விக்டோரியா மகாராணியின் பிரசவ வலியை நீக்கியது எப்படி?| Dinamalar

விக்டோரியா மகாராணியின் பிரசவ வலியை நீக்கியது எப்படி?

Added : அக் 18, 2014 | கருத்துகள் (6)
விக்டோரியா மகாராணியின் பிரசவ வலியை நீக்கியது எப்படி?

மயக்கம் இல்லாமல் வலியுடன் அறுவை சிகிச்சை செய்வதை இன்று நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் 1846 ஆண்டுக்கு முன்னால் அறுவை சிகிச்சை என்பது ஒரு நரகவேதனை தான்.

நோயாளிகளை குடிக்கச் செய்வது, தலையில் அடிப்பது, போதை வஸ்துகள் கொடுப்பது போன்ற முறைகளை நம் முன்னோர்கள் கையாண்டனர். ஆனால் எதுவும் நம்பகமான முறையில் வேலை செய்யவில்லை.பல ஆராய்ச்சிகளின் பின்னர் 'ஈத்தர்' எனும் மருந்து மயக்கநிலை கொடுக்கும் என்று அறிந்த பலரில், வில்லியம் தாமஸ் கிரின் மார்ட்டன் என்ற பல் சிகிச்சை நிபுணர் ஈத்தரின் மயக்கநிலை செயல் முறையை மெய்ப்பிக்க முன் வந்தார். 1846, அக்., 16ல் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் மருத்துவனையில் கில்பட் அபார்ட் என்ற நோயாளியின் தாடை கட்டியை அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் வாரன், ஈத்தர் மயக்கத்தில் வலியில்லாமல் அகற்றினார். இதனால் மார்ட்டன் மயக்கவியல் துறையின் தந்தையானார்.மயக்கவியல் துறை பிறந்த நாள் முதல், அறுவை சிகிச்சை துறையும் வளர ஆரம்பித்தது. உயிர் போகும் வலியோடு பல் எடுப்பது, கை, கால் அகற்றுவது போன்ற எளிய சிகிச்சையில் துவங்கி இன்று இருதயம், சிறுநீரகம், குடல், மூளை வரை வலியின்றி அறுவை சிகிச்சை வளர ஆரம்பித்தது. தாயில் வயிற்றிலிருக்கும் கருவிற்கு அறுவை சிகிச்சை முதல் மிகத் துல்லியமான ரோபோடிக் அறுவை சிகிச்சை வரை உருவானதற்கு, மயக்கவியல் துறையின் வளர்ச்சியே காரணம்.


மயக்க மருந்து அறிமுகம் :

ஜேம்ஸ் சிம்சன் 1847ல் 'குளோரோபார்ம்' எனும் மயக்கமருந்தை அறிமுகம் செய்தார். ௧௮௫௩ல் விக்டோரியா மகாராணியின் பிரசவ வலியை 'குளோரோபார்ம்' கொண்டு ஜான் ஸ்னோ நீக்கிய நிகழ்வு, மயக்கவியல் துறையை வலிநீக்கத் துறையில் கால் பதிக்கச் செய்தது.௧௮௮௮ல் கண் டாக்டர் கார்ல் கொல்லர் 'கோக்கேனை' அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தினார். இதில் என்ன வியப்பு என்றால் 'கோக்கேன்' முழுமயக்கம் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்யும் தன்மையுடையது. இந்த முறை 'ரீஜனல் அனஸ்தீசியா' என்ற புது பரிமாணத்தைத் தோற்றுவித்தது.இதே நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருந்தது. ஈத்தருக்கு முந்தைய காலத்திலேயே 'சுஸ்ருதா' என்ற டாக்டர் உடல் ஒட்டுறுப்பு சிகிச்சையை மயக்க மருந்துடன் செய்துள்ளார். ஆனால் அதன் விவரங்கள் அழிந்துவிட்டன. ஈத்தர் பயன்படுத்தப்பட்ட செய்தி 1847, மார்ச் 2ல் இந்தியாவை வந்தடைந்தது. கோல்கட்டாவில் மார்ச் ௨௨ம் தேதி ஈத்தர் பயன்படுத்தப்பட்டது. அதேபோல ௧௮௪௮, ஜன.,௧௨ல் 'குளோரோபார்ம்' கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மேற்கத்திய நாடுகளில் 'குளோரோபார்ம்' அதிவீரிய தன்மை வரமா சாபமா என்று பட்டிமன்றம் நடந்தபோது, ஐதராபாத்தில் எட்வர்ட் வால்டி என்பவர் 40 ஆயிரம் அறுவை சிகிச்சைகளுக்கு 'குளோரோபாரம்' மூலம் பாதுகாப்பாக மயக்கம் அளித்தார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அவரது மாணவி ரூபாபாய் பெர்டுன்ஜி உலகின் முதல் பெண் மயக்கவியல் நிபுணரானார்.மயக்கவியல் துறை வலிநீக்கியல் துறையாக மட்டுமின்றி தீவிர சிகிச்சையிலும் பெரும்பங்கு வகிக்கிறது. உடல் உறுப்புகள் முக்கியமாக நுரையீரல் செயலிழந்த நோயாளிகளுக்கு மயக்கடாக்டர் ஆற்றும் தீவிர சிகிச்சை மகத்தானது.


மயக்கவியல் துறையின் பங்கு :

இதேபோல தீக்காயம், விபத்து சிகிச்சை, புற்றுநோய் வலிநீக்குதல் போன்ற எல்லா துறைகளிலும் மயக்கவியல் துறையின் பங்கு உள்ளது. தீவிர சிகிச்சையில் 'ஏபிஜி' கருவி மூலம் உடலின் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, சோடியம், பொட்டாசியம் அளவுகளை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. 'வென்டிலேட்டர்' மூலம் ஆக்ஸிஜன் செலுத்தி நுரையீரலை பலப்படுத்தி உடலின் ஒவ்வொரு திசுவிலும் ஆக்ஸிஜன் அளவை கூட்டுவதால், குணமடையும் வாய்ப்பு அதிகமாகும். தீக்காயத்தில் ஆழமான புண்களை சுத்தம் செய்து 'டிரஸிங்' செய்யும் போது வலி கொடூரமாக இருக்கும். அதற்கும் மயக்கவியல் நிபுணரின் ஆலோசனைபடி மயக்கமருந்து அளிக்கப்படும். பிரசவ காலத்தில் வலி அதிகமாக இருக்கும் போது கர்ப்பப்பைக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி விடும். மயக்கமருந்து மூலம் வலியில்லா பிரசவம் செய்யும் போது ரத்தக்குழாயில் ரத்தஓட்டம் நன்றாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் இல்லாமல் நன்றாக ஆக்ஸிஜன் கிடைக்கும்.


தலை முதல் கால் வரை :

தற்போது 'குளோரோபார்ம்' மருந்துக்கு பதிலாக 'சீவோப்ளூரேன், டெஸ்ப்ளூரேன்' மருந்துகள் மயக்கத்திற்கு தரப்படுகின்றன. திரவநிலை மயக்கமருந்தானது நோயாளிக்கு செலுத்தப்படும் போது வாயுநிலையாக மாறுகிறது. தலை முதல் கால் வரை உள்ள முழு மயக்கத்திற்கு 'ஜெனரல் அனஸ்தீசியா' என்று பெயர். இருதயநோய், பிரசவ கால வலிப்பு நோய், தலையில் அடிபட்டால் நோயாளியை முழு மயக்கத்தில் ஆழ்த்திய பின்பே சிகிச்சை அளிக்க முடியும். மூச்சுக்குழாய்க்குள் சிறுகுழாய் மூலம் மருந்து செலுத்தப்படும். நோயாளியின் உடல் எடை, ரத்தஅழுத்தம், இருதயத்துடிப்பு, நுரையீரல் செயல்பாடு, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுக்கு பின்பே மருந்தின் அளவு பரிசீலிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 50 மில்லி அளவு மயக்கமருந்து செலுத்தப்படும்.கை, கால் அறுவை சிகிச்சை, பிரசவ சிகிச்சை, மற்ற சிகிச்சைகளுக்கு முதுகுத்தண்டில் நுண்ணிய குழாயை செலுத்தி மயக்கமருந்து செலுத்தப்படும். எந்தப்பகுதியில் அறுவை சிகிச்சையோ அதற்கேற்ப மருந்தை முதுகுத்தண்டின் மேல், கீழ்ப் பகுதியில் செலுத்தலாம்.கோகேனுக்கு பதிலாக லிக்னோகேன் போன்ற மருந்துகள் அந்தந்த பகுதியில் அறுவை சிகிச்சை செய்யும் இடத்திற்கு மட்டும் மயக்கமடையச் செய்வதற்கு தரப்படுகிறது.நோயாளிகளுக்கு அதிக ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் ரத்த அழுத்தத்தை சீர்செய்த பின்பே மயக்கமருந்து தரப்படும். மனநோயாளிகளுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுக்கும் போது வலியில்லாமல் இருப்பதற்காக மயக்கமருந்து தரப்படுகிறது. தற்போது வலியில்லா பிரசவத்திற்காக அதிகளவில் மயக்கவியல் துறை பயன்படுகிறது. இனி... மயக்கம் இல்லாத அறுவை சிகிச்சைகளை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
-டாக்டர் எஸ்.சி. கணேஷ்பிரபு,
இயக்குனர், மயக்கவியல் கழகம்,
மதுரை அரசு மருத்துவமனை.
drgp60@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X