Second freedom in day | பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்! | Dinamalar

பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்!

Added : அக் 12, 2014 | கருத்துகள் (6)
பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்!

பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என போற்றப்படுவது 2005 அக்.,12ல் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் வந்து 10வது ஆண்டு நேற்று நிறைவு பெற்றது.

அரசு மற்றும் அரசு துறைகளின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக, மலிந்து கிடக்கும் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை 9 ஆண்டுகளில் பலர் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர்.மத்திய அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மத்திய தகவல் ஆணையம். மாநில அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மாநில தகவல் ஆணையம் உள்ளது. பொது நலன் சார்ந்து செயல்படுகிற அரசு சாரா நிறுவனங்கள், மனித உரிமை செயல் பாட்டாளர்களுக்கு இச்சட்டம் வரப்பிரசாதம்.


ரூ.200 கோடி அபராதம்:

சென்னையை சேர்ந்த ஒருவர், இச்சட்டத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்து விபரங்களை தகவலாக பெற்று புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், ''இச்சட்டத்தின் மூலம் மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளின் விபரங்கள் பெற்று, சட்டவிரோத முறைகேடுகள் குறித்து, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலுார் உட்பட சில மாவட்டங்களில் கருங்கல் குவாரிகளில், சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக, ரூ. 200 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டு, இன்னும் வசூலிக்கப்படவில்லை என்பதை வெளிக் கொணர்ந்துள்ளேன், என்கிறார் அவர்.தி.மு.க., ஆட்சியில் மின்வாரியத்தில் ரூ. 50 ஆயிரம் கோடி கடன் இருந்தது. எந்த வங்கியில், எவ்வளவு கடன் பெறப்பட்டது. வெளிமாநிலங்களில் குறிப்பாக, ஜார்க் கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.17 வரை விலைகொடுத்து வாங்கப்பட்டது என்ற விபரங்களை பெற்று அம்பலப்படுத்தியுள்ளார். அதன் விளைவாக, இன்று அதே மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 6.86ல் இருந்து ரூ. 7 வரை என்கிற விகிதத்தில்தான் வாங்கப்படுகிறது என்கிறார் அவர்.


சொத்து விபரம் :

டில்லியைச் சேர்ந்த 64 வயது சுபாஷ்சந்திர அகர்வால் என்பவர், 'சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, இச்சட்ட வரையறைக்குள் வரவேண்டும் என்ற தீர்வை பெற்றார். அதன்பின், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் சொத்து விபரத்தை இணைய தளத்தில் வெளியிட்டனர்.கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி, தன்விருப்ப ஓய்வு பெற்று, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக செயல்படுபவர் பொள்ளாச்சி பாஸ்கரன். அவர் தனது மனுக்கள் வாயிலாக, பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்த 28 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது, என்கிறார்.மேலும், 'நாமக்கல் மாவட்ட கல்வித்துறை ஊழல் சம்பந்தமாக, 67 பேரின் தற்காலிக பணிநீக்க உத்தரவு பெற்றேன். அதில் 15 பேர் மட்டும் ஆண்கள். 52 பேர் பெண்கள் என்பது வேதனைக்குரிய அம்சம்' என்கிறார்.


பாரபட்சமில்லை :

மாநில தகவல் ஆணையங்களை ஒப்பிடும்போது கேரள மாநில தகவல் ஆணையம், அந்த மாநிலத்தின் ஆளுநர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கே பாரபட்சமின்றி அபராதம் விதித்துள்ளது. மேற்கு வங்க தகவல் ஆணைய வழக்கு ஒன்றில், தகவல் கோரிய மனுதாரரின் ஒப்பந்தத்தை போலியாக வேறொருவரிடம் மிரட்டிப் பெற்ற விபரம் செய்தியாக வந்தது. அது குறித்த விபரங்களை ஆணையத்தில் கேட்டபோது, அவர்கள் முழுகுறிப்புகளையும் அளித்தனர். அதில் ஆணையம், குறிப்பிட்ட மனுதாரர் தகவல் பெற்றதாக ஒப்பமிடவில்லை என்பதை, தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி தெளிவு பெற்றிருப்பதும், அந்தளவிற்கு அச்சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும் தெரிய வந்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தில் மகாத்மா காந்தி பல்கலை கழக துணைப்பதிவாளர் நியமன முறைகேடு தொடர்பாக, பொதுமக்கள் புகார் மனு அனுப்பினர். அதை கவர்னருக்கு அனுப்பிய விபரம் கவர்னர் அலுவலகத்தில் இருந்து தகவலாக கேரள தகவல் ஆணைய தலையீட்டின் பேரில் கிடைத்தது.இச்சட்டம் உருவாக்கியபோதே, இது அமலுக்கு வந்ததில் இருந்து 120 நாட்களுக்குள், அனைத்து பொது அதிகார அமைப்புகளும், அதன் துறைசார்ந்த விபரங்களை தாமாக, முன்வந்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது.ஆனால் அதை கண்காணிப்பது யார் என்பது தெரிவிக்கப்படாததால், சட்டம் அமலுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பெரும்பாலான அலுவலகங்கள், தாங்கள் சார்ந்த விபரங்களை பதிவேற்றம் செய்யவில்லை.


பொதுநலன் தீர்வு:

இச்சட்டத்தை 90 சதவீதம் பேர் தங்கள் பிரச்னை மற்றும் பொது நலன் தீர்வுக்காக பயன்படுத்துகின்றனர். ஐந்து முதல் 8 சதவீதம் பேர் தான் பணிபுரிந்த அலுவலகத்தை, குறிப்பிட்ட அலுவலரை துன்புறுத்தும் நோக்கில் பயன்படுத்துகின்றனர் என்ற புகாரும் அரசு அலுவலர்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சட்டத்தை பயன்படுத்தியதற்காக, இதுவரை 139 பேர் தாக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது விக்கிபீடியாவின் தொகுப்பு தகவல். எனவே தகவல்களை சேகரிப்போர், வெளியிடுவோர் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.இச்சட்டம் மீது அவ்வப்போது சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகள் தலையிட்டு தீர்வளித்துள்ளது. மதுரையை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் கதிர், இச்சட்டத்தை பயன்படுத்தி பல கருணை கொலைகள் தொடர்பான விபரங்களை வெளிக் கொணர்ந்துள்ளோம், என்கிறார்.நிலக்கரி சுரங்க ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் போன்றவை இதனால் வெளிக் கொணரப்பட்டவை.குறிப்பாக இச்சட்டத்தை பயன்படுத்தி, இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டீல், தனது பணிக்காலத்தில் பயணச் செலவாக மட்டும், அரசு பணம் ரூ.205 கோடியை செலவிட்டது, 11 உறவினர்களை 18 முறை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றது வெளிக் கொணரப்பட்டது.


அதிகாரிகள் அச்சம் :

திட்டக் கமிஷன் தலைவராக இருந்த மான்டேக்சிங் அலுவாலியா, தனது வெளிநாட்டு பயணச் செலவாக ரூ.2.34 கோடி பெற்றார். அலுவலக டாய்லெட்டை புதுப்பிக்க ரூ. 35 லட்சம் செலவிட்டார் என்ற விபரங்கள் வெளியாகின. இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், திருத்தங்கள் மேற்கொண்ட முயற்சிகள் நாடெங்கும் நடந்தன. பின்னர் அவை ஆயிரக்கணக்கான தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டன.லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், மத்திய தலைமை தகவல் ஆணையர் நியமனம் நிலுவையில் உள்ளது. இச்சட்டம் வந்தபின், கடந்த 9 ஆண்டுகளில் தான் ஊழல் என்பது மக்களால் பேசப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தின் பயன்பாடு அதிகரிக்கச் செய்ய, பயிற்சி முகாம்களை அரசு சாரா மனித
உரிமை செயற்பாட்டாளர்கள் நடத்த வேண்டும்.
- எஸ்.சம்பத்,
மாநில நிர்வாகி
போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம்
மதுரை.
94420 36044We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X