ஹூஸ்டன் : மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை குணப்படுத்த, இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி, டாக்டர் காலித் ஷா என்பவர், ஸ்டெம் செல்களை கண்டறிந்து உள்ளார்.
அமெரிக்காவின், ஹார்வர்டு ஸ்டெம் செல் கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், அங்குள்ள மாசேசூசெட்ஸ் மருத்துவமனையில், டாக்டர் காலித் ஷா தலைமையில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பரிசோதனைகளில், புற்றுநோய் செல்களை கொல்லும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஸ்டெம் செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த ஸ்டெம் செல், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை கொல்வதுடன், நல்ல நிலையில் உள்ள செல்களை பாதிக்காத வகையில் உள்ளது. புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில், இந்த ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டாக்டர் காலித் ஷா, ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர். ஸ்டெம் செல் ஆராய்ச்சி என்பது, தொப்புள் கொடியில் உள்ள செல்களை அடிப்படையாக வைத்து, புதிய செல்களை தயாரிக்கும் அதிநவீன தொழில்நுட்பம்.