வரவு எட்டணா; செலவு பத்தணா: இன்று உலக சிக்கன தினம்| Dinamalar

வரவு எட்டணா; செலவு பத்தணா: இன்று உலக சிக்கன தினம்

Updated : அக் 30, 2014 | Added : அக் 29, 2014 | கருத்துகள் (2)
வரவு எட்டணா; செலவு பத்தணா: இன்று உலக சிக்கன தினம்

நடுத்தர குடும்பங்களில் நுகர்வுக் கலாசாரத்தின் தாக்குதலால், பலர் எது ஆடம்பரம், எது கருமித்தனம், எது சிக்கனம் என்று தெரிந்து கொள்ளாமல் வாழ்வில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்; எந்த திட்டமும் ஒழுங்கும் இல்லாமல் வாழ்க்கையைக் கடனிலும் கவலையிலும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ஆடம்பரம், சிக்கனம், கருமித்தனம் ஆகியவற்றை இப்படி கூறுவார்.
1. தேவைக்கு மேல் செலவு செய்வது ஆடம்பரம்.
2.தேவைக்குச் செலவு செய்யாதது கருமித்தனம்.
3. தேவையின் அளவு செலவு செய்வது சிக்கனம்.

ஆடம்பரம், கருமித்தனம், சிக்கனம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்துகொண்டு செயல்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் களிநடம் புரியும்.


வாரியார் கதை :


இதனை உணர்த்தும் வகையில் வாரியார் கூறும் ஒரு சின்னஞ்சிறு கதை:வயலில் ஒரு கிழவர் மகிழ்ச்சியாக உழுது கொண்டிருந்தார். கிழவரின் மகிழ்ச்சியைப் பார்த்து அந்த வழியே வந்த மன்னனுக்கு வியப்பு.கிழவரைப் பார்த்து, “நாள் முழுவதும் உழுதால்; உனக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்?” என்று கேட்டான் மன்னன்.
“எட்டணா” என்றார் கிழவர்.
“இவ்வளவு குறைந்த கூலியா? இதை வைத்துக்கொண்டு நீ எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?” வியப்பின் விளிம்பில் வினவினான் மன்னன்.
“எட்டணாவில், இரண்டணா குடும்பத்திற்குச் செலவழிக்கிறேன். இரண்டணா பழைய கடனுக்குத் தருகிறேன். இரண்டணா தர்மம் செய்கிறேன். இரண்டணா வட்டிக்குத் தருகிறேன்” என்றார் கிழவர்.
“எப்படியப்பா இதில் மிச்சம் பிடித்துத் தருமத்திற்கும் வட்டிக்கும் தருகிறாய்?” என்று கேட்டான் மன்னன்.கிழவர் விளக்கினார்.
“எனக்கும் மனைவிக்கும் இரண்டணா செலவழிகிறது; இது என் குடும்பச் செலவு! எனக்கு மிகவும் வயதான தாயும் தந்தையும் இருக்கிறார்கள். இளமையில் உணவும் உடையும் கொடுத்து என்னைக் காப்பாற்றிய அவர்களுக்காக இரண்டணா செலவாகிறது. அது பழைய கடன். என் தங்கை ஆதரவு இன்றி என் வீட்டில் வாழ்கிறாள்; அவளுக்கு இரண்டணா செலவாகிறது. அது தருமம். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொருட்டு இரண்டணா செலவழிகிறது. அது வட்டிக்குத் தருவது. பிற்காலத்தில் அவர்கள் என்னைக் காப்பாற்றுவார்கள்?”
இந்தப் பொருள் பொதிந்த சொற்களைக் கேட்டு அரசன் ஆச்சரியம் அடைந்தான். இது வெறும் கதையல்ல. வாழ்க்கைப் பாடம்; அனுபவக் கல்வி.


பூவிலே சிறந்த பூ:


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெண்கள் கூட்டம் ஒன்றில் அவர்களைப் பார்த்து கேட்டார்:“நீங்கள் எல்லோரும் பூ வச்சிருக்கீங்க. அதனாலேயே பெண்களுக்குப் பூவையர்னு பேரு. இந்தப் பூக்கள் எல்லாம் இன்னக்கி வச்சா நாளைக்குத் தூக்கி எறிய வேண்டிய பூக்கள். வாடாமல் வளரும் பூவே சிறந்த பூ. அது என்ன பூன்னு சொல்லுங்க?”
பலரும் விழித்தனர். ஒரு பெண்ணுக்குத் திடீர் என்று நினைவு வந்தது. கேட்பவர் நகைச்சுவை அரசர். ஆகையால் தைரியமாகச் “சிரிப்பூ” என்றார்.
கலைவாணர் சிரித்தார். சரியான விடை கூறிவிட்டதாகக் கருதி அந்தப் பெண்ணும் கூடச் சிரித்தார். கூட்டத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள்.

“பார்த்தீங்களா, இதுவும் ஓரளவுக்கு வளரும் பூதான். ஆனா தொடர்ந்து வளராது. இதோ இப்ப பேச ஆரம்பிச்சதும் நின்னிருச்சு. நிற்காம, தடைப்படாம, வளர்ந்துகிட்டே இருக்கிற பூ சேமிப்பூ தான். ஓரளவு நீங்க சேமிப்புச் செய்துவிட்டு அப்படியே விட்டுட்டாக்கூட வட்டியின் மூலம் அது வளர்ந்துகிட்டே இருக்கும். நீங்க தூங்கினாலும் அது தூங்காது. ஆகையால் சேமிப்பூ தான் சிறந்த பூ. பெண்களாகிய நீங்கள் சேமிக்கத் தொடங்கணும்கிறதை வற்புறுத்தத்தான் இந்தக் கூட்டம்'' என்றார் கலைவாணர்.


சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு :


நபிகள் நாயகத்திடம் ஒரு பெரியவர் வந்து, “எங்கள் ஊரில் பள்ளிவாசல் இல்லை. அதை கட்ட பணம் தேவை. என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம், “பக்கத்து ஊரில் உள்ள ஒரு செல்வரின் பெயரைச் சொல்லி அவரிடம் கேளுங்கள், கொடுப்பார்” என்றார்.

பெரியவர், பணக்காரரைப் பார்க்கப் போனார். அப்பொழுது பணக்காரர் வேலையாளைத் தூணில் கட்டி வைத்து அவன் முகத்தில் குத்திக் கொண்டிருந்தார்.
“செல்வர் அந்த வேலையாளைப் பருப்பு வாங்கி வரச் சொன்னார். வழியில் பத்து பருப்பு சிந்திப் போயிற்று. அதற்காக அவனைப் பத்து குத்துக் குத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்கள் பக்கத்தில் நின்றவர்கள். அதைக் கேட்டதும் பெரியவர் பயந்து ஓட்டம் பிடித்து நபிகள் நாயகத்திடம் வந்துவிட்டார்.

நபிகள் நாயகம் “செல்வர் என்ன கொடுத்தார்?” என்று கேட்டார். அவர் வேலையாளுக்குக் கொடுத்த குத்துக்களைக் கூறினார்.

நபிகள் நாயகம், “மறுபடியும் நீர் அவரிடம் சென்று கேளும்” என்று கட்டளை இட்டார். மறுபடியும் சென்ற போது அச்செல்வர் மற்றொரு வேலையாளை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருந்தார்.

“இந்த வேலையாள் எண்ணெய் வாங்கி வரும் போது வழியில் பத்துச் சொட்டு எண்ணெய் சிந்திப் போயிற்று. அதற்காகச் சவுக்கால் பத்து அடிகள் அடிக்கிறார்” என்று அங்கு சொன்னார்கள்.

பெரியவர் நடுங்கி, இக்கருமியிடம் பணம் கேட்பதை விட பள்ளிவாசல் கட்டுவதை நிறுத்திவிடலாம் என்று எண்ணி நபிகள் நாயகத்திடம் ஓடிவந்து விட்டார்.அவர் சவுக்கடி கொடுத்த செய்தியைக் கூறி “அவரிடம் பணம் கேட்க என் மனம் துணியவில்லை” என்று கூறினார். “போய்க் கேளும்” என மறுபடியும் உத்தரவு வந்தது. பெரியவர் மறுபடியும் செல்வரிடம் சென்றார்.

நல்ல வேளையாக அங்கு அப்பொழுது எதுவும் நடைபெறவில்லை. பெரியவர் துணிந்து தமது நோக்கத்தைத் தெரிவித்தார். செல்வர், “எவ்வளவு ரூபாயில் பள்ளிவாசல் கட்டப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “அதை கட்ட பத்தாயிரம் ரூபாய் ஆகும். நீங்கள் ஐந்தாயிரம் கொடுத்தால் வேறு சிலரிடம் ஐயாயிரம் வாங்கி கட்டி முடிக்க உதவியாக இருக்கும்” என்றார். அதற்குச் செல்வர், “இவ்வளவு காலம் பள்ளிவாசல் இல்லாமல் இருந்ததே தவறு. இன்னும் பலரிடம் சென்று காலம் தாழ்த்த வேண்டாம். நானே பத்தாயிரமும் தருகிறேன். இதற்கு உதவாமல் என்னிடம் பணம் எதற்காக இருக்கிறது?” என்று கூறி பெரியவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பினார்.

பெரியவர் மனக்குழப்பத்தோடு நபிகள் நாயகத்திடம் வந்து, “பத்துப் பருப்புச் சிந்தியதற்காகவும், பத்துச் சொட்டு எண்ணெய் சிந்தியதற்காகவும் வேலைக்காரர்களை துன்புறுத்திய இவர், பள்ளிவாசல் கட்ட ஐயாயிரம் கேட்ட பொழுது பத்தாயிரம் கொடுத்தாரே. என்ன காரணம்?” என வினவினார் பெரியவர்.

அதற்கு நபிகள் நாயகம், “கருமித்தனம் வேறு, சிக்கனம் வேறு. அந்த செல்வர் கருமியல்ல; சிக்கனத்தைக் கையாள்பவர். அவர் அப்படியெல்லாம் பொருளை பாழாக்காமல் சேர்த்து வைத்திருந்ததனால் தான் அப்பணம் பள்ளிவாசல் கட்ட பயன்படுகிறது” எனத் தெளிவுபடுத்தினார்.
வரவு எட்டணா - செலவு பத்தணா என்றால், அது மிகை; ஆடம்பரம்!வரவு எட்டணா - செலவு எட்டணா என்றால், அது இயல்பு; சரி.வரவு எட்டணா - செலவு ஆறணா என்றால், அது தான் சேமிப்பு; சிக்கனம்!
- பWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X