”என்னடி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே, அதைப்பத்தி சொல்ல வர்றீயா,'' என, கேள்வி எழுப்பினாள் சித்ரா.
”ஆமாக்கா, 2011ல் நடந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட காயத்தை இன்னும் யாரும் மறக்கலை. வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்தே, அதிகாரிகள் உஷாராகிட்டாங்க. கனமழை பெஞ்சா போதும்; வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, குளம், குட்டைகளுக்கு ஒரு "ரவுண்ட்' அடிச்சிட்டு போறதை, நம்மூர் கலெக்டர் வழக்கமாக வச்சிருந்தார். போன சனிக்கிழமை, சங்கிலிப் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுச்சுல்ல. அன்னைக்கு அமைச்சர், கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் நொய்யல் வழித்தடத்தை போய் பார்த்தாங்க. வெள்ளம் வழிந்தோட வழியிருக்கா என ஆய்வு செஞ்சாங்க... மாநகராட்சி தரப்புல சங்கிலிப் பள்ளத்தையும், ஜம்மனைப் பள்ளம் ஓடையையும் ஏற்கனவே தூர்வாரி இருந்ததுனால, கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படலை. இருந்தாலும், சில ஏரியாவுல வீட்டுக்குள் தண்ணி புகுந்துடுச்சு.
”வழக்கமா, வெள்ளம் புகுந்தா, தாசில்தார் மட்டும் ஆய்வு செய்வார். இந்த தடவை, டி.ஆர்.ஓ., - டெபுடி கலெக்டர், சப்-கலெக்டருன்னு எல்லோரும் ராத்திரி முழுவதும், "ரவுண்ட்ஸ்'ல இருந்தாங்க. மினிஸ்டரும், கலெக்டரும் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒருமுறை விசாரிச்சுட்டே இருந்திருக்காங்க. ஞாயிற்றுக்கிழமை நல்லபடியா விடிஞ்சது,'' என்று முடித்தாள் மித்ரா.
”இருந்தாலும், வெள்ளியங்காடு பகுதி மக்களுக்குத்தான் ரொம்ப வருத்தமாம்...'' என்று புதிர் போட்டாள் சித்ரா.
”அங்கதான் பிரச்னையே இல்லையே... அப்புறம் என்ன?,'' என்று புருவத்தை உயர்த்தினாள் மித்ரா.
”பிரச்னை இல்லை. டி.ஆர்.ஓ., பேசுற விதம் சரியில்லைன்னு லேசா மன வருத்தம். அதாவது, வெள்ளியங்காடு பாலம் தண்ணியில் மூழ்கிடுச்சு... அதை டி.ஆர்.ஓ., பார்த்துட்டு இருந்தப்ப, பாலம் கட்ட டெண்டர் விட்டாச்சுனு சொல்லி மூணு மாசமாச்சு; இன்னும் வேலை ஆரம்பக்கலைன்னு சொல்றதுக்காக அந்த ஏரியாக்காரங்க வந்திருக்காங்க. தண்ணி ஓடுற பக்கமா மக்கள் வந்திருக்காங்க. அதைப்பார்த்த டி.ஆர்.ஓ., ”போமா அந்தப்பக்கம்... ஏய்... எல்லாரும் போங்க அந்தப்பக்கம்... ஏம்ப்பா... போப்பா... சொன்னா கேட்கமாட்டீயா...'' என்றெல்லாம் கை நீட்டி சத்தம் போட்டிருக்கார்.
”நம்ம பிரச்னையை சொல்லலாமுனு போனா... தர்மபுரிக்காரருக்கு இவ்ளோ கோபம் வருது... ஏய்... ஓய்...னு சத்தம் போடுறாரேன்னு, அங்கிருந்த பெண்கள் டென்ஷன் ஆகிட்டாங்க. இந்த நேரத்துல எதுவும் பேச வேணாமுனு வருத்தத்தோட கலைஞ்சு போயிட்டாங்க. வெள்ளம் போயிட்டு இருக்கற ஓடை பக்கமா மக்கள் வந்ததால, டி.ஆர்.ஓ., பதற்றமாகி சொல்லியிருப்பார்... அதை மக்கள் தப்பா புரிஞ்சிருப்பாங்க...'' என முடித்தாள் சித்ரா.
வெள்ளப்பெருக்கு வந்தன்னைக்கு இன்னொரு சம்பவமும் நடந்துருக்கு என அடுத்த மேட்டருக்கு தாவிய மித்ரா, "போலீஸ்காரங்களும் ராத்திரி முழுவதும் தூங்கலை. 2011ல் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, போலீஸ் கமிஷனரும், துணை கமிஷனரும், ஒவ்வொரு குட்டையா போயி பார்த்தாங்க. கரையோரமா மக்கள் வசிக்கிற பகுதியையும் பார்த்தாங்க. வருவாய்த்துறையினரை நம்ப பிரயோஜனமில்லை. நீங்க, எல்லோரும் பணியாற்றணும்னு போலீஸ்காரங்க அத்தனை பேரையும் வரவழைச்சிட்டாங்க. நைட் 10.00 மணிக்கு மேல, ஒவ்வொரு போலீசாருக்கும் ஒவ்வொரு ஏரியா பிரிச்சுக் கொடுத்துட்டாங்க. இரவு முழுவதும் விழிச்சிருந்து, தண்ணீர் வர்ற பகுதியில் பொதுமக்கள் சிக்கிடாம பாதுகாத்தாங்க,'' என்றாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE