வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்

Added : அக் 26, 2014 | கருத்துகள் (10)
Advertisement
வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்

இலக்கியம், வரலாறு, பழக்கவழக்கங்கள், கல்வெட்டு, இடப்பெயர் ஆய்வுகளில் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டத்தை அடுத்த திருநாயனார்குறிச்சியில் பிறந்து, கொற்கையில் பாண்டிய மன்னன் வழுதியின் அவையிலே தாம் இயற்றிய திருக்குறளை அரங்கேற்றி, அதை தமிழ் வளர்த்த மதுரையில் அறிமுகம் செய்து பின் சென்னை மயிலை சென்று மறைந்தார் என்பது ஆய்வுகளின் முடிவு.

திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பதை தமிழக அரசின் மாவட்ட குறிப்பேடு மற்றும் தமிழரசு பத்திரிக்கை வெளியிட்டுள்ளன. வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் வரலாற்றை ஆய்வு செய்ததில் இந்த ஆய்வு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வட்டார வழக்கியலில் பேச்சு வழக்கு முன்னிலை வகிக்கிறது. வட்டார பேச்சு வழக்குகளை திசை மொழிகள் என்றும் கூறுவர். ஓர் இடத்தார் அல்லது ஓர் இனத்தார் அல்லது ஒரு கூட்டத்தை சார்ந்தவர்கள் தமக்குள் தங்குதடையின்றி இயல்பாக பேசும் மொழியே திசை மொழி. வட்டாரம் தோறும் மொழிவேறுபாடுகளை காணலாம். இதுகுறித்த ஆய்வை திசை வழக்கியல் என்பர். ஒருவன் பேசும் மொழியை வைத்து அவன் எப்பகுதியை சேர்ந்தவன் என கூறலாம். இந்த அடிப்படையில் எழுந்தது தான், 'உன் பேச்சே உன்னை காட்டி விடும்' என்ற பைபிள் வாக்கு. இதே கருத்தை திருவள்ளுவரும், 'நிலத்தில் கிடந்தமை கால் காட்டும், குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்,' என குறிப்பிட்டுள்ளார்.'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்,' என்பது குறள். அதில் 'தாழ்' என்ற சொல் குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளது.கடலுக்கு அடியில் முத்தெடுக்கும் வழக்கம் தென்பாண்டி நாட்டில் உண்டு. இதை முத்துப்படுகை என்பர். கன்னியாகுமரியிலும், கொற்கையிலும் எடுத்த முத்துக்கள் தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை என்கிறார் குமரகுருபரர். மூச்சை அடக்கி முத்து எடுப்பதை முத்துக்குளியல் என்பர். அதை திருவள்ளுவர், 'களித்தானை காரணம் காட்டுதல் கீர்நீர்க் குளித்தானை தீத்துரீ இயற்று,' என்றார். 'குறியாளிகளை' தான் திருவள்ளுவர் 'குளித்தானை' என்றார்.


குறளில் மீனவர் சொற்கள் :

முட்டம் மீனவர்கள் எலும்பை 'எல்' என்பர். 'எல்' என்ற சொல்லை திருவள்ளுவர், 'என்பு' என்கிறார். அன்புடை அதிகாரத்தில் 'என்பு' என்ற சொல்லை திருவள்ளுவர் நான்கு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். 'அன்பு இலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' 'அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆரூயிர்க்கு, என்போது இயைந்த தொடர்பு' என அறியலாம். மீனவர்கள் பயன்படுத்தும் பல சொற்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கடல் அடியில் காணப்படும் பாறை போன்ற நிலத்தை 'பார்' என மீனவர் குறிப்பிடுவர். இதை 'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார் தாக்கப்பட்டு விடும்' என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.நெடுந்தூரகடலை மீனவர்கள் 'சேல்' என்பர். 'சிறுமை நமக்கொழியச் சேட் சென்றார் உள்ளி, நறுமலர் நாணிககண்' எனவும் 'ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் சேட் சென்றார், வருநாள் வைவத்து ஏங்குபவர்களுக்கு' எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.'மேவல்' என்ற சொல் விரும்புதல் என்ற பொருளிலும், 'மேவன' என்ற சொல் விரும்பியன என்ற பொருளிலும், 'மேவார்' என்ற சொல் விரும்புவோர் என்ற பொருளிலும், 'மேவற்க' என்ற சொல் விரும்பாது விடுக என்ற பொருளிலும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.


நெய்தல் தொழில் செய்தாரா :

அப்பா வரும்... அம்மா பேசும்... என்பது குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கு. இந்த அடிப்படையில் 'இதனை இதனால் இவன் முடிக்கும்,' என குறளில் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர்.கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதை திருவள்ளுவர் 'தூண்டிற்பொன்' என கூறுகிறார்.திருவள்ளுவர் நெய்தல் தொழில் செய்து வந்தார் என்ற கட்டுக்கதை உண்டு. வட்டார வழக்கியல் நோக்கில் திருவள்ளுவர் வரலாறை ஆராய்ந்தால், அவர் நெய்தல் தொழில் செய்யவில்லை. நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என அறியலாம்.


உழவுக்கு முன்னுரிமை :

உழவு, கடல் தொழிலுக்கு வள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், பல்வேறு தொழில்களை குறளில் குறிப்பிடுகிறார். எவ்வளவோ தொழில்களை குறிப்பிடும் திருவள்ளுவர் நெசவு தொழில் பற்றி பாடவே இல்லை. உடுக்கை, உடுப்பது என்ற சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளதால், அவர் காலத்தில் நெசவு தொழில் சிறப்புற்று விளங்கியது என அறியலாம். ஆனால் அத்தொழிலை பற்றி அவர் எங்கும் கூறவில்லை. உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல, வேறு தொழில்களுக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' மற்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்பதிலிருந்து அறியலாம். 'உழவு' என்ற சொல்லை ஆறு இடங்கள், 'ஏர்' என்ற சொல்லை மூன்று இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.


பத்து இடங்களில் கடல் :

கடல் என்ற சொல்லை திருவள்ளுவர் பத்து இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.திருவள்ளுவர் பிறந்த திருநயினார்குறிச்சியின் ஒரு பக்கம் முட்டம் கடல் பகுதி; நெய்தல் நிலம். மறுபக்கம் பெரிய குளம் நீர்பாசனம்; மருத நிலம். வள்ளுவ நாட்டில் நெய்தலும், மருதமும் இணைந்த பகுதியில் திருவள்ளுவர் வாழ்ந்துள்ளார்.குறிஞ்சி, முல்லையும் இணைந்த கிடந்த கூவைமலை பகுதிக்கு திருவள்ளுவர் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலப்பகுதி தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறளில் குறிப்பிடுகிறார்.


நால்வகை நிலங்கள் :

திருக்குறளில் யானை எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. புலி, மான், நரி, முயல், மயில் ஆகியவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நால்வகை நிலங்களில் உள்ள தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் நால்வகை நிலங்களும் உள்ள பகுதி குமரி மாவட்டம்.திருவள்ளுவர் குமரியில் பிறந்து வள்ளுவ நாட்டின் மன்னராக திகழ்ந்து, மகாவீரர், புத்தர் போல துறவியாகி நாட்டையும் வீட்டையும் துறந்து தென்பாண்டி நாட்டின் தலைநகரான கொற்கையில் திருக்குறளை அரங்கேற்றி, மதுரையில் அறிமுகம் செய்து, சென்னை மயிலை சென்று இலுப்பை மரத்தடியில் சமாதியானார் என்பது தான் வரலாறு. இவ்வாறு திருவள்ளுவரின் வரலாறு இன்றைய தமிழகத்தின் தென் எல்லையையும், வட எல்லையையும் இணைத்து நிற்கிறது.வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், மறைந்தது மயிலை என்பதை உறுதி செய்யலாம்.
-முனைவர் எஸ்.பத்மநாபன்,
வரலாற்று ஆய்வாளர்,
பத்திரிகையாளர்,
பொது செயலாளர்,
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம்,
நாகர்கோவில்
94432 75641

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
27-அக்-201419:30:04 IST Report Abuse
Sivagiri நல்ல கற்பனை . . திருக்குறளை உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான அறிஞர்கள் அக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் . . . ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்து ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சரித்திரத்தை கதை திரைக்கதை டைரக்சன் செய்து காண்பிப்பது . . . தான் மட்டும்தான் திருக்குறளை படித்திருப்பவர் போல கருத்துக்களை திணிக்கக்கூடாது . . . material witness இருக்க வேண்டும் . . . .
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Leiden,நெதர்லாந்து
27-அக்-201414:31:20 IST Report Abuse
Dynamo நல்லவேளை திருவள்ளுவர் "நாடார்" இனத்தை சேர்ந்தவர் அல்லது "வேளாளர்" இனத்தை சேர்ந்தவர் என்று சொல்லாமல் விட்டார்கள்.. சொல்லிருந்தால் திருவள்ளுவரை ஜாதி சங்க தலைவராக அறிவித்துவிடும் என் தமிழினம்..
Rate this:
Share this comment
Cancel
Anand - Tirunelveli,இந்தியா
27-அக்-201412:01:59 IST Report Abuse
Anand நம்பிக்கையூட்டும் உங்கள் ஆராய்ச்சி முடிவுகள்......... தொடரட்டும்... வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X