஊழியர்களாக மட்டுமே இருக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கால் தான் விவசாயம் சீரழிந்து போனது. விவசாயத்திற்கு என்று தனி நிதிநிலை அறிக்கை வழங்க வேண்டும். அதில் விவசாயம் சார்ந்த துல்லியமான புள்ளியியல் அறிக்கை இடம் பெற வேண்டும். உற்பத்தி, திட்டமிடல் என்பதில் தேவை மற்றும் பயன்பாடு குறித்த அறிக்கை; தட்பவெப்ப சூழல் குறித்த உத்தேச மதிப்பீடு, உற்பத்தியில் இலக்கு, நில அமைப்பு மற்றும் மாநிலத்திற்கேற்ப உற்பத்தி இலக்கை வரைவு செய்வது, நீண்ட கால நுகர்வு பொருள், குறுகிய கால நுகர்வு பொருள் உற்பத்தி போன்ற பகுப்புகள் இடம் பெற வேண்டும்.விவசாயத்திற்காக அரசு செய்துள்ள கட்டமைப்பு, செய்ய வேண்டிய கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அதற்கான நிதி பகுப்புகள் போன்றவை இதில் இடம் பெற வேண்டும்.
பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், மத்திய அரசு, மாநில அரசை குறை சொல்வது; மாநில அரசு, மத்திய அரசை குறை சொல்வது என்று வசை பாடிக்கொண்டு இருக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதற்கான மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போது, விவசாயத்தின் வளர்ச்சியையும் உற்பத்தியையும் பாருங்கள்... உலக நாடுகளுக்கே உணவளிக்கும் வகையில் விவசாய உற்பத்தி இருக்கும்.உயர்மட்ட பொருளாதார வளர்ச்சி பார்வையில் இருந்து, கீழ்மட்ட பொருளாதார வளர்ச்சியை அரசு பார்ப்பதை விட, கீழ்மட்ட பொருளாதார வளர்ச்சியில் இருந்து உயர்மட்டத்தை பார்ப்பதன் மூலம் அனைத்து தரப்பு பொருளாதார வளர்ச்சியும் சீராக இருக்கும்.வெறும் புள்ளியியல் அளவீடுகளின் உயர்வை அடிப்படையாக கொண்டு செயல்படாமல், உண்மை வளர்ச்சி அடிப்படையில் புள்ளியியல் அளவீடுகளை உயர்த்தும் எண்ணத்தில் செயல்பட்டால், நாடு உண்மை வளர்ச்சியை பெறும்.அடிப்படை மாற்றங்களை மேற்கொள்வதை விட்டு விட்டு, மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற எண்ணத்தில் மரபணு விதை பரிசோதனைக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. எப்படியாவது இந்தியாவிற்குள் கால் பதித்து விட துடித்துக் கொண்டு இருக்கின்றன இந்த மரபணு விதை மாற்ற நிறுவனங்கள். ஆனால், மரபணு மாற்ற விதை பயன்பாடுகள் எதிர்மறையான பல முடிவுகளையே தந்துள்ளன.இந்திய சந்தையை கைப்பற்றி விட துடிக்கும் இந்த நிறுவனங்கள், அதற்காக எந்த வகையான விலையையும் தருவதற்கோ அல்லது தகிடுதத்தம் செய்வதற்கோ வாய்ப்புகள் அதிகம். மக்களுக்கு இந்த பரிசோதனை மூலம் நன்மை பயக்கும் என்று உறுதி செய்வது அரசின் கடமை.
மக்களுக்கு, அரசின் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால், மரபணு மாற்ற விதை நிறுவனங்களின் மீது கடுமையான அக்னி பரிட்சை மேற்கொள்ள வேண்டும். காரணம், இது இயற்கை வளம் மற்றும் மனித வளம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, வருங்கால தலைமுறையின் வாழ்வாதார பிரச்னை.
இந்திய விவசாயத்தை மரபணு மாற்ற விதை இல்லாமலேயே பெரிய அளவில் வளர்ச்சியடைய செய்ய முடியும். அதற்கு தேவை, மரபணு மாற்ற விதை பரிசோதனையில் அரசு காட்டும் ஆர்வத்தை விட, விவசாயத் துறையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம்.
மக்களின் தேவை அறிந்து விவசாய உற்பத்தி கொள்கையை மாற்ற முடியும்; விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இன்றைய மனித வள மேம்பாட்டுக்கு இயற்கை விவசாயம் இன்றியமையாதது. அதை பேணி பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுவது நல்லது.
இன்றைய சூழலில் ஏழ்மை முதலாளித்துவம் கோமா நிலையில் உள்ளது. அது பிழைக்க, 50 சதவீத வாய்ப்புகள் உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூர்ந்த கண்காணிப்புடன் செயல்பட்டால், நிச்சயம் ஏழ்மை முதலாளித்து வத்தை காப்பாற்ற முடியும்.இ-மெயில்: subbusenthilraj@yahoo.com

- சு.செந்தில்ராஜ் -அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X