கமகமக்கும் ஏலக்காய்...! படபடக்கும் பிரச்னை...!!| Dinamalar

கமகமக்கும் ஏலக்காய்...! படபடக்கும் பிரச்னை...!!

Added : அக் 24, 2014 | கருத்துகள் (3)
கமகமக்கும் ஏலக்காய்...! படபடக்கும் பிரச்னை...!!

கடல் மட்டத்திற்கு மேல் 600 முதல் 1200 மீட்டர் உயர மலைகளில் மரங்களுக்கு அடியில் பச்சை நிற ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. நிழற் பகுதியில் பாதுகாப்பாக விளைந்து, இதமான சூட்டில் பதப்படுத்தப்பட்டு நல்ல வாசனையுடன் கிடைப்பதால் இதனை 'வாசனை திரவியங்களின் இளவரசி' என்கிறோம். இதற்கு அரசனாகத் திகழ்வது மிளகு. ஏலக்காயை, மிளகுடன் ஊடு பயிராக சாகுபடி செய்கின்றனர். தரம் குறைந்த கவுதமலாகேரளா (76 சதவீதம்), கர்நாடகா (16), தமிழ்நாடு (8) என்ற அளவில் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் 'கவுதமலா' ஏலக்காய்க்கு அடுத்து இந்தியாவில் தான் ஏலக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் 70 ஆயிரம் எக்டேர் நிலத்தில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஏல விவசாயத்தை நம்பி பல லட்சம் மேலான குடும்பங்கள் உள்ளன. கவுதமலா நாட்டில் விளைவிக்கப்படும் ஏலக்காய் தரத்தில் குறைவு. விளைச்சல் அதிகம். இதனால் இந்திய ஏலக்காயின் விலையை விட குறைந்துள்ளது. சவுதி அரேபியா போன்ற நாடுகள் இந்தியா மற்றும் கவுதமலா ஏலக்காயை அதிகம் இறக்குமதி செய்து 'கவ்வா' என்ற காப்பி தயாரிக்கின்றனர்.
ஏல உற்பத்தி அதிகரிப்பு : ஏலக்காய் உற்பத்தி 1970- 71 ம் ஆண்டு ஒரு எக்டேருக்கு 40 கிலோவாக இருந்தது. இன்றைக்கு 300 கிலோவாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏலக்காயின் உற்பத்தித்திறன் அதிகமாக உள்ளது தான். இதற்கு முக்கிய காரணம் நல்லாணி, கிருதாளி மற்றும் ஏலராணி போன்ற உயர் ரக ஏலக்காய் சாகுபடி செய்து, தீவிர விவசாயத்தில் ஏல விவசாயிகள் ஈடுபட்டு கொண்டு வருவதேயாகும். ஏற்றுமதியின் மூலமாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவதுடன், அந்நிய செலவாணியையும் ஈட்டித்தருகின்றது. அரிய மருந்துகளை தயாரிக்கவும் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் வனப்பாதுகாப்பிற்கு அரணாகத் திகழ்கிறது என்றாலும் அது மிகையாகாது.
விவசாயிகளின் இன்னல்கள் : ஏலக்காய் சாகுபடிக்கு 60 சதவிகிதம் மரத்தின் நிழலும், 40 சதவிகிதம் மட்டும் சூரிய வெளிச்சமும் தேவை. ஏலக்காய் விவசாயம் எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனத்தைப் பார்க்கலாம். இத்தகைய ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டிற்கு சேவை செய்து வருகின்ற ஏல விவசாயிகள் இன்றைக்கு இயற்கையின் சீற்றத்தாலும், நிரந்தரமற்ற விலையினாலும், அதிகப்படியான உற்பத்தி செலவினாலும் பல இன்னல்களை சந்தித்து கொண்டு வருகின்றனர். ? ஏலக்காய் விலையில் காணும் நிரந்தரமற்ற தன்மையால் விவசாயிகள் பாதிப்பட்டுள்ளனர். ஏலத்தோட்டங்களின் பெய்யும் மழை தான் விலையை நிர்ணயம் செய்கிறது. மழை பெய்தால் விலை கூடும். உற்பத்தி அதிகமாகி தேவை குறைந்தால் விலை குறையும்.கூலி, இடுபொருள் விலை ஏற்றம், உற்பத்தி செலவினை அதிகமாக்குகிறது. எப்போதுமே உற்பத்தி செலவு குறையாது. இதனால் ஏலக்காய் விலை கூடுவதும், குறைவதையும் காண முடிகின்றது. உற்பத்தி விலை உயர்ந்து, விலை குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.மற்ற பயிர்களைப்போல் ஏலக்காயை சாகுபடி செய்ய இயலாது. அது ஒரு நீண்ட காலப்பயிர். பலனை பெற இரண்டு ஆண்டுகளாகும். உற்பத்தி செலவை விட இருமடங்கு ஏலக்காய் விலை உயர்ந்தால் தான் விவசாயிகளால் சமாளிக்க முடியும்.வாசனை திரவிய வாரியம் மூலம் கிடைக்கும் மானியம் மிக குறைவு. விவசாயிகள் இரு ஆண்டு கடன் தொல்லையில் இருந்து மீள, ஏல சாகுபடியின் மூலம் மூன்றாம் ஆண்டும், அதன் பின்பும் கிடைக்கும் வருவாயை எதிர் நோக்கியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளனர்.அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை போன்று ஏலக்காயை கருதாமலிருந்தாலும், இது நாட்டிற்கு உதவிடும் ஒரு பணப்பயிர். இன்றைக்கு வனம் பாதுகாப்பாக அடர்ந்த காடாக காட்சி அளிக்கிறது என்றால், அதற்கு காரணம் ஏலக்காய் தான்.
ஏல விவசாயிகள் ஏக்கம் : ஏலக்காய்க்கு குறைந்தளவு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் அதிகாரத்தை விவசாயிகளுக்கு அளிக்க வாசனை திரவிய வாரியம் அனுமதிக்க வேண்டும். இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஏல விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் அவசியம்.கவுதமலா ஏலக்காயை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தால், ஏல விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.ஏலக்காயை ஒரு விவசாய உணவுப் பொருளாகக் கருதி நாடு முழுவதும் எடுத்துச் சென்று எவ்வித கட்டுப்பாடின்றி விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.நேர்மையான எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஏல முறையை ஏலக்காய் விற்பனைக்கு வாசனை திரவிய வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும்.விண்ணப்பம் செய்கின்ற அனைத்து விவசாயிகளுக்கும் தகுதியின் அடிப்படையில் ஏலக்காய் விற்பனைக்கு வாரியம் அனுமதி வழங்க வேண்டும்.மற்ற பயிர்களை போல் ஏல விவசாயத்திற்கும் தேவையான டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.மங்களூரு 'கேம்ப்கோ' வை போல் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகாவை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கம் துவங்க வாசனை திரவிய வாரியம் முன் வர வேண்டும்.அழுகல், வேர்ப்புழு போன்ற நோய்களில் இருந்து ஏலச் செடிகளை பாதுகாத்து கொள்ள 'துத்தம்' மற்றும் மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும்.ஏல விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். இதில் ஏல விவசாய சங்கங்களின் பங்கு மிகவும் மகத்தானது. ஏல விவசாயிகளின் சங்கங்களை ஒருங்கிணைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

- முனைவர் ப.சிவப்பிரகாசம், பழனிசெட்டிபட்டி, 94439 28966

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X