சொல்கிறார்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : அக் 27, 2014
 சொல்கிறார்கள்

விவசாயிக்கு கை கொடுக்கும் கருணை!
ஒரே தண்ணீர், ஒரே பராமரிப்பில் இரண்டு பயிர்களுடன் இரட்டை லாபமும் ஈட்ட வழிகாட்டும் விவசாயி காந்தி: தஞ்சாவூர் அடுத்த வளப்பக்குடியை சேர்ந்தவன் நான். விதைப்பதற்கு முன் வயலை நன்கு தயார் செய்ய வேண்டும். பின் புழுதி அடித்து சமப்படுத்தி, பாத்திகள் பிரித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பிரித்த பின், முதலில் கருணைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.கருணைக்கிழங்கை பொறுத்தவரை, நல்ல விதை கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும்; பூச்சித் தாக்குதலும் குறைவாக இருக்கும். அதைப் போலவே, பார் பிரித்து, வெங்காயத்தை ஊடு பயிராக நடவு செய்ய வேண்டும். வெங்காயம் 60 நாள் பயிர். இது குறைந்த நாட்களில் நிறைந்த லாபம் தரக்கூடியது. வெங்காயத்தை பொறுத்தவரை, வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. அவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில், வெங்காயம் அழுகி விடும். வெங்காயம் வயலில் இருக்கும் நேரத்தில், கருணைக் கிழங்குக்கு என, தனியாக பராமரிப்பு செய்ய தேவையில்லை.வெங்காயத்திற்கு விடும் தண்ணீர் மற்றும் இடு பொருள்களை கொண்டே கருணைக் கிழங்கு நன்றாக வளர்ந்து விடும். வெங்காயத்தை அறுவடை செய்த பின், கருணைக் கிழங்கு மட்டும் வயலில் இருக்கும். அப்போது கருணைக் கிழங்குக்கு ஒரு களை கொத்தி விட வேண்டும். அப்போது இருக்கும் பயிர்களின் ஊக்கத்திற்கு ஏற்ப, ஏதேனும் இடுபொருள் இடலாம்.கருணைக் கிழங்குக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. தண்ணீர் அதிகம் தேவையில்லாத பயிர். அதேபோல வெங்காயத்திற்கும், அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரே நேரத்தில் ஒரே தண்ணீரை பயன்படுத்தி, இரண்டு பயிர் செய்வதால் இரட்டை லாபம் ஈட்ட முடியும். வெங்காயம், 60 நாளில் அறுவடைக்கு வரும். அப்போது நாம், 5 டன் வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.அதன்பின் ஆறு மாதம் கழித்து, கருணைக் கிழங்கை அறுவடை செய்யும் போது, 12 டன் வரை கருணைக் கிழங்கு கிடைக்கும். கருணைக் கிழங்குக்கு இப்போது நல்ல சந்தை இருக்கிறது. அதனால் விற்பனை குறித்த பயம் இல்லை. அதேபோல தண்ணீர் பிரச்னை, பூச்சி தாக்குதல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் கூட, எப்படியாவது தாக்குப்பிடித்து கை கொடுப்பதில் கருணை, விவசாயிக்கு நல்ல நண்பன். கருணை மூலமாக மட்டும், ஏக்கருக்கு ஒரு பருவத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். வெங்காயம் மூலமும் லாபம் ஈட்டலாம். கருணை, விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்புக்கு: 99761-08280

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X