காஷ்மீரும் - பாகிஸ்தானும்

Added : அக் 18, 2014 | கருத்துகள் (4) | |
Advertisement
பாகிஸ்தான், தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்ட போதிலும், அங்கு ராணுவத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் நரேந்திர மோடியின் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்த போது, ராணுவத்தின்அனுமதி பெற்று தான், இந்தியாவிற்கு வந்தார்.நவாஸ் ஷெரீப், சமீபத்தில் ஐ.நா.,
 காஷ்மீரும் - பாகிஸ்தானும்

பாகிஸ்தான், தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்ட போதிலும், அங்கு ராணுவத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் நரேந்திர மோடியின் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்த போது, ராணுவத்தின்அனுமதி பெற்று தான், இந்தியாவிற்கு வந்தார்.

நவாஸ் ஷெரீப், சமீபத்தில் ஐ.நா., சபையின் வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது, காஷ்மீர் பிரச்னையை மறுபடியும் எழுப்பியிருக்கிறார்.பாகிஸ்தான் ராணுவத்தின் தலைவர்களை திருப்திபடுத்தும் நோக்கம் தான் இதற்கு முக்கிய காரணம். பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரை கைப்பற்ற, இதுவரை இந்தியா மீது, மூன்று தடவை போர் தொடுத்தது. மூன்று தடவைகளிலும் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விகளால், பாகிஸ்தான் ராணுவம் மனமுடைந்து போயிருக்கிறது. இந்த விரக்தி மனப்பான்மையால் தான், பல தடவை எல்லையை மீறி இந்தியாவுக்குள் நுழைந்து, நம் ராணுவ வீரர்களையும், அப்பாவி பொதுமக்களையும் தாக்கி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரே நோக்கம், எப்படியாவது காஷ்மீரை கைப்பற்ற வேண்டும் என்பது தான்.இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்து விட்ட உண்மை நிலையை, பாகிஸ்தானிலுள்ள பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், பாகிஸ்தான் ராணுவத் தலைமை மாத்திரம், இந்த விஷயத்தில் ஒரு விரோத மனப்பான்மையுடனும், ஆத்திரத்துடனும் இருக்கிறது. காஷ்மீர், பாகிஸ்தானுக்குத் தான் சொந்தம் என்பது அவர்கள் கூற்று.

இந்தியா, 1947 ஆக., 15ம் தேதி சுதந்திரம் பெற்ற போது, 500க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சுதேச சமஸ்தானங்களை அந்தந்த நாட்டின் அரசர்கள், பிரிட்டிஷ் அரசின் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆட்சி செய்து வந்தனர்.இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் சட்டத்தை அப்போதைய பிரதமர் அட்லி தலைமையிலான பிரிட்டிஷ் அரசு, அவர்கள் நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய போது, அந்த சட்டத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் இருந்தன.இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு பிரிக்கப்படும்; முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ள மாகாணங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும்; 500க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தான மன்னர்கள், தாங்கள் ஆளும் பகுதியின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்து கொள்ளலாம்.

அப்போது இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல். அவர் இலாகாவின் செயலர் வி.பி.மேனன். இவர்கள் இருவரும் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினர். 500க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் எதிர்காலம் இந்தியாவுடன் இணைவதில் தான் இருக்கிறது என்ற உண்மை நிலையை எடுத்துக் கூறினர். அவர்களின் நம்பிக்கையை பெற்று மிகப் பெரும்பான்மையான சுதேச மன்னர்கள், இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது ஒரு வரலாறு காணாத நிகழ்ச்சி.சில சுதேச மன்னர்கள் தான் கொஞ்சம் தயங்கி பிடிவாதம் பிடித்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் திருவிதாங்கூர் மகாராஜா, மைசூர் மன்னர், ஐதராபாத் நிஜாம் மற்றும் காஷ்மீர் மன்னர்.

இவற்றில் திருவிதாங்கூரிலும், மைசூரிலும் மக்கள் இயக்கம் பெரிய அளவில் எழுந்ததால், அந்த இரண்டு சுதேச மன்னர்களும் இந்தியாவுடன் இணைவதற்கு ஒப்புதல் தந்தனர். ஐதராபாத்தை பொறுத்தவரையில், எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், இந்தியாவுடன் தான் இணைய வேண்டும் என்ற யதார்த்த நிலை. ஆனால், 'ஐதராபாத் சுதந்திர நாடு' என்ற பிரகடனத்தை விடுத்தார் நிஜாம். பார்த்தார், வல்லபாய் படேல். ஒரே வாரத்தில் போலீஸ் நடவடிக்கை என்ற பெயரில், எதிர்ப்பாளர்களை அடக்கி, ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க, நிஜாமை சம்மதிக்கச் செய்தார்.

அதே போல் பாகிஸ்தான், ஜுனாகாத் சமஸ்தானத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது; மீதி இருந்தது காஷ்மீர் மட்டும் தான். அப்போது, காஷ்மீரின் மன்னர் ஹரி சிங். அவர், எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறினார். அந்த காலகட்டத்தில் காஷ்மீரில் ஷேக் அப்துல்லா தலைமையில், பெரியதொரு மக்கள் இயக்கம் வளர்ந்து கொண்டிருந்தது. ஷேக் அப்துல்லா, நேருவின் உற்ற நண்பர். இதை எல்லாம் கருத்தில் கொண்ட பாகிஸ்தான், காஷ்மீர் எங்கே தன் கையை விட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தில், காஷ்மீரை பலவந்தமாக பாகிஸ்தானுடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியது.

அந்த நோக்கத்தில், காஷ்மீர் மீது பயங்கரவாதிகளை படையெடுக்க செய்தது. இந்த பயங்கரவாதிகளுக்கு பின்புலமாக பாகிஸ்தான் ராணுவம் இயங்கியது.
மன்னர் ஹரி சிங் நடுங்கிப் போய் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த, இந்தியாவின் உதவியை நாடினார். நேரு, மவுன்பாட்டனுட னும், (அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல்) வல்லபாய் படேலுடனும் ஆலோசனை செய்து, காஷ்மீருக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப இசைந்தார். அதேசமயம், காஷ்மீர் இந்தியாவுடன் சட்ட பூர்வமாக இணைய வேண்டும் என்றும், இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை அடித்து விரட்டிய பின், ஷேக் அப்துல்லா தலைமையில் அமைச்சர் சபை அமைக்க மன்னர் ஹரி சிங் சம்மதிக்க வேண்டும் என்றும், ஹரி சிங்கிடம் தெரிவித்தார்.ஷேக் அப்துல்லாவுக்கு நேரு ஒரு வாக்குறுதி கொடுத்தார், 'காஷ்மீரில் போர் நின்ற உடன் காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்ததை உறுதிப்படுத்த அந்நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பயங்கரவாதிகள் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு அருகே வந்து விட்டனர். இந்திய ராணுவம் காஷ்மீருக்கு விரைந்தது. அடுத்த சில நாட்களிலேயே இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை ஸ்ரீநகருக்குள் நுழைய விடாமல் துரத்தி அடித்தது; பயங்கரவாதிகள் பின் வாங்கினர். ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை பயங்கரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். அதே நேரத்தில் இந்தியா, இந்த பிரச்னையை ஐ.நா., சபையின் பாதுகாப்பு மன்றத்துக்கு எடுத்துச் சென்றது.ஐ.நா., பாதுகாப்பு மன்றம் உடனே, இரண்டு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விட்டது. இந்த போர் நிறுத்தம் காரணமாக, காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதி, பாகிஸ்தான் வசம் சிக்கி, இன்று வரை அந்த நிலைமை தொடருகிறது.பாகிஸ்தான் ராணுவத்தின் ஆத்திரம், காஷ்மீரில் மீதி உள்ள பிரதேசங்களையம் ஆக்கிரமித்து, தன் வசம் கொண்டு வர வேண்டும் என்பது தான். அதனால் தான் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் மூன்று முறை போர் தொடுத்தது; ஆனால், மூன்று முறையும் தோற்றது.

தற்போது பாகிஸ்தான் கோருவது, காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று. இப்படிச் சொல்ல பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளை அறிவதற்காக நேரு, ஷேக் அப்துல்லாவிடம் சொன்ன யோசனை அது. கடந்த, 66 ஆண்டுகளில் காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியாகவே விளங்கி வருகிறது. மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்திற்கு பல விதமான உதவிகளை செய்து காஷ்மீர் மக்கள் முன்னேற வழி வகுத்திருக்கிறது. காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, அவரது மகன் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா பல்வேறு கால கட்டங்களில், காஷ்மீரில் முதல்வராக பதவி வகித்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி காஷ்மீரில் பல முறைகளில் தேர்தல் நடந்திருக்கிறது.

சமீபத்தில், காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ள பெருக்கின் போது, இந்திய ராணுவம் தான் காஷ்மீர் மக்களை காப்பாற்றியது; இந்தியப் பிரதமர் தான் காஷ்மீரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை உடனே பார்வையிட்டு, பல உதவித் திட்டங்களை அறிவித்தார். இந்தியா முழுவதும் உள்ள பல தரப்பட்ட மக்களும், காஷ்மீர் மக்களுக்கு தங்களாலான உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்; பாகிஸ்தான் பெயரளவுக்கு கூட, காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை.எல்லா அம்சங்களையும் மனதில் கொண்டு இந்தியா, உலக நாடுகளுக்கும் முக்கியமாக பாகிஸ்தானுக்கும் தெரிவிக்க வேண்டியது, 'காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. காஷ்மீரை பற்றி பாகிஸ்தானுடன் இனி எந்த விதமான பேச்சு வார்த்தையும் கிடையாது' என்பதுதான்.பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் மறுபடியும் வாலாட்டினால் அது முற்றிலுமாக முறியடிக்கப்படும். எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாதபடி இந்தியா இந்த முடிவை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இ - மெயில்: dmrcni@dinamalar.in
- வி.கோபாலன்
- வங்கி அதிகாரி (பணி நிறைவு)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (4)

Sukumar Talpady - Mangalore ,இந்தியா
27-அக்-201408:25:43 IST Report Abuse
Sukumar Talpady காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது. காஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளி ஏறவேண்டும் . பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ஹுன்சா பகுதி பாகிஸ்தானுடன் பலவந்தமாக இணைக்கப் பட்டிருக்கிறது அதை விட வேண்டும் .லடாக் பகுதியில் அக்சாய் சின் பகுதியிலிருந்து சீன வெளி ஏற வேண்டும் . ஆகையால் ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . பாகிஸ்தான் சொல்வது இந்திய பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது . இதை யார் ஒத்து கொள்வார்கள் . பாகிஸ்தானுடன் சேர்க்கப்பட்ட ஹுன்சா வை விட பாகிஸ்தான் தயாரில்லை . பிறகு இந்தியா வெளி ஏறவேண்டுமாம் . முட்டாள்கள் .
Rate this:
Cancel
r.sundararaman - tiruchi,இந்தியா
19-அக்-201415:56:46 IST Report Abuse
r.sundararaman 1965 இம் ஆண்டு ராவல்பிண்டிவரையில் கைப்பற்றியது தாஷ்கண்ட் உடன்படிக்கைப்படி விட்டுக்கொடுக்கப்பட்டது மிக பெரிய தவறு என்பதும் ,1971 ம் ஆண்டு போரில் ஒரு லக்ஷம் வீரர்களை திருப்பி அனுப்பியதும் மேற்கு பாக்கிஸ்தானை விட்டுவைத்ததும் சரித்திர தவறு , மேலும் கார்கில் சாகசத்திற்கு பதிலடி தகுந்தபடி இல்லாததும் தவறே .இனிமேலும் காலம் தாழ்த்தாமல் நமது போர்த்திறனை நிறுபித்து உடனடியாக வாயமுடும்படி செய்திடவேண்டும் .
Rate this:
Cancel
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
19-அக்-201410:34:29 IST Report Abuse
Manoharan Prushothaman பாகிஸ்தான் ராணுவம் தான் பாகிஸ்தான் நீதி மண்டங்களைவிட அதிக அதிகாரம் கொண்டதாக இருந்துவருகிறது பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேசுவதைவிட பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் முடிவுக்கு வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X