ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல்| Dinamalar

ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல்

Added : அக் 22, 2014 | கருத்துகள் (11)
ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல்

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு, வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்துவருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ? என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.

அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான் போல, எரிந்துபோனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை! யாருக்குதான் துயரமில்லை... துயரமின்றி உயரமில்லை... துன்பமின்றி இன்பமில்லை... அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன; அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளைவழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது. நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன. வெற்றிஎன்பது வெற்றுச்சொல்லன்று. சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரமும் அன்று. மெய்வருத்தம் பாராமல்,மேனிநலம் பேணாமல், பசி நோக்காமல் கண் துஞ்சாமல், தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் அருஞ்செயலின் விந்தை விளைவே வெற்றி. வெற்றி என்பது பெற்றுக்கொள்வதென்றால் தோல்வி என்பது கற்றுக்கொள்வது.

கடந்தகாலத் தோல்விகளைக் கண்டு மனம் வருந்தாமல், உங்கள் வெற்றி வாசகம் என்ன என்று சிந்தித்தீர்களா? சில வெற்றியாளர்களின் பெயரைக் கேட்டவுடனே அவர்களின் வெற்றி வாசகம் நம் நினைவுக்கு வருகிறதே!


அப்துல் கலாம் :


அப்துல் கலாம் என்றதும் “கனவுகாணுங்கள்” என்ற வெற்றிச்சூத்திரம் நம் மனதை வருடுகிறதே! தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா? நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும்அற்புதக்கண்கள் உள்ளன? இரண்டு சூரியன்களை நம் இமைக்குள்ளே இருத்துக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் சொல்லத்தான் வேண்டுமா?


எம்.எஸ்.உதயமூர்த்தி:


எம்.எஸ்.உதயமூர்த்தி என்றவுடன் “நம்புதம்பி நம்மால் முடியும்” என்ற வாசகம் நினைவுக்கு வருகிறதே! வேதியியல் பேராசிரியராகத் தன்பணியைத் தொடங்கி, அமெரிக்காவில் உள்ள கல்லுாரிகளில் பணியாற்றி தன்னம்பிக்கை தத்துவத்தைப் பிரபலப்படுத்த 'மக்கள்சக்தி இயக்கம்' துவங்கி இளையசமுதாயத்தை மனஉறுதி உள்ளவர்களாக மாற்றிச் சென்ற மகத்தான மனிதர் அவர்.


மாமேதை சாக்ரடீஸ்:


கிரேக்க நாட்டின் “டெல்பி” கோவிலுக்குள் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் சென்று உலகத்தின் ஒப்பற்ற தத்துவ ஞானி யார்? என்று கேட்டபோது “சாக்ரடீஸ்.. சாக்ரடீஸ். சாக்ரடீஸ்” என்று மூன்றுமுறை அசரீரி வந்ததாம். அந்தஅளவுப் புகழ்பெற்ற கிரேக்க மேதை சாக்ரடீஸ், தன்னைச் சந்திக்க வந்த இளையோரிடம் சொன்ன வெற்றி வாசகம் என்ன தெரியுமா? “உன்னையே நீ அறிவாய்” என்பதுதான். கொடிய விஷத்தை அருந்தும் வினாடிவரை சாக்ரடீஸ் கற்றுக்கொண்டே இருந்தார். நம்மில் எத்தனைப் பேருக்கு நம்மைப்பற்றித்தெரியும்? “உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப்புகழ வேண்டும்” என்று கவியரசர் கண்ணதாசன் பாடியதை நாம் பொருள் உணர்ந்தோமா?


ஷிவ்கேரா :


“உங்களால் வெல்ல முடியும்” என்ற தன்னம்பிக்கை நுாலின் ஆசிரியரான ஷிவ்கேராவின் வெற்றிவாசகம் “தன்னம்பிக்கை உடையவன் தனிமனிதராணுவம்” என்பதுதானே. வெற்று மனதை வெற்றி மனமாக்கும் வித்தை நம்மிடம்தானிருக்கிறது.”தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற நம்பிக்கை வாசகத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்திருக்கிறது புறநானுாறு.


மகாகவி பாரதி :


நம் அனுமதியின்றி எவரும் நம்மைச்சிறுமைப்படுத்திவிட முடியுமா? துன்பச்சுழலில் நின்றுகொண்டு “பெரிதினும் பெரிதுகேள்” என்று மகாகவி பாரதியால் எப்படி கவிதைகள் படைக்கமுடிந்தது? தாயும் இல்லை, தந்தையும் இல்லை, படிக்கவசதியும் இல்லை. ஆனாலும் வருத்தம் ஏதுமில்லை... காசிக்குச் சென்று அத்தை வீட்டில் தங்கி பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் கற்று, தமிழாசிரியராய் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி பல்வேறு இதழ்களில் பணிபுரிந்து வாழ்க்கைப் புயலில் சிக்கி உணவுக்கே வழியில்லாமல் வாழ்ந்தபோதும் “மனதில் உறுதி வேண்டும்”என்று கவிபாட முடிந்ததே! உலையில் போட பக்கத்து வீட்டில் அரிசி வாங்கி செல்லம்மா பாரதி வைத்திருக்க, முற்றத்தில் அதனை இறைத்த மகாகவி பாரதி,”காக்கை குருவி எங்கள் சாதி..”என்று பாடினானே.


எம்.எஸ்.சுப்புலட்சுமி :


மதுரையில் மிகச்சிறிய வீட்டில் பிறந்து ஐந்தாம்வகுப்பு வரை பயின்று, பதினைந்து வயதில் கர்நாடக சங்கீத மேடைகளில் இசையரசியாக வலம்வந்து, 1966 ல் ஐக்கியநாடுகள் சபையில் பாடிமுடித்தபின் உலகநாடுகளின் தலைவர்கள் எழுந்துநின்று கைதட்டும் அளவிற்குப் பாராட்டைப்பெற்ற எம்.எஸ்.அம்மாவின் “குறையொன்றும்இல்லை மறைமூர்த்தி கண்ணா” பாடக்கேட்டு, நெகிழாதவர்கள் யார்? “இந்த இசையரசிக்கு முன்னால் நான் சாதாரணப் பிரதமர்தானே” என்று நேருவே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆற்றலைப் போற்றினாரே! இதன் உட்பொருள், திறமையை வளர்த்துக் கொண்டு ஒரே துறையில் விடாது உழைத்தால் உலகம்போற்றும் சாதனையாளராகலாம் என்பதுதானே. ”இசையே உயிர்மூச்சு” அவர் வெற்றிவாசகம்.


சிவாஜி கணேசன் :


மகாபாரத கர்ணனை நாம் கண்டதில்லை,“உள்ளத்தில்நல்ல உள்ளம்” என்று பாடி மண்ணில் சாய்ந்த சிவாஜிகணேசனே நமக்குத்தெரிந்த கர்ணன். திருவருட்செல்வரில் அப்பர் பெருமானாக, திருவிளையாடலில் சொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜசோழனாக, கப்பலோட்டிய சிதம்பரனாராக, மகாகவி பாரதியாராக நடித்து, நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த அந்தச் சாதனை மனிதர் சந்திக்காத தோல்விகளா? ஆனாலும் எல்லாவற்றையும் துணிச்சலோடு அவர் எதிர்கொண்டார். “களைப்பில்லா உழைப்பு”-இவர் வெற்றிவாசகம்.

பல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லை. ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஈசல் தன்னை நொந்துகொள்வதில்லை. ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல். சிறு நிகழ்வுகளுக்கெல்லாம் மனதொடிந்து போகாமல் எதிர்நின்று எதிர்கொள்வதற்கு மனத்துணிவை வளர்த்துக்கொள்வோம். முடியலாம் முடியாமலும் போகலாம்; ஆனாலும் முயல்வதிலிருக்கிறது வெற்றியின் முடிவு. நமக்கான வெற்றி வாசகத்தை இன்றே உருவாக்குவோம். நம் மனதின் வலிமையால் அவ்வாசக கனவை நிஜமாக்குவோம். ஒருநாள் வானம் நமக்குவசப்படும்.
-முனைவர் சவுந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.
mahabarathi1974@gmail.com,
9952140275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X